வெள்ளி, 30 டிசம்பர், 2016

கேரளாவில் வெடித்தது மனித சங்கிலி போராட்டம் 700 கிலோ மீட்டர் .. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை


திருவனந்தபுரம்: ஒரே இரவில் நாட்டு மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிட்ட மோடி அரசுக்கு எதிராக வியாழனன்று கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு மோடி அரசின் மக்கள்
விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.கேரளத்தின் தெற்கே திருவனந்தபுரம் ராஜ்பவனில் துவங்கி வடக்கே காசர்கோடு வரையிலும் நீண்டு சென்ற இந்த மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததன் மூலம் பல்வேறு துயரங்களுக்கு ஆளான மக்களின் எதிர்ப்பு ஒரே குரலில் ஒலித்ததன் வரலாற்று நிகழ்வாக இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் அமைந்தது.
வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திருவனந்தபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் துவங்கியது.
மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை ஒரே மனதுடன் எதிர்கொள்வோம் என்று மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கொடியேரிபால கிருஷ்ணன், முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆனத்தல வட்டம் ஆனந்தன், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன், துணை சபாநாயகர் வி.சசி, ஜனதாதள தேசியத் தலைவர் நீலலோகிததாசன், என்சிபி மாநிலத் தலைவர் உழவூர் விஜயன் ஆகியோர் கைகோர்த்தனர். எர்ணாகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, சிபிஐ தலைவர் பந்நியன் ரவீந்திரன், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் பி.ராஜீவ், பத்திரிகையாளர் நிகேஷ் குமார், திரைப்பட இயக்குனர் வினயன், ரஞ்சி பணிக்கர் முதலானவர்கள் மனிதச் சங்கிலியின் கண்ணிகளானார்கள்.
திருவனந்தபுரத்தில் துவங்கிய மனிதச் சங்கிலியில் ஆலப்புழை வழியாக செறுதுருத்தி, நீலியாடு, எடப்பால், குற்றிம்புறம் வழியாக காசர் கோடு நகரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் லட்சக்கணக்கானவர்கள் கைகோர்த்தனர். வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்புமனிதச்சங்கிலிப் போராட்டத் தின் மூலம் மலையோர மக்களும் மோடி அரசுக்குத் தங்களின் கடும் எதிர்ப்பைத்தெரிவித்தனர். கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆலப்புழையில் கண்ணிகளானார்கள். பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்களும் இடது ஜனநாயக முன்னணியின் முக்கியத் தலைவர்களும் சமூக-கலாச்சாரத் துறையினரும் கலந்து கொண்டனர். இடது ஜனநாயக முன்னணி கன்வீனர் வைக்கம் விஸ்வன் ஆலப்புழாவில் கண்ணி சேர்ந்தார். கலைத்துறையினர், விளையாட்டு நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்றுக் கொண்டனர். கூட்டுறவுத் துறையின் மூச்சைப் பிடித்துக் கொல்வதற்கு முயற்சிக்கும் சங்பரிவாரின் திட்டத்திற்கு எதிரான எச்சரிக்கையாக அரசியல் வேறுபாடின்றி முதலீட்டாளர்களும் கூட்டுறவுத் துறையை ஆதரிப்பவர்களும் மனிதச்சங்கியின் ஒரு பகுதியாயினர். மாலை 4 மணி முதலே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு ஆண்களும் பெண்களும் சாரசாரையாக வரும் காட்சிகளை கேரளம் முழுவதும் காண முடிந்தது  தீக்கதிர்

கருத்துகள் இல்லை: