வியாழன், 4 மே, 2017

சேலத்தில் தண்ணீர் 500 மாடுகள் உயிரிழந்தன!

சேலத்தில் தண்ணீர் இன்றி உயிரிழந்த 500 மாடுகள்!
மின்னம்பலம் : சேலம் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தண்ணீர், தீவனம் இன்றி 500 மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது. விவசாயம் செய்வதற்காக விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல் கடன் தொல்லைக்குள்ளாகி உள்ளனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் நிலவும் வறட்சியின் கோரப்பிடி மேலும் இறுகிவரும் சூழலில், மாநிலம் முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. காவிரி நிலைகொள்ளும் மேட்டூர் அணை அமைந்திருக்கும் சேலம் மாவட்டமும் கடும் வறட்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபாடி, எமனூர், கோபிநத்தம், ஜம்புருட்டிப்பட்டி, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் பசுமையானவை. ஆனால் வறட்சி காரணமாக இந்த கிராமங்களில் உள்ள மரங்கள் எல்லாம் வெறும் விறகாகி நிற்கின்றன. அருகாமையில், உள்ள குடிநீர் நிலைகள் வறண்டுவிட்டன. இந்த கிராமத்து ஆண்களும் பெண்களும் வெகுதொலைவுக்குச் சென்று குடிநீர் கொண்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த 25 நாட்களில் சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோவிந்தபாடி, எமனூர், கோபிநத்தம், ஜம்புருட்டிப்பட்டி, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் காளைகள், எருதுகள், பசுக்கள் என 500க்கும் மேற்பட்ட மாடுகள் தண்ணீர், வைக்கோல், புல், தீவனம் இன்றி உயிரிழந்துள்ளன. உழவுக்குப் பயன்படுத்தும் எருதுகளும் கறவை பசுக்களும் உயிழந்துள்ளதால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் இன்றி வைக்கோல் தீவனம் இன்றி 500க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்திருப்பது குறித்து கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், ‘என்னிடம் 32 பசுக்கள் இருந்தன. அதில், இந்த ஒரு வாரத்தில் 8 பசுக்கள் வறட்சியால் குடிக்க தண்ணீர் இல்லாமல் இறந்துவிட்டன. வைக்கோல், புல், தண்ணீர் இல்லாமல் இன்னும் 10 பசுக்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. அதுவும் எந்தநேரத்திலும் இறந்துபோகலாம். பெரும்பாலான கிராமங்களில் இருந்த பசுக்கள் கடந்த 25 நாட்களில் இறந்துவிட்டன. நாங்கள் இந்த மாடுகளைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியவில்லை’ என சோகத்துடன் கூறினார்.
அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் கூறுகையில், ‘மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காமல் வெகுதொலைவு நடந்து சென்று ஒரு குடமோ, இரண்டு குடமோ தண்ணீர் எடுத்து வருகிறார்கள். எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லாதபோது மாடுகளை எப்படி நாங்கள் காப்பாற்ற முடியும்?’ என்று கிராமத்தவர்களின் பரிதாப நிலையைக் கூறினார்.
இப்படி தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் இறந்துவருகின்றன. இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு கால்நடைகள் பராமரிப்புத் துறை செயலர் ககன்தீப் சிங்கிடம் கேட்டபோது, அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில், ‘வறட்சியிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.78 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், புல், தீவனம் ஆகியவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையானவர்கள் அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்களை அணுகலாம்’ என்று கூறினார்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கால்நடைகளின் வைக்கோல் தேவையை அறிந்த பல வியாபாரிகள் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வந்து, மிகக் குறைந்த விலைக்கு வைக்கோல்களை வாங்கி அதை தங்கள் ஊர்களுக்கு லாரிகளில் ஏற்றிச் சென்று 5 மடங்கு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வைக்கோல் விலையும் அதிரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: