செவ்வாய், 2 மே, 2017

காஷ்மீரில் வன்முறை வெடித்தது : இடைத்தேர்தல் ரத்து!

காஷ்மீரில் வன்முறை வெடித்தது : இடைத்தேர்தல் ரத்து!மின்னம்பலம் : காஷ்மீரில் வன்முறை வெடித்ததையடுத்து, அனந்த்நாக் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் இன்று மே 2ஆம் தேதி மீண்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா வெற்றி பெற்று எம்.பி.யானார். இந்நிலையில், திடீரென மெகபூபா முப்தி, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலமைச்சராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, அனந்த்நாக் எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென அறிவித்தது. ஆனால் அனந்த்நாக் எம்.பி. தொகுதியில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை மே மாதம் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், அனந்த்நாக் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் மீண்டும் ரத்து செய்து இன்று மே 2ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததால் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது. காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது, மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எதிராக கல்வீச்சுத் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்களை அனுப்பும்படி தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகமோ படை வீரர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்தலை ரத்து செய்வதற்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் 10 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இருமுறை தள்ளிப்போன அனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தல் அடுத்து எப்போது நடைபெறும் என்று பொதுமக்கள் மட்டுமன்றி அனைத்துக் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்

கருத்துகள் இல்லை: