வெள்ளி, 21 ஏப்ரல், 2017

விகடன் : பன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-10

ஓ.பன்னீர்செல்வம்
2016 மார்ச் மாதம்... தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டிக் களம் பரபரப்பாகிக்கொண்டிருந்தது. தி.மு.கவை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்று சொல்லி சூறாவளிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பா.ம.கவின் வெற்றிக்காக ‘மாற்றம்- முன்னேற்றம்-அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து விதவிதமான மேடைகளில், விதவிதமான ‘கெட்-அப்’புகளில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். மக்கள் நலக்கூட்டணியின் கௌரவத்தைக் காப்பற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் ஆளுக்கொரு திசையில் போராடிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட பரபரப்பான நேரத்தில் அ.தி.மு.க-வில்  உச்சக்கட்ட அவமானம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு, உள்கட்சிப் பஞ்சாயத்துக்களைக் கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ‘ஐவர் அணி’யை மொத்தமாக போயஸ் கார்டன் ‘கஸ்டடி’ எடுத்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு வாரத்துக்கு மேலாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்தார்; நத்தம் விஸ்வநாதன் எந்தத் திசைக்குப்போனார் என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை; அமைச்சர் பழனியப்பன் ஆறு நாள்களாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்தார். அவர்களுக்கு என்ன ஆனது, எங்கு போனார்கள் என்பதெல்லாம்  அரண்மனை ரகசியம்போல் இருந்தது.
அ.தி.மு.க என்ற இரும்புக் கோட்டைக்குள் அரங்கேறிக்கொண்டிருந்த அந்த இருட்டு நாடகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அதை வீதிக்குக் கொண்டுவந்தனர் ராமதாஸும், கருணாநிதியும்! அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் அந்த மர்மங்கள் விடுபட்டன. தமிழகம் அதிர்ந்து அடங்கியது!
ஓ.பி.எஸ் - ஐவர் அணி - 30 ஆயிரம் கோடி!
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக்கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க-வில் ஐவர் அணி என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல ஆயிரம் கோடி பணமும், சொத்துகளும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சேர்த்த சொத்துகள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமன்றி, அவர் மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டதுடன், தம்மிடம் உள்ள பணம் மற்றும் சொத்துகளை ஒப்படைத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துகளின் மதிப்பு 30 ஆயிரம் கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன்
தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “மன்னார்குடி அமைச்சர் ஒருவர் ஆம்னி பேருந்தில் மூட்டை மூட்டையாகப் பணத்தையும் நகையையும் ஏற்றிக்கொண்டு வந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமரேந்திரா எனும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிவரும் ‘காஸா கிராண்ட்’ நிறுவனம், நியூயார்க் நகரில் உள்ள விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ‘ஓக்லி பிராப்பர்ட்டி சர்வீஸ்’ ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். தற்போது மூத்த அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் 30 ஆயிரம் கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பிடிபட்ட கதை!
பன்னீர்செல்வம்சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதா பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அதற்காகவே ஐவர் அணி என்ற ஒன்றை ஆரம்பித்தார்ர. ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் அடங்கிய அந்த அணியில் ஓ.பி.எஸ் தவிர்த்த மற்ற நால்வருக்கும் முக்கியமான வேலையே ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிப்பதுதான். ஓ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிக்கும் மற்ற நால்வரையும் சேர்த்துக் கண்காணிக்க முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர் தலைமையில் ஒரு ரகசிய ‘டீம்’ அமைத்தார். அந்த ‘டீம்’ ஐவரின் செயல்பாடுகள், சொத்துவிபரங்களைப் புட்டுப்புட்டு வைத்ததுடன், ‘ஐவரும் வேறு வேறல்ல... அனைவரும் ஒன்றே!’ என்று சொன்னது. அது ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்தது; அலெக்சாண்டர் ‘டீம்’ கொடுத்த ஐவர் அணியின் சொத்துப்பட்டியல் சசிகலாவை ஆத்திரப்பட வைத்தது.
இதையடுத்துத்தான் ஐவர் அணியை கஸ்டடியில் எடுத்த போயஸ் கார்டன் ‘டீம்’ விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டிய சொத்துகளை முடிந்தவரையில் பறித்தது. அப்படிப் பறிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு குத்துமதிப்பாக 30 ஆயிரம் கோடி. ஆனால், போயஸ் கார்டனின் இந்தக் கறாரை எல்லாம் கடந்து ஐவர் அணி பதுக்கிய சொத்துகள் அதையும் தாண்டி, பல கோடி என்றனர் விபரமறிந்தவர்கள். அதில் ஓ.பி.எஸ்ஸின் சொத்துமதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று மத்திய அரசுக்கும் தகவல்போனது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை வேட்டையாடிய ஜெ.!
பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அவருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். எல்லப்பட்டி முருகன், பன்னீர்செல்வம்ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமி கைது செய்யப்பட்டார்; அவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டார். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ண மூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு டெண்டருக்கும் சில நூறு லட்சம் கைமாற்றிவிடப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனைபடிதான் கட்சி பதவியிலிருந்து, டெண்டர் வரை எல்லாமே முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் அனைவரும் இரு அமைச்சர்களின் ஆலோசனையின்படிதான் செயல்பட்டார்கள்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டராகவும், ஓ.பி.எஸ்ஸுக்கு ‘ஆல் இன் ஆல்’ என்று  இருந்து வந்த முருகன் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் தலைமறைவானார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார். இதற்காக 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது.
ஓ.பி.எஸ்ஸைத் துரத்தியடித்த ஜெ.! அழைக்கச் சொன்ன நடராசன்!
ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஐவர் அணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து, அவர்களிடம் இருந்த சொத்துகளைப் பறித்துக்கொண்டது ஜெயலலிதா, பன்னீர்செல்வம்போயஸ் கார்டன். அதன்பிறகு, 2016 மார்ச் 17-ம் தேதி போயஸ் கார்டனுக்கு வரச்சொல்லி ஓ.பி.எஸ்ஸூக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. கோவையில் இருந்தவர் அலறி அடித்துக்கொண்டு, இரவு 11.50 மணி ஃபிளைட்டைப் பிடித்து சென்னை வந்தார். காலையில் 10.20 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். இவர்கள் வந்த தகவல் உள்ளே சொல்லப்பட்டது. ஆனால், உள்ளே இருந்து உடனே அழைப்பு வரவில்லை. அந்த நேரத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். அவர்கள் யாரும் அப்போது ஓ.பி.எஸ்ஸிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. அவர்களை முதலில் சந்தித்த ஜெயலலிதா, அதன்பிறகு ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதனை உள்ளே அழைத்தார். ஒரு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல், தலையைத் தொங்கப் போட்டு இருவரும் நின்றனர். ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த ஜெயலலிதா, "எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இந்தளவுக்கு நீங்கள் செயல்படுவீங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கலை. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் கிடையாது. என் முன்னே நிற்காமல் போய்விடுங்கள்" என்று சொல்லித் துரத்தியடித்தார்.
இந்தத் தகவல் அனைத்தும் சசிகலா மூலம் உடனே நடராசனுக்குப் போனது. அனைத்து விபரங்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட நடராசன், “சசி, அந்த அம்மாவிடம் பேசி சமாதானப்படுத்து. பன்னீரையும், நத்தத்தையும் அப்படியே அனுப்ப வேண்டாம். அவர்களுக்குத் தொகுதி மாற்றி சீட்டைக் கொடுத்து போட்டியிடச் சொல். அவர்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் செலவை இவர்களை வைத்தே செய்யச் சொல்” என்று யோசனை சொன்னார். இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப்போனது. அதையடுத்து மீண்டும் மாலை 5.30 மணிக்கு கார்டனுக்கு ஓ.பி.எஸ்  வரவழைக்கப்பட்டார். ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. சில பேப்பர்களில் கையெழுத்துகள் வாங்கப்பட்டன. அதன்பிறகு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட்டுக் கரையேறினார். நத்தம் விஸ்வநாதன் ஆத்தூரில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் தோற்றுப்போனார்.
ஜெ. மரணத்துக்குப் பிறகு... 240 கோடி கமிஷன்?
2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா 6-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் ஆனார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கான துரதிருஷ்டங்கள் எப்போதும் பன்னீர்செல்வத்துக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதுதானே வழக்கம். இந்தமுறையும் அதுதான் நடந்தது. ஜெயலலிதாவின் இலாக்காக்களை கூடுதலாக கவனித்துக்கொள்ளும் மூத்த அமைச்சர் ஆனார் பன்னீர்செல்வம். அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அன்று இரவே பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இரண்டாவது முறையாக பன்னீர்செல்வத்துக்கு முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்றுக்கொடுத்தார் சசிகலா. ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப்பிறகு பன்னீர்செல்வம்முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட்  இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.
அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால், இந்தமுறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437 ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன. அதன்பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்தான் இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து செய்துவிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதாவது முன்பிருந்த தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது 1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும் ஒத்துக்கொண்டார்.
ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கொடுக்க முடியும். அதன்பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும்” என்றார். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்துவிடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக்கொள்ளலாமே” என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதில், “முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார். அதனால், நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால்தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்துவிட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி அதிர வைத்துள்ளனர்.
ஓ.பி.எஸ் அபகரித்த 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!
மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுகா, அகமலை கிராமத்தில் உள்ள ‘டிரை லாண்டு எஸ்டேட்’க்கு 27 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் கடைசியில் காசிம் பாஷா என்பவர் வசம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு அவருடைய மகன் எம்.சி.எஸ்.பாஷாவுக்கு நிலம் சொந்தமாகிறது. ஆனால், அது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லி 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்திக் கொள்கிறது. மீதி உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 2002-ம் ஆண்டு முதல் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து பணப் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். அதை மீட்க எம்.சி.எஸ்.பாஷாவின் இரண்டாம் தலைமுறை வாரிசுகள் முயற்சி செய்தபோது, ஓ.பி.எஸ்ஸின் தம்பி ராஜாவால் அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டது. அவர்களும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், நிலத்தை மீட்க முடியவில்லை. தற்போது அ.தி.மு.க சசிகலா அணி-பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்து இருப்பதால் இந்த விவகாரத்தை தற்போது தலைமைச் செயலகத்துக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் வனத்துறை எடுத்துக்கொண்ட 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய பன்னீர் செல்வம் கோப்புகளை நகர்த்திக்கொண்டிருந்தது தனிக்கதை!
பன்னீர்செல்வத்தின் குடும்பம்
வெளியில் வந்த விவகாரங்கள் கொஞ்சம்... இன்னும் வெளியில் வராத வில்லங்கங்கள் பன்னீர்செல்வம் அடைந்த பதவிகள், பெற்ற அதிகாரங்கள், சேர்த்த சொத்துகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கின்றன. வெளியில் வந்த விவகாரங்களையும் மறைந்துகிடக்கும் வில்லங்கங்களையும் முழுதாகப் புரிந்துகொண்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா என்ற கேள்விக்கான பதிலையும் தெரிந்துகொள்வார்கள்.
தற்போதைக்கு பயணம் முடிந்தது!

கருத்துகள் இல்லை: