திங்கள், 1 மே, 2017

ஸ்டாலின் மேதின உரை : அமைச்சர்கள் அதிகாரிகள் மீதான வருமான வரி சோதனைகள் என்னாச்சு?

தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகளின் விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்று, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக-வின் தொழிற்சங்கமான தொ.மு.சங்கம் சார்பில் மே தின விழா இன்று (1.5.2017) கொண்டாடப்பட்டது. மே தின பூங்காவில் அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து இன்று காலை மே தின பூங்காவுக்கு வந்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
தொழிலாளர்கள் நினைவுத் தூணுக்கு மலர் தூவி மரியாதை செய்த ஸ்டாலின், பூங்காவில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘இந்த மே தின பூங்காவைக் கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மே தின விழாவை இந்தியா முழுக்க கொண்டாடச் செய்தவர் கருணாநிதி. இப்போது தொழிலாளர்கள் நலனில் அக்கறையில்லாத ஆட்சி நடக்கிறது. விவசாயிகள் மாதக் கணக்கில் போராடுகிறார்கள்.
அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் டெல்லி சென்று ஆதரவைத் தெரிவித்தேன். அதன்பிறகே அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் அதிமுக, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. அதன்பின்னர், கடந்த 25ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்திய அளவில் இப்படி ஒரு போராட்டம் நடந்தது இல்லை. முழு வெற்றியைப் பெற்றோம். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயத் தொழிலாளர்கள்மேல் அக்கறை காட்டி அவர்களின் நலன் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தொழிலாளர் உரிமைக்காக பாடுபட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. மே 1ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக ஆட்சியில்தான். மேலும் இந்தியாவிலேயே மே 1ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க முயற்சி எடுத்தவர் கருணாநிதிதான்.
தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது, தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையின் பின்புலம் என்ன?. முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், விஜயபாஸ்கர், அன்புநாதன், சைதை துரைசாமி வீடுகளில் நடந்த சோதனையின் விவரங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை? அதேபோன்று, சோதனையில் கண்டுபிடித்தது என்ன என்பதற்கெல்லாம் பதில் அளித்தால் அதிமுக-வின் பின்னணியில் பாஜக இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் மாநில சுயாட்சியில் பாஜக தொடர்ந்து தலையிட்டு வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: