புதன், 28 டிசம்பர், 2016

கைதிகளின் சித்திரவதைக் கூடமா சேலம் மத்திய சிறை?

salem-jailவன்னிஅரசு thetimestamil.com :மு.வி.நந்தினி ;வன்னிஅரசு .சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் செல்வம் (கைதி எண்: 7900). பல வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் துணைச் சிறைக்குள் கொலை செய்யப்பட்ட லிங்கத்தின் நண்பர் தான் இந்த செல்வம். இவர் வேலூர் மத்திய சிறையிலுள்ள பேரறிவாளனை தாக்கினார் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சேலம் மத்திய சிறைக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாற்றப்பட்டார். தன்னுடைய மகனை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டுமென செல்வத்தின் தந்தை சின்னதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவர் தந்தையின் சார்பாக வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார். செல்வத்தை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றக் கூடாது
என்பதற்கு போலீஸ் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லையெனக் கூறி நான்கு வாரத்திற்குள் அவரை சேலம் சிறையிலிருந்து மாற்ற வேண்டுமென 14.12.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் சேலம் மத்திய சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளைக் கேட்டிருந்தார் செல்வம். சேலம் மத்திய சிறைச்சாலை நிர்வாகத்தின் தவறுகளை நீதிமன்றம் மூலமாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவும் கேள்வி எழுப்பி வந்ததால் கடந்த பத்து நாட்களாக செல்வத்தை தனிச் சிறையில் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளை சரியாக தராமல் கடுமையாக தாக்கி வருகிறது போலீஸ். இதன் காரணமாக அவர் கைவிரல்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதகாவும் தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றாமல் சேலம் சிறையிலேயே வைத்து தன் கணவனை போலீஸ் கொலை செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார் செல்வத்தின் மனைவி.
salem-1
salem-2
சேலம் சிறைக்குள் தனக்கு நடந்து வரும் கொடுமைகளை விவரித்தும், அவரை சித்திரவதை செய்து வரும் போலீசாரின் பெயர்களை குறிப்பிட்டும் செல்வம் பேசும் ஆடியோ நம்மிடம் கிடைத்துள்ளது. அவரைப் பார்க்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில் மற்றொன்றையும் அவர் குறிப்பிடுகிறார், அதாவது முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்று சிறைக்குள் அவர் இறப்பின் செய்தியை சொல்லி போலீசார் இனிப்பு வழங்கியதாக சொல்கிறார். ஆடியோவின் இறுதியில் இதே சிறைக்குள் இருந்தால் நிச்சயம் போலீசார் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும், உடனே தன்னை வேறு சிறைக்கு மாற்றி காப்பாற்றுமாறும் சொல்கிறார்.
சேலம் சிறையில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதும், கைதிகளுக்குரிய அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். நானும் ஒரு ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் இருந்தபோது சிறைக்குள் கைதிகளுக்கு நடைபெறும் கொடுமைகளை நேரிலேயே கண்டு அனுபவித்திருக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கிறார் செல்வம். பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பல்வேறு தளங்களில் போராட்டங்ககளை முன்னெடுத்து வந்துள்ளார். சமீபத்தில் வழக்கறிஞர் ஜான்சன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மூத்த பொதுவுடைமைத் தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கட்சியின் சார்பில் நான் கலந்துக் கொண்டு இந்த கோரிக்கைக்கு கட்சியின் ஆதரவை பதிவு செய்தேன்.
தண்டனைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களுக்குரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தான் சட்டமும் சொல்கிறது. இங்கோ உயர்நீதிமன்ற உத்தரவு கூட காற்றில் பறக்கவிடப்படும் நிலையில், தமிழக அரசை நோக்கினால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்காமல் முழு நிர்வாகமும் சீர்குலைந்து கிடக்கிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மனிதனை சிறையில் அடைத்து வைத்திருப்பது மானுட கொள்கைக்கு எதிராது. அதைவிட அவரை போலீசாரே நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை செய்வதோடு அதற்கு எந்த மருத்துவமும் தராமல் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை என்ன சொல்ல? தமிழ்நாட்டின் ஊடகங்ககள் தான் கைதி செல்வத்தின் உயிரை காப்பதற்கு முன்வர வேண்டும்.
படங்கள்: சேலம் சிறையிலிருந்து கைதி செல்வத்தை மாற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகல்
வன்னி அரசு. சமூக அசரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: