செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அதிமுக இரு அணிகளின் பேச்சு வார்த்தை முறிந்தது! பன்னீருக்கு முதல்வர் பதவி தரமுடியாது ... பாஜகவின் கனவு தவிடுபொடி?


முதல்வர் பதவி கேட்கிறார்  பன்னீர்செல்வம் : வெற்றிவேல்  ...
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால் தனக்கு முதல்வர் பதவி உள்பட, தன் அணியினருக்கு 6 முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக சசிகலா அணி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி (இன்று) அடையாறிலுள்ள தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.,வெற்றிவேல், 'ஏப்ரல் 17ஆம் தேதி (நேற்று) பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்கிறேன். அவர்கள் அணியுடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த விரோதமுமில்லை. ஆனால் ஏப்ரல் 18ஆம் தேதி (இன்று) அவர் பேசியுள்ளதன்மூலம் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. மாற்றி மாற்றி பேசும் இவர்களை நம்பிச்சென்றால் கட்சி நடுத்தெருவில் நின்றுவிடும். நாங்கள் யாரிடமும் மண்டியிடவேண்டிய அவசியமில்லை.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடும் கூட்டம்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக் கூட்டம். நேற்றிரவு அமைச்சர்கள் நடத்திய கூட்டம், தினகரனுக்குத் தெரியாமல் நடைபெற்றதாகும். அமைச்சர்கள் அவர்களாகவே பேசி தனியாக முடிவெடுக்க முடியாது. பன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு எதுவும் அமைக்கப்படவில்லை.
இரு அணிகளையும் இணைக்க வேண்டுமானால் தனக்கு முதல்வர் பதவியும் தன்னுடைய அணியினருக்கு, உள்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, என ஆறு துறைகள் வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். 11 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் அவர்கள் இறங்கி வரவேண்டுமா? இல்லை 122 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் நாங்கள் இறங்கி வர வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். மேலும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனுமே தொடர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றிவேல் தெரிவித்துள்ள இந்தக் கருத்தால் இரு அணிகளும் இணைவதில் சற்றே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: