செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அதிமுக அணிகளின் பேச்சும் முறிவும் ... மீண்டும் வேதாளங்கள் .. நாக்கை தொங்கபோட்டு காத்திருக்கும் பாஜக..

டிஜிட்டல் திண்ணை:பன்னீர் பக்கம் அமைச்சர்கள்... ஆட்சியை  ...‘சித்திரை முதல்நாளில் அதாவது, ஏப்ரல் 14ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் சொன்ன விஷயத்தில் இருந்து தொடங்குகிறேன். ’தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள்’ - இதுதான் அன்று நாம் டிஜிட்டல் திண்ணைக்கு வைத்திருந்த தலைப்பு. "சித்திரை முதல் நாளில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக டிடிவி தினகரன் வீட்டுக்கு வந்தார்கள். அமைச்சர்களைத் தொடர்ந்து தம்பிதுரையும் வந்தார். முதலில் எல்லோரும் தினகரனுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் ஆரம்பித்திருக்கிறார். 'உங்களோடு அதிகப்படியான தொடர்பில் இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரெய்டு போனாங்க. அவரால் இன்று கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வந்திருக்கு. அவரை இப்போதைக்கு அமைச்சரவையிலிருந்து நீக்கி வைக்கணும். அப்போதான் நம்ம மேல இருக்கும் கெட்ட பெயரை மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் நீங்களும்கூட துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினால் அது கட்சிக்கு இன்னும் பலம் சேர்க்கும். வெளியில் இருந்து நீங்க என்ன சொல்றீங்களோ அதையெல்லாம் கேட்க நாங்க தயாரா இருக்கோம்' என்று சொல்ல... அதிர்ந்துவிட்டாராம்.
தினகரனோ, 'நான் வெளியில் வந்துட்டா நடக்குற பிரச்னை எல்லாம் சரியாகிடுமா? நான் இருக்கிறதாலதான் எல்லோரும் கட்டுக்கோப்பா இருக்காங்க. நான் பொறுப்பில் இல்லாமல் என்ன சொன்னாலும் அது எடுபடாது' என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு தம்பிதுரை பேசியிருக்கிறார். ' இருக்கிற பிரச்னையை எப்படி சரி செய்யுறதுன்னுதான் பார்க்கணும். இப்போ யாரையும் பதவியை விட்டு தூக்குறது தீர்வாக இருக்காது. எப்போ நமக்குள்ள அடிச்சுக்குவோம்... ஆட்சி எப்போ கலையும்னு சிலர் பார்த்துட்டு இருக்காங்க. அதுக்கு நாமே வழிவகுத்து கொடுத்துடக் கூடாது. நமக்குள்ள இந்த நேரத்துல ஒற்றுமைதான் முக்கியம்' என்று, தம்பிதுரை சொல்லியிருக்கிறார்’ -இதுதான் நாம் அன்று டிஜிட்டல் திண்ணையில் சொன்ன விஷயத்தின் சாராம்சம்.

தற்போது உள்ள அதிமுக அம்மா அணியில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எதிராக அமைச்சர்கள் மறைமுகமாக பேசி வந்தாலும், யாரும் நேரடியாக எதிர்த்தது இல்லை. சித்திரை முதல் நாளில்தான் அந்த நேரடி எதிர்ப்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. மேற்கு மாவட்ட அமைச்சர் ஒருவர்தான் தினகரனுக்கு எதிராக அந்த நாளில் முதலில் தைரியமாகப் பேசினார் என்று நாம் குறிப்பிட்டு இருந்தோம். அந்த மேற்கு மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் இணைந்து பேசித்தான் அந்த விஷயத்தை தினகரனிடம் தைரியமாகச் சொன்னார்கள். தங்களது ஆதரவு அமைச்சர்கள் இப்படி போர்க்கொடி தூக்குவார்கள் என்று தினகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்ப்புக்கு சில நாட்களுக்குமுன்பு பன்னீர் அணியில் இருக்கும் ஒருவர் அமைச்சர்கள் சிலரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘பன்னீர் அண்ணனை பொருத்தவரைக்கும் உங்க யாரையும் அவரு எதிரியாக பார்க்கவும் இல்லை. நினைக்கவும் இல்லை. அம்மா இருந்தவரைக்கும் சசிகலா எப்படியெல்லாம் நம்மை ஆட்டிப் படைச்சாங்கன்னு உங்களுக்கே தெரியும். இப்போ அந்த வேலையை தினகரன் செய்யுறாரு. இனியும் நீங்க எல்லோரும் அவருக்கு அடிமையாதான் இருக்கணுமா... இப்படியே போயிட்டு இருந்தா மிச்சம் இருக்கும் 4 வருசம் நீங்க ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியை கலைக்கிறதுக்கு வெளியில இருந்து யாரும் வர வேண்டாம். தினகரனும், விஜயபாஸ்கருமே போதும். நாம எல்லோரும் ஒன்றா சேர்ந்து செயல்படலாம். அதுக்கு தினகரனும், சசிகலாவும் கட்சியில் இருக்கக் கூடாது. அதை நீங்கதான் பேசி முடிவு செய்யணும். அப்படி அந்தக் குடும்பத்தை வெளியேற்றிட்டா நாங்க எல்லோரும் உங்ககூட வரத் தயாரா இருக்கோம்...’ என்று சொல்லியிருக்கிறார். அதைத்தான் அன்றைய சந்திப்பில் அமைச்சர் வேலுமணி வெளிப்படையாகவே பேசினார். அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

பிறகு வேலுமணியும், தங்கமணியும் நேரடியாகவே பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்கள். அப்போது பன்னீர்செல்வம், ‘சசிகலா குடும்பத்தை வெளியே அனுப்புங்க. நாமா ஒன்றா இணையுறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல’ என்று சொல்லவும், அடுத்த ஆக்‌ஷன் ஆரம்பமானது.
நேற்று இரவு அமைச்சர்கள் திடீர் மீட்டிங் போட்டபோது, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரைத் தவிர மற்ற எல்லோருமே வந்துவிட்டார்கள். ஒவ்வொரு அமைச்சர்களும், அவர்கள் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேசி அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஏற்பாடுகளை செய்துவிட்டனர்.
அமைச்சர்கள் ஒருபக்கம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அதேநேரத்தில், வெற்றிவேல், தளவாய் சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய சகாவான சேலம் இளங்கோவன் உள்ளிட்ட சில நிர்வாகிகளுடன் தினகரன் ஒருபக்கம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தினகரன், ‘என்ன நினைப்புல இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு தெரியலை. பாஜக-வுடைய அடியாட்கள் மாதிரி பன்னீர் செயல்படுறாரு. அம்மா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர உருவாக்குவதே பன்னீர்தான். அந்த பன்னீரோட சேர்ந்துட்டு ரெண்டு அமைச்சர்கள் மட்டும் ஆடுறாங்க. இரட்டை இலையை மீட்க நாம் பணம் கொடுத்ததா பிஜேபி பொய்யா செய்தி பரப்புது. இதற்கெல்லாம் காரணமான பன்னீரைக் கெஞ்சி, சமாதானமா போறதவிட தேர்தலை சந்திக்கிறதே அம்மாவுக்கு செய்யுற புண்ணியமா இருக்கும்’ என்று, தினகரன் சோகத்துடன் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆலோசனையை முடித்துவிட்டு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தினகரன் வீட்டுக்கு வெளியே வந்தவர், ‘122 எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் இருக்கிறோம். 12 எம்.எல்.ஏ.க்களிடம் போய் நாங்கள் சமாதானம் பேசுவதா? அமைச்சர்களுக்கு நாலு கொம்பா? எம்.எல்.ஏ.க்களுக்கு ரெண்டு கொம்பா? ஜெயக்குமாருக்கு பேசச் சொல்லி யாரு அதிகாரம் கொடுத்தது?’ என்று, சகட்டுமேனிக்கு பத்திரிகையாளரிடம் விளாசித் தள்ளினார். இந்த தகவல் அமைச்சர்களுக்கும் தெரியாமல் இல்லை. ’எத்தனை எம்.எல்.ஏ.க்கள் அவங்க பக்கம் போவாங்க. உடனே ஒரு லிஸ்ட் எடுங்க. எந்தக் காரணத்துக்காகவும் ஆட்சி கலையக் கூடாது. அப்படி அவங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை நாம உடனே பேசி சரி செய்யணும்...’ என்று வேலுமணி சொல்ல, அந்த வேலைகளில் இறங்கியுள்ளனர் மற்ற அமைச்சர்கள்” என்று முடிந்தது அந்த நீண்ட ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது. தொடர்ந்து கமெண்டில் கேள்வி ஒன்றை போட்டது வாட்ஸ் அப்.
”முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார் பக்கம்?”
பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக். ’முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த இரண்டு நாட்களாக பார்ப்பதற்கு அழைத்திருக்கிறார் தினகரன். ஆனால் அவர் போகவில்லை. அதே நேரத்தில் அமைச்சர்களில் வேலுமணிக்கு, எடப்பாடி பழனிசாமி மீது சில வருத்தங்கள் இருக்கின்றன. அதனால் அமைச்சர்கள் பக்கம் போவாரா என்பது தெரியாது. கட்சி ஒன்றாகிவிட்டால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கொடுத்துவிடுவார்களோ என்ற பயமும் பழனிசாமிக்கு இருக்கிறது. அதனால், என்ன செய்வதென தெரியாத குழப்பத்தில் இருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அவரைப் பொருத்தவரை எந்த அணியில் இருந்தால் என்ன... தான் முதல்வராக தொடர வேண்டும் என்பது மட்டும்தான் அவரது எண்ணமாகவும் ஆசையாகவும் இருக்கிறது. காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் பழனிசாமி இருப்பார்!” என்று முடிந்த பதிலுக்கும் லைக் போட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: