வியாழன், 20 ஏப்ரல், 2017

தம்பிதுரை : முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க.வை மீண்டும் ஓரணியாக இணைக்கும் முயற்சி தொடங்கி உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். அவரை கட்சியில் இருந்து விலக்கி வைத்து அ.தி.மு.க. இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மூத்த நிர்வாகிகளும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். ‘‘கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கப்போவதாக எடுக்கப்பட்டு இருக்கும் முடிவு எங்கள் தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கட்சியில் இருந்து என்னை ஒதுக்குவதாக சொன்னவுடன் தானே ஒதுங்கிவிட்டதாக  டி.டி.வி.தினகரன் கூறினார்.

 இரு அணிகளை இணைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளது. இரு அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை சந்தித்து பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது முதல்-அமைச்சர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவி விவகாரம் முக்கிய அம்சமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சரை மாற்றுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என தம்பிதுரை எம்.பி. கூறி உள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்து உள்ளனர், அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து உள்ளார், இந்நிலையில் முதல்-அமைச்சரை மாற்றுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.  கருத்து வேறுபாடுகளை களையவே இரு அணிகள் சார்பில் குழு அமைக்கப்படுகிறது, இரு அணிகளும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம், பொதுவாழ்வில் யாரும் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டார்கள். கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார் தம்பிதுரை  மாலைமலர்

கருத்துகள் இல்லை: