வியாழன், 13 அக்டோபர், 2016

திமுகவுடனான கூட்டணிக்கு ஒரே ஒரு வாக்கு: காங்கிரஸில் வாக்கெடுப்பு!

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத்
தலைவர்களிடம் அந்தக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நடத்திய வாக்கெடுப்பில், திமுகவுக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றே அனைத்து மாவட்டத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடக்கி வைத்து திருநாவுக்கரசர் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்டத் தலைவர் யாரும் பேச வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதம் தொடர்பாக மட்டும் பேச வேண்டும் என்று கூறினார்.

ஆனால், கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுகவினரின் அணுகுமுறை முறையானதாக இல்லை என்றே குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளனர். காங்கிரஸின் தில்லி தலைமை முதலில் திமுக தலைமையுடன் பேசியிருக்க வேண்டும். அதன் பிறகே, தமிழக காங்கிரஸாரோ அல்லது காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களோ திமுகவின் நிர்வாகிகளுடன் பேச அனுமதித்திருக்க வேண்டும். அப்படிப் பேசினால்தான் திமுக தலைமை இறங்கி வந்திருக்கும் என்று மாவட்டத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பேசியதற்குப் பிறகு திருநாவுக்கரசர் பேசியது:
கருணாநிதி, ஸ்டாலின் அணுகுமுறை: சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவின் தலைவர் கருணாநிதி கையாண்டார். உள்ளாட்சித் தேர்தலை அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கையாளுகிறார். க்ஷ்இருவரின் அணுகுமுறையும் மாறுபாடாக உள்ளது. மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே ""சதவீத அடிப்படையில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், காங்கிரஸின் மாவட்டத் தலைவர்களுடன் பேசி இறுதி செய்வார்கள்'' என்று கூறிவிட்டார். அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.
திமுக சொல்வதையே...: பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அது தேவையில்லை என்று நான் கூறினேன். திமுக சொல்வதை அப்படியே நான் (திருநாவுக்கரசர்) எப்படிச் சொல்ல முடியும்? மாறுபட்ட கருத்து இருந்தால், அதைத் தெரிவிக்கத்தான் முடியும்.
ராகுல் வருகையில் அரசியல் இல்லை: அப்பல்லோ மருத்துவமனைக்கு ராகுல் காந்தி வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. ஊடகங்கள்தான் அதைப் பெரிதுபடுத்துகின்றன. கூட்டணியைப் பொருத்தவரை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். ராகுல் காந்தி சொல்வதை குண்டூசி அளவுக்குக்கூட மாறாமல் நான் நடப்பேன் என்றார் அவர்.
தி.மு.க. கூட்டணிக்கு ஒருவர் மட்டுமே ஆதரவு: பின்னர், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறும் மாவட்டத் தலைவர்களை கையை உயர்த்துமாறு திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத் தலைவர்கள் 61 பேரில் பெரும்பான்மையோர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கையை உயர்த்தியுள்ளனர். அதன் பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறுபவர்களைக் கையை உயர்த்துமாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அதற்கு, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஒருவர் மட்டுமே தனியாக கையை உயர்த்தியுள்ளார். அதன் பிறகு, கூட்டணி குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூட்டத்தை திருநாவுக்கரசர் நிறைவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சீரஞ்சிவி, மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கர்நாடக மாநில கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்காத மத்திய அரசைக் கண்டிக்கிறோம், நாட்டுக்காக காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவுடன் மீண்டும் பேசுவோம்
உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியது: மாநிலத் தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் திருச்சியில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிதியமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் பேசினோம். சில இடங்களில் அதிருப்தி இருந்தது. இந்த நிலையில், தேர்தலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் நடைபெறலாம். அப்போது, திமுகவிடம் மீண்டும் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் அவர்.  dinamani,com

கருத்துகள் இல்லை: