செவ்வாய், 27 டிசம்பர், 2016

பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது.
13-ம் ஆண்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ! மதுரை கருத்தரங்கம்<>பொது சிவில் சட்டம்- கருப்புப் பணஒழிப்பு: இசுலாமியர்கள், சொந்த நாட்டு< மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல் !மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 18-12-2016 அன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் t;தோழர் வாஞ்சிநாதன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் >தோழர் லயனல் அந்தோணி ராஜ்t; அனைவரையும் வரவேற்றார். /> தோழர் வாஞ்சிநாதன் தலைமை உரையில் “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு அரசாணை மூலம் மோடி அதை மீறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்ற சட்டம் மூலமே சாத்தியம் என்றே ரிசர்வ் வங்கி சட்டம் சொல்கிறது. இப்போது மோடி பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவில்லை.

தோழர். வாஞ்சிநாதன்
தோழர். வாஞ்சிநாதன்
ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை மற்றும் தொழில் செய்யும் உரிமை அடிப்படை உரிமை {19(1)(g)} வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் மட்டும் 50,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் கட்டுமானத் தொழிலில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். இன்னும் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோய் வாழ முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மோடியின் அறிவிப்பால் 150-க்கும் மேலானோர் இறந்துள்ளனர். இது சரத்து21- வாழ்வுரிமையை மீறிய செயல்.
மேலும் நமது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் வங்கியில் முடங்கியுள்ளது. இது அரசியல் சட்டம் சரத்து 300-அ-ன் கீழ் நமது சொத்து. இச்சொத்தை மோடி எப்படி முடக்க முடியும்? நாம் வங்கியின் வாடிக்கையாளர்கள், நமக்கும் வங்கிக்குமான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி நம்மிடம் அளித்துள்ள உறுதிமொழியும் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாம் நட்டஈடு கோர முடியும். தருவார்களா? யார் பொறுப்பு?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
”கருப்புப் பண ஒழிப்பு : சொந்த நாட்டு மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல்“ பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் பவணந்தி வேம்புலு சிறப்புரையாற்றினார்.
“ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவேன் என்று மோடி சொல்கிறார். கருப்புப் பணம் என்றால் என்ன? மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும். வணிகர்கள் விற்கும் பொருளுக்கு வரி கட்ட வேண்டும். இப்படி பல்வேறு வகைகளிலே அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதன் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இன்னும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கிறது. விலைவாசி ஏறுகிறது. இன்னும் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்புப் பணம் 80 லட்சம் கோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது.
PRPC Madurai (3)
பேராசிரியர். பவணந்தி வேம்புலு
கொஞ்சம் காலம் முன்பாக நமது கிராமங்களிலே பண்டமாற்று முறை இருந்தது. ஒருவரிடம் இருக்கும் உற்பத்திப் பொருளை வேறு ஒருவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கே பணப் பரிவர்த்தனை இல்லை. பொருளைப் பதுக்கி வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே அது கடினமானது. ஆனால் பணப் பரிவர்த்தனை வந்த பின்பு கரன்சியைப் பதுக்கிவைப்பது சுலபமாகிவிட்டது. பணப் பரிவர்த்தனையின் காரணமாகத்தான் கருப்புப் பணம் உருவானது. பண்டமாற்று முறை ஒழிந்து போய் ரூபாய் நோட்டு வந்த பின்பு அதுவே பொருளாதாரத்தின் அடிபடையாக மாறிவிட்டது.
மக்கள் அனைவரிடமும் பணத்தை தாராளமாகப் புழங்கவிட்டு திடீரென்று ஒரு சில மணி நேரத்தில் செல்லாது என்று அறிவித்தால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி இந்த மாற்றத்தை எதிர்கொள்வார்கள்? அவர்களது சிறுவாட்டுச் சேமிப்பு கருப்புப் பணமாகுமா? செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அல்லல் படுவதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40% கிராமங்களில் வங்கிகள் இல்லை. இருந்தாலும் படிக்காதவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது. இவர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறச் சொன்னால் எவ்வாறு முடியும்? எளிய மக்களிடம் உள்ள சேமிப்பைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஹிட்லரைப் போல செயல்படுகிறார். ஹிட்லர் ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் பிரதமர் ஆகியுள்ளர். ஹிட்லர் உருவாகுவதற்கு வெய்மர் குடியரசு அடிப்படையாக இருந்ததைப் போல மோடியின் ஆட்சிக்கு மன்மோகனின் ஆட்சி அடிப்படையாக இருந்தது. மக்கள் நல அரசு என்ற அடிப்படையே
தகர்க்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகிவிட்டது.
மோடி இதைத் தன்னுடைய மிகப் பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இது மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய துல்லியமான அரசியல், பொருளாதாரத் தாக்குதல். இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை தோற்கடித்ததைப் போல இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும் தோற்கடிக்க வேண்டும் “ என்று பேராசிரியர் பவணந்தி வேம்புலு பேசினார்.
“பொது சிவில் சட்டம் : அனைத்து இந்துக்களுக்குமே பொதுவான சட்டம் சாத்தியமா ?” என்பது பற்றி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு சிறப்புரையற்றினார்.
“இரண்டு தலைப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது தான். இட்லருடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நம் நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. மோடி இட்லராக முயல்கிறார். நாம் அனுமதிக்கவில்லை. ஜெர்மனியின் துயரங்களுக்குக் காரணம் யூதர்கள் என்றார் இட்லர். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு ஓடிப்போனார். இந்தியாவின் துயரம் முசுலீம்கள் என்கிறார் மோடி. இந்துக்கள் மனத்தில் இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் மோடி.
அம்பேத்கர் அவர்கள் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்  என்று விரும்பினார். எல்லா சட்டமும் இங்கே பொதுவானதாகத் தான் இருக்கிறது. ஆனால் தனி நபர் சட்டம் பற்றித் தான் இங்கே விவாதம். தனி நபர் சட்டம் மதத்துக்கு மதம் மட்டுமல்ல சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடுகிறது. அரசியல் சட்டத்தின் உட்பிரிவாக வழிகாட்டு நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. பல சட்டங்களிலே வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படாமலும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுகின்ற வகையிலும் உள்ளன. அரசியல் சட்டம் பிரிவு 44 அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 45 –வது பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று கால நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஆட்சி மாறி 66 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. சர்க்கரைக் கிண்ணம் என்கிற கியூபா  நாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தனியுடமை இயல்பாகவே உயர்வு தாழ்வை  உருவாக்கிவிடுகிறது.
தோழர் தியாகு
தோழர் தியாகு
இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய பல்வேறு கலவரங்களிலே முஸ்லீம்கள் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன்கூட சிறைக்குச் செல்லவில்லை. கிரிமினல் சட்டங்கள் எல்லோருக்கும் பொது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அம்பேத்கர் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் (HINDU CODE BILL) கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியை காந்தியார், படேல், திலகர், பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்றவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட நேரு பின்னர் அமைதியாக இருந்துவிட்டார். அது போலத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும் தடுத்துவிட்டார்கள்.
அம்பேத்கர் அரசியல் சட்டத்தை விரும்பித் தலைமையேற்று எழுதவில்லை. எழுதவைக்கப்பட்டதாகச் சொன்னார். குறைந்தபட்சம் இடஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களைக் கருதிதான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனவே இந்துத்துவ தலைவர்கள் யாரை எவ்வாறு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள். காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஏன் கொலை செய்தேன் என்று சொல்லும்போது காந்தி மக்களிடம் இருந்த சிறை அச்சத்தைப் போக்கிவிட்டார். மக்கள் கட்டுப்பாடுகளை மீறப் பழகிவிட்டனர். இது ஆபத்தான விளைவுகளை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிடும். இது தேச துரோகம் என்று சொன்னான்.
தனி நபர் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் முன்மொழிந்த போது அதை காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி எதிர்த்தார். மத உரிமைகளில் அரசியல் தலையிட முடியாது என்றார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை தேவ தாசிகளாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகச் சாடினார் ரெட்டி. சட்டம் நிறைவேறியது.
பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்றான் வள்ளுவன். ஆனால் இங்கே சாதிக்கு ஒரு நீதி, நடைமுறை உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொள்கிறது. பெண்ணுரிமை பிரச்சினையிலும் அவ்வாறுதான். எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்குவதை நியாயப்படுத்துகிறது. இசுலாமியர்களிடமும் அது உள்ளது. பெண்களுக்கான சம உரிமையும் சேர்ந்ததே சமூக நியதி. ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளது. ஆணவக் கொலைகளின் நோக்கம் என்ன? அக மண முறையைப் பாதுகாப்பதுதான். வரதட்சணைப் பழக்கம் எல்லா சாதிகளிடமும் கிடையாது. ஆனால் உயர் சாதிகளிடம் உள்ளது. இதைப் பார்த்து மற்ற சாதிகளும் பழகிக் கொள்கிறார்கள். இசுலாமிய சமூகத்தில் வரதட்சணை தடை செயப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அது நடைமுறையில் உள்ளது. சிசுக்கொலை மேல் சாதிகளில் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இருக்கிறது. இடை நிலைச் சாதிகளிடம் இருக்கிறது. அகமண முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். பல பெண் குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லா சட்டங்களையும் மீறி நடக்கிறது.
பொது சிவில் சட்டம் என்று மோடி சொல்வது அப்பட்டமான நாடகம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக பொது இந்துச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிக்கு ஒரு மரபு இருப்பதை, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். முசுலீம்கள் சிறுபான்மை என்றால் இங்கே சிறுபான்மை என்று யாரும் இல்லை. ஆதிக்கச் சாதிகளில் பார்ப்பான் ஆகச் சிறுபான்மை. அவன் தான் சமூகவிதிகளை வகுத்துள்ளான். கருவறைக்குள் ஒரு சாதி. பிரகாரத்தில் ஒரு சாதி. வெளியே ஒரு சாதி என்று இந்துக்களையே இனம் பிரித்து வைத்தவன் யார்? இந்து என்று ஒரு மதமே இல்லை என்று வரலாறு மெய்ப்பிக்கிறது. அனைவரும் இந்து என்றால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது தானே முதல் தேவை? ஆனால் இசுலாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இசுலாமியர்களுக்கான தனி நபர் சட்டங்களைக் காட்டி பொது சிவில் சட்டம் என்று சங்கப் பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன.
இந்து சனாதனவாதிகளைப் போலவே முஸ்லீம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். பிற மதங்களிலும் இந்த பிற்போக்குத்தனங்கள் உள்ளன. அது கட்டாயம் களையப் பட வேண்டும். இசுலாமிய சமூகத்தில் பெண் கல்வி மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் குர்தி இனப் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி ஐ.எஸ்.தீவிரவாதிகளை விரட்டினர். இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.
மோடி அரசு ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிரானது. ஆகச் சிறுபான்மையினரான பார்ப்பன சனாதனங்களை மரபுகள், பழக்க வழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளாக வைத்துக்கொண்டு அதைப் பெரும்பான்மை இந்துக்கள் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்க எத்தனிக்கிறது. மோடி அரசு தலித் மக்கள், பழங்குடிகளுக்கு எதிரானது. இசுலாமியர்களுக்கும் இன்னும் பல மதச் சிறுபான்மையினருக்கும் எதிரானது. இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.ன் கனவை நனவாக்க சனநாயகத்தின் பெயரில் மோடி பாசிசத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். பொருளியல் நெருக்கடிகளை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறார். இதை நாம் அனுமதிக்கக்கூடாது ஒன்றிணைந்து போராட வேண்டும்.
கிளைப் பொருளாளர் தோழர் சங்கையா நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவுற்றது. கீழைக்காற்று நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாசிப்புத் தளம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.
பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இசுலாமியர்கள், வணிகர்கள், தோழமை அமைப்பினர் 400 பேர்வரை கலந்துகொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

கருத்துகள் இல்லை: