புதன், 19 ஏப்ரல், 2017

பன்னீர்செல்வம் :தர்மத்துக்கு கிடைத்த வெற்றி .

தர்மத்துக்கு கிடைத்த வெற்றி : ஓ.பி.எஸ்.தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து, பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுக-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார், நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி கூறினார். இதையடுத்து, பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றை அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு இன்று ஏப்ரல் 19ஆம் தேதி காலை வந்தனர்.
அவர்களுடன் பன்னீர்செல்வம் தீவிரமாக ஆலோசனை செய்தார். ஆதரவாளர்களுடனான கூட்டம் முடிந்தபின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: ‘எம்.ஜி.ஆர். அதிமுக-வை மக்கள் இயக்கமாக உருவாக்கினார். எம்.ஜி.ஆர். பாதையில் அதிமுக-வை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் சசிகலாவின் குடும்பத்துக்குள் அதிமுக சென்றுவிட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய தர்மயுத்தம் அறப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று அவர்கள் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். எங்களின் அறப்போராட்டம் எதற்காக தொடங்கப்பட்டதோ அதற்காக மக்களின் எண்ணப்படியும், தொண்டர்களின் விருப்பப்படியும் எங்கள் இயக்கம் அதிமுக-தான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்’ என்று தெரிவித்தார்.minnambalam.com

கருத்துகள் இல்லை: