புதன், 3 மே, 2017

தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்!

மதுரையில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்!
மதுரை அரசு மருத்துவமனையில் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து, நீட் தேர்வு கட்டாயமாக்கியது குறித்தும் மூன்றாவது வாரமாக அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மே 3ஆம் தேதி இன்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்வதை நிறுத்துவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரையில் 53 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களும். 6 அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 920 மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 550 பேர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் 3 ஆயிரம் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், வேலையைப் புறக்கணித்து பெரும்பாலான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவர்களுக்குப் பதிலாக செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறியதாவது, ‘மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 75 அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. அதை இன்று மே 3ஆம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
மதுரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: