வெள்ளி, 14 அக்டோபர், 2016

‘பேலியோ டயட்’ ஆரோக்கியமானதா? இன்னும் சந்தேகம் இருக்கிறது?

உலகில் உடல் எடை குறைக்க பல்வேறு டயட் முறைகள் இருக்கும்போது சமீபகாலமாக பரபரப்பாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் டயட் முறை ‘பேலியோ’. உடல் எடையைக் குறைக்க முயல்பவர்களிடமும், சர்க்கரை நோயுள்ளவர்களிடமும் பிரபலமாகி வருகிறது இந்த பேலியோ டயட். இதைப்பற்றி நம்மிடம் விரிவாகப் பேசுகிறார் பேலியோ டயட் நிபுணர் ஷங்கர் ஜி.
பேலியோ டயட்டில் என்ன இருக்கிறது?
மருத்துவ உலகில் எதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லி பயமுறுத்துகிறார்களோ, அந்த உணவை எல்லாம் குறிப்பாக இறைச்சி, மஞ்சள் கரு சேர்த்த முட்டை, நெய், வெண்ணெய், தேங்காய், சீஸ் என்று கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் டைப்-2 டயபடிஸ், பி.பி, மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றையும் வெகுவாகக் கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் உதவுகிறது
பேலியோ டயட். எடை குறைப்புக்கான டயட் என்று இல்லாமல் வாழ்நாள் முழுவதுக்குமான உணவு முறை மாற்றமே பேலியோ டயட்.
’பேலியோ’ என்ற வார்த்தை ’பேலியோலித்திக்’ காலக்கட்டத்தினைக் குறிக்கும் பெயர். குகைகளில் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பரிணாம ரீதியில் தொடங்கிய மனிதர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், அவர்களுக்கு விவசாயம், நெருப்பு, தானியங்கள் என்று இன்றைய நவீன உணவுகள் எதுவுமே தெரியாது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நாம் இன்றைக்கு உண்ணும் விவசாய உணவுகளே மனித வாழ்க்கைக்குள் நுழைகிறது. எனில் சுமார் 26 லட்ச வருடமாக மனித இனத்தைக் காத்த உணவு எது? அதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்வது, உயர் கொழுப்பு, புரதம் சார்ந்த சிகப்பிறைச்சி உணவுகள். தானியங்கள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் மனிதனின் பிரதான உணவாக இருந்தவை மாமிசமும், சில வகை பழங்களும், கிழங்குகளும் தான்.
இன்றைக்கு சிகப்பிறைச்சியும், தேங்காயும், கொழுப்பும் மனிதகுலத்தின் எதிரி உணவாக நவீன மருத்துவத்தால் கட்டமைக்கப்பட்டு, குறைந்த கொழுப்புணவுகள் என்று அதிக கார்போஹைட்ரேட் தானிய உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 26 லட்சம் வருடங்களாக கொழுப்பை உண்ட மனிதர்களுக்கு வராத நவீன கால வியாதிகளான புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, மாதவிடாய் கோளாறுகள், பல் சொத்தை, சொரியாஸிஸ் உள்ளிட்ட பல உடல் பிரச்னைகள் இன்றைக்கு அதிக மாவுச்சத்து உணவுகளான கார்போஹைட்ரேட் உண்ணும் மக்களுக்கு வருகிறது.
டிரில்லியன் கணக்கில் செல்களால் ஆன மனித உடலில், அந்த செல்லுக்குப் போர்வையாக இருப்பது, கொழுப்பு என்ற எளிய உண்மையைப் பொருட்படுத்தாது, கொழுப்பை அறவே விலக்கச் சொல்லும் நவீனகால உணவுப் பரிந்துரைகளால் பலவிதமான உணவு சார்ந்த நோய்களுக்கு இன்றைய மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.
தானியங்களின் மிகப் பெரிய பிரச்னை மாவுச்சத்து மட்டுமல்ல, விதைகளான தானியங்களை உணவாக உட்கொள்வதால், இயற்கை தானியங்களுக்கு அளித்த பாதுகாப்பு விஷம், மனிதருக்குப் பல ஒவ்வாமைகளை அளிக்கிறது. உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த மனித இனத்தின் பிரச்னைகளுக்குக் காரணமான தானியத்தை ஹீரோவாக்கி, நன்மை செய்யும் கொழுப்பு சார்ந்த உணவுகளை வில்லனாக்கியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை தீராத நோய்பீடித்த சமூகமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றி வைத்திருக்கிறார்கள்.
பேலியோ டயட்டின் அடிப்படையே, உடலின் ரத்த சர்க்கரையை அபரிமிதமாக ஏற்று, உடல் கட்டமைப்புக்கு உதவும் கணையம் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோனை அதன் இயற்கையான வேலைக்குப் பயன்படுத்துவதேயாகும். மூன்று வேளையும் உண்ணும் மாவுச்சத்து உணவுகளால் இளம் வயதிலேயே கணையம் பாதிக்கப்பட்டு, சர்க்கரை பிரச்னையில் விழும் பாதிப்பிலிருந்து காப்பதுதான்.
உடல் இரண்டு சக்திகளால் இயங்குகிறது. கொழுப்பு மற்றும் க்ளுக்கோஸ். மாவுச்சத்து உணவுகளால் க்ளுக்கோஸ் எனர்ஜி கிடைத்து உடல் இயங்குவது நடைபெற்றாலும், அதிகப்படியான க்ளுக்கோஸ் சார்ந்த மாவுச்சத்து உணவுகளால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் பருமனை அதிகரிக்கிறது. ஆனால், கொழுப்பு சார்ந்த உணவுகள், பசியை அடக்கி, உயர்தர கொழுப்பு மற்றும் புரதத்தை உடலுக்குத் தந்து உடல் எடையைக் குறைத்தும், ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களையும் அளித்தும், உடலை மிக விரைவில் ஆரோக்கியமாக்குகிறது. மற்ற உடல் குறைப்பு டயட் முறைகளுக்கும் பேலியோவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே பேலியோவில் கலோரி கணக்குகள் இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.
கொழுப்பை சாப்பிட்டால் உடல் எடை எப்படி குறையும்? என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். கொழுப்பே சாப்பிடாத மக்களுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது? கிட்னி பிரச்னை வருகிறது? குழந்தை பிறப்பதில் சிக்கல் வருகிறது? ஏன், அவர்கள் உடல் பருமனாகிறது? என்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். சைவமோ, அசைவமோ… சர்க்கரை தொடங்கி அனைத்து உடல் உபாதைகளும் பொதுவாக இருப்பதைக் கவனியுங்கள்.
கொழுப்பு பிரதானமான உணவாக இருந்தாலும், பேலியோ டயட் எடுப்பவரின் ஒருநாள் உணவில் சமச்சீராக உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
இன்றைக்கு அன்றாட உணவுகளை உண்ணும் மக்களை விட பேலியோ டயட்டில் அதிக கீரைகள், காய்கறிகள், கொட்டைகள், இறைச்சி வகைகள், தண்ணீர் அருந்துதல் தொடங்கி, வைட்டமின் டி-யை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. டயபடீஸ் தொடங்கி பல உடல்நலக் குறைபாட்டுக்குக் காரணமான வைட்டமின் டி குறைபாட்டை நிவர்த்தி செய்ய வெயிலில் நின்றாலே போதும் என்ற உண்மையை பேலியோவுக்குப் பின் அறிந்தவர்கள் பலர் உண்டு.
இதில், உடலை வருத்தும் உடற்பயிற்சிகளை தவிர்க்க சொல்லி, மெதுநடை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இளம் வயது அல்லது உடற்கட்டை ஏற்ற நினைக்கும் மக்களுக்கு மட்டுமே புரத உணவுகள் மூலம் தசைகள் ஏற்றும் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பெரிய அளவில் உடலுழைப்பு இல்லாமல் உணவே மருந்தாக ஆரோக்கியம் பேணும் இந்த உணவுமுறையை தமிழில் விளக்கமாக பல கட்டுரைகள் எழுதியவர் நியாண்டர் செல்வன். அமெரிக்கக் கொங்கு தமிழரான இவர், தனது பிரச்னைகளுக்காகத் தேடிக் கண்டடைந்து பலன் பெற்ற இந்த உணவுமுறையை ஃபேஸ்புக்கில் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு மூலம் எளிய தமிழில் அறிவியல் தரவுகளுடன் விளக்கி இன்றைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ந்து ஆரோக்கியம் பரப்பி வருகிறது.
முழுவதும் இலவசமாக ஒரு பைசாவும் கட்டணம் வசூலிக்காது பல தன்னார்வலர்களுடன் சமூகச் சேவையாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியம் மீட்டெடுத்து உதவிக்கொண்டிருக்கும் இந்தக் குழுவின் ஃபேஸ்புக் முகவரி www.facebook.com/tamilhealth எனவே, முழு ஆரோக்கியத்துடன் வாழ நினைப்பவர்கள் தாராளமாக பேலியோ டயட்டுக்கு மாறலாம்!
சரி, இந்தப் பேலியோ டயட்டில் ஒருவருக்கான டயட் சார்ட் எப்படி இருக்கும்?
அசைவர்களுக்கு..
காலை – 4 முட்டை, மதியம் – பேலியோ காய்கறி பொரியல் அல்லது சாலட், இரவு – இறைச்சி அல்லது கடலுணவு. நிறையத் தண்ணீர், ஒரு மணி நேர நடை, ஸ்நாக்ஸாக தினம் கீரை, எலும்பு சூப்.
சைவர்களுக்கு…
காலை 100 கிராம் பாதாம், மதியம் பேலியோ காய்கறிகள் + 30 கிராம் வெண்ணெய், இரவு 200 கிராம் பனீர். ஸ்நாக்ஸாக பச்சைத் தேங்காய், அவகோடா, எலுமிச்சை ஜூஸ், பட்டர் டீ.
முழுவதும் சைட் டிஷ்ஷாகவே இருக்கிறதென்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆனால், இதுதான் முழுமையான மெயின் உணவு. தானியங்கள் விலக்கப்பட்ட மேலே சொன்ன உணவை உண்டுதான் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
எந்த உணவையும் எண்ணெயில் பொரிக்கக்கூடாது. வேக வைத்து அல்லது க்ரில் செய்து மட்டுமே உண்ண வேண்டும். சமையல் எண்ணெயாக வெண்ணெய், நெய், சீஸ், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பருப்பு, பீன்ஸ் வகைகள், கிழங்குகள், பேக்கரி உணவுகள், இனிப்பு, ஜங்க் உணவுகள் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான சில பேலியோ உணவுகள்:
பட்டர் டீ – சாதாரணமாக நாம் போடும் டீயில், சர்க்கரை தவிர்த்து, 30 கிராம் வெண்ணெய் போட்டு, உடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கலந்தால் இதுதான் பட்டர் டீ. மூன்று மணி நேரத்துக்கு மேல் பசிதாங்க வைக்கும் பானம் இது.
ஸ்லோ குக்கிங் எலும்பு சூப் – ஆட்டுக்கால் போன்ற எலும்புகளை ஆறு மணி நேரம் மெதுவான தீயில் வேக வைத்து செய்யப்படும் இந்த சூப் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.
கெட்டி தயிர் - ப்ரோபயாடிக் என்று குடலுக்கு நன்மையளிக்கக் கூடிய கெபிர் (கெபிர் திராட்சைகளை பாலில் போட்டு புளிக்க வைத்து தயாரிக்கப்படும் தயிர்) தயிர் பேலியோ குழுமத்தில் பிரசித்தம். இந்தத் தயிரை தினம் வீட்டிலேயே தயாரித்து குடல் நலனை பேணலாம்.
- விஜய் மகேந்திரன்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: