சனி, 15 அக்டோபர், 2016

virtual war ..? பாக் மீது தாக்குதல் : சண்டையா சண்டைக் காட்சியா ?

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.vinavu.com :  பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு நடத்திக் கொண்டிருப்பது, சண்டையா, அல்லது இது வெறும் சண்டைக் காட்சியா? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. மோடி அரசைப் பொருத்தவரை இது சண்டைக் காட்சி. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம். “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிப் பார்த்துக் காசு கிடைக்கவில்லையென்றால், “நாச காலம் வருது” என்று மிரட்டிக் காசு பறிக்கும் குடுகுடுப்பைக்காரனைப் போல, வாக்களித்த மக்களுக்கு ‘அச்சே தின்’ எதையும் காட்ட முடியாத மோடி, ‘சண்டைக் காட்சி’யைக் காட்டி ஓட்டு அறுவடைக்கு முயற்சிக்கிறார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.
உரி இராணுவ முகாம் மீதான தாக்குதல், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மோடியை, ஒரு விதத்தில் காப்பாற்றியிருக்கிறது. வேறொரு விதத்தில் இக்கட்டிலும் ஆழ்த்தியிருக்கிறது. “56 அங்குல மார்பு கொண்ட மாவீரன்” என்ற முறையில் மோடி ஏதாவது செய்தாக வேண்டும். அதே நேரத்தில் பாக். இராணுவத்திற்கு உண்மையிலேயே ஆத்திரமூட்டும்படி ஏதும் செய்துவிடவும் கூடாது. இவ்விரு நிபந்தனை களுக்கு இடைப்பட்ட சந்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உருவாக்கிய “கலைப்படைப்பு”தான் செப் 29 அன்று அரங்கேற்றப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்.
“அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தனது கூற்றை நிரூபிக்கும் பொருட்டு, தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவம் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதாக கூறப்படும் பகுதிகளுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று மக்களிடம் பேச விட்டிருக்கிறது பாக். அரசு. பிம்பேர், சம்ப், சமானி ஆகிய மூன்று மாவட்ட எல்லைப்புறக் கிராமங்களைப் பார்வையிட்ட வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் நிருபர் பமேலா கான்ஸ்டபிள், “எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்று மக்கள் சொல்கிறார்களே தவிர, பல போராளிகள் கொல்லப்பட்டதாக இந்தியா சொல்வதை உறுதி செய்யும் விதத்தில் அவர்கள் எதுவும் கூறவில்லை” என்கிறார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் ஐ.நா குழுவினரும், “இந்தியா கூறுவதைப் போன்ற துப்பாக்கிச் சண்டை எதையும் நாங்கள் பார்க்கவில்லை” என்றே கூறியிருக்கின்றனர்.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சண்டைக் காட்சியை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சண்டைக் காட்சியை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
“அதிக பட்சம் 200 மீட்டர் தூரத்துக்கு பாக். எல்லைக்குள் சென்று சுட்டிருக்கக் கூடும்” என்று சில பாக். பத்திரிகையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஷான் ஸ்நோ என்ற இராணுவத்துறை வல்லுநர், “துல்லியமாக இலக்கைத் தாக்கு வதற்கான (Surgical Strike) ஆற்றலை இந்திய இராணுவம் இன்னமும் பெற்றுவிடவில்லை. அப்படியொரு தாக்குதல் நடத்தியதற்கான விவரங்கள் எதையும் இந்தியா அளிக்கவுமில்லை” என “டிப்ளமாட்” என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் தரவுகளுடன் எழுதியிருக்கிறார்.
செப் 29 தாக்குதலைப் பற்றி இந்திய இராணுவத் தலைமையகம் (DGMO) வெளியிட்ட அறிக்கையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதேயொழிய, கோட்டைக் கடந்து சென்று தாக்கியதாக அந்த அறிக்கை கூறவில்லை. எத்தனை இலக்குகள் தாக்கப்பட்டன என்றோ, என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றோ, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ, கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ எந்த விவரமும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “அடிவாங்கிய பாக். இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடிய மேற்படி விவரங்களை, இந்தியர்களுக்கு ஏன் மறைக்க வேண்டும்?” என்று பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கும் மோடி அரசிடம் பதில் இல்லை.
இருந்த போதிலும் “வெற்றி, வெற்றி” என்று ஊடகங்கள் மூலம் சவுண்டு கிளப்பி, பாக். எதிர்ப்பு தேசவெறியை நாடு முழுவதும் பா.ஜ.க. தூண்டியிருப்பதால், ராகுல் காந்தி முதல் கருணாநிதி வரையிலான அனைவரும் மோடிக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்து விட்டனர். இருப்பினும் நடந்து கொண்டிருப்பது நாடகம் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.
india-pak-caption-1எங்கள் ஆட்சிக் காலத்தில் பலமுறை இராணுவம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நாங்கள் அரசியல் ரீதியில் அதற்கு உரிமை கொண்டாடியதில்லை. இராணுவத்தின் செயலுக்கு மோடி அரசு உரிமை கொண்டாடுவதாலும், பாகிஸ்தான் அதனை மறுப்பதாலும், வீடியோ ஆதாரத்தை வெளியிடுவதுதான் சரியானது என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம். “வீடியோ ஆதாரம் இருக்கிறது, தக்க நேரத்தில் வெளியிடுவோம்” என்று முழங்கிய ராஜ்நாத் சிங் பதிலளிக்கவில்லை. “நம்முடைய இராணுவத்தின் வீரத்தில் நம்பிக்கையில்லாமல் ஆதாரம் கேட்கிறீர்களா?” என்று ரவி சங்கர் பிரசாத் ஆஜராகிறார். “ஆதாரம் கேட்பவனெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” என்கிறார் உமா பாரதி.
“வீடியோ ஆதாரத்தை வெளியிட மோடி அரசு ஏன் அஞ்ச வேண்டும்? அது சொல்லிக் கொள்ளும்படியான ஆதாரமாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பா.ஜ.க.வினர் சொல்வது போல, அது பயங்கரமான தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், அந்த வீடியோ காட்சி பாகிஸ்தான் மக்களின் கோபத்தைத் தூண்டி, அதனைச் சமாளிக்கும் பொருட்டு, பாக். இராணுவம் இந்தியா மீது போர் தொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடும் என்று மோடி அரசு அஞ்சுவதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு அச்சம் இருக்கும் பட்சத்தில், சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி ஊடகங்களில் அன்றாடம் அடித்து விடப்படும் சரக்குகள், ஒரு போருக்கு வழி வகுக்கும் என்று மோடி அரசுக்குத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.
“சவுண்டு மட்டும்தான் வரவேண்டும், சண்டை வரக்கூடாது” என்றுதான் இந்த ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. இருப்பினும் “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்பதற்கு பயங்கரமான வியாக்கியானங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. “இது பாக். இராணுவத்தின் மீதான தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்பும் அல்ல, தீவிரவாதிகளைத் தடுத்து அழிக்கும் நடவடிக்கை மட்டுமே” என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் “துல்லியத் தாக்குதல்” என்று இராணுவம் இதற்குப் பெயரிட்டிருக்கிறது. தாக்குதல் முடிந்த மறு கணமே பாக். இராணுவத் தலைமையையும், சர்வதேச பிரதிநிதிகளையும் அழைத்து, “இந்த நடவடிக்கை இத்துடன் முடிந்து விட்டது” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது மோடி அரசு.
india-pak-protest
காஷ்மீரிலிருந்து இந்தியாவை வெளியேறக் கோரி காஷ்மீர் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்: முற்றுப் பெறாத போர். (கோப்புப் படம்)
அதாவது சண்டை 29 இரவே முடிந்து விட்டது. ஆனால், சவுண்டு மட்டும் ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர் கிஷாலய் பட்டாசார்ஜி கூறுவது போல “இந்த யுத்தம், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தகவல் ஊடகங்கள் வழியே நடத்தப்படும் உளவியல் யுத்தம்.” வல்லரசு இந்தியா குறித்த போதையில் திளைக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்காக, அர்னாப் கோஸ்வாமியைப் போன்ற ஆங்கிலம் பேசும் பார்ப்பன மேட்டுக்குடி லும்பன்கள், டி.வி. ஸ்டூடியோக்களில் நடத்திக் காட்டும் யுத்தம். தினமணி மதியைப் போன்ற அசடுகளை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தும் யுத்தம்.
மற்றபடி நடப்பது சண்டையா, காட்சியா என்று அம்பானிக்கும் அதானிக்கும் தெரியும் என்பதால், இது பற்றி பங்குச்சந்தை அலட்டிக் கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த “சலுகை பெற்ற நாடு” என்ற வணிக அந்தஸ்தை மோடி ரத்து செய்தது குறித்து அந்நாட்டு முதலாளிகளும் கவலைப்படவில்லை. இந்திய பாக். வணிகத்தில் அதிக ஆதாயமடைபவர்கள் இந்திய முதலாளிகள்தான் என்பதால், இதனை ரத்து செய்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.
வெறும் சண்டைக் காட்சியாகவே இருக்கும் நிலையிலும் இது எல்லையோர கிராம மக்களைத்தான் பாதித்தது. 553 கி.மீ எல்லையுள்ள பஞ்சாப் – பாக். எல்லைப்புறத்தில், பத்து கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற 1,871 கிராமங்களிலிருந்து அறுவடைக்கு நிற்கும் பயிர்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் விவசாயிகள்.
“சிப்பாய்களெல்லாம் முகாமில் இருக்கும்போது எங்களை மட்டும் ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்பவர்களிடம், “நாங்கள் கிராமத்தைக் காலி செய்யச் சொல்லவில்லை. உங்களுக்கு உத்தரவிட்டிருப்பது மாவட்ட நிர்வாகம்” என்று கூறுகிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் எஸ்.எஸ்.சர்மா (The Hindu, 5.10.2016). இது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அம்மாநிலத்தின் பா.ஜ.க. கூட்டணி அரசு நடத்தும் இரக்கமற்ற நாடகம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
india-pak-caption-2“எல்லையில் போர் மேகங்கள் சூழ்கின்றனவா, அப்படியென்றால் தேர்தல் நெருங்கி விட்டது என்று பொருள்” என்ற பஞ்சாபி கவிதையை காங்கிரசு கட்சியினரே தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். “பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடங்குவதன் மூலம் உ.பி. தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது மோடியின் திட்டம்” என ஆகஸ்டு மாதத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார் மாயாவதி. இப்படியெல்லாம் பேசினாலும், போர்வெறி மோடிக்கு தரக்கூடிய ஆதாயத்தை எண்ணி எதிர்க் கட்சிகள் அஞ்சவும் செய்கின்றனர்.
“பாகிஸ்தானின் அணு ஆயுதத்தைப் பார்த்து அஞ்சிய காலமெல்லாம போய்விட்டது. அணு ஆயுதப் போர் மூண்டால், பத்து கோடி இந்தியர்கள் ஒருவேளை சாகலாம். அப்புறமும் 110 கோடிப் பேர் மிச்சமிருப்போம். ஆனால், பாகிஸ்தான் என்ற நாட்டைத் துடைத்து ஒழித்துவிடுவோம்” என்று பார்ப்பனக் கொழுப்பெடுத்த சு.சாமி உளற, “போர் என்று வந்துவிட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்” என்று பதிலுக்குப் பிதற்றினார் பாக். இராணுவ அமைச்சர்.
இவையெல்லாம் செயலுக்கு வர முடியாத உளறல்கள் மட்டும்தானா? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எழுப்பி வரும் போர்வெறிக் கூச்சலும், இராணுவ மோதல்களும் அவர்கள் விரும்புவது போல, தேர்தலுக்கு மட்டும் பயன்படும் துருப்புச் சீட்டுகளாக முடிந்து விடுமா அல்லது இந்த சண்டைக்காட்சி அபாயகரமான ஒரு சண்டைக்கு வழி வகுத்து விடுமா? இதற்குத் தீர்மானமான ஒரு பதிலைக் கூற இயலாது.
puthiya-jananayagam-october-2016-kashmirபாகிஸ்தானை மட்டம் தட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தின் காரணமாக ஆத்திரம் கொண்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களோ, அல்லது இந்தியாவிலேயே இருக்கும் அவர்களுடைய ஆட்களோ, ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற அச்சம் பா.ஜ.க. தலைமைக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால் மக்களுக்கு ஏற்படும் அழிவு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகைய தாக்குதல், தங்களுக்கு இந்து வாக்குகளைப் பெற்றுத் தருமா, அல்லது தோல்விக்குத் தள்ளிவிடுமா என்பது மட்டுமே அவர்களது கவலை.
தமக்குக் கடுகளவும் உரிமையில்லாத காஷ்மீரை மையப்படுத்தி இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்தி வரும் இந்தச் சண்டையில் காஷ்மீர் மக்களின் உரிமையை இரு நாட்டு அரசுகளுமே நிராகரிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானை முறியடித்து, காஷ்மீரை இந்தியா தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மோடிக்கும், மோடியைத் தோற்கடிக்க விரும்புகின்ற காங்கிரசு முதல் ஆம் ஆத்மி வரையிலான கட்சிகளுக்குமிடையில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைக்காட்சியாகத் தோற்றம் தரும் தற்போதைய மோதல், சண்டையாக மாறலாம், மாறாமலும் போகலாம். ஆனால், ஒரு உண்மையான சண்டை, உள்நாட்டுப் போர் -ஏற்கெனவே காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. அது நான்கு மணி நேரத்தில் முடிந்து விட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் அல்ல. பல பத்தாண்டுகளாக நடந்து வரும் போர்.
அந்தப் போர் முடிவுக்கு வரும் வரை அல்லது காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, பாகிஸ்தானுடனான போர் அபாயத்திலிருந்து நாம் தப்பிக்க இயலாது. “எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரை இந்திய ஆளும் வர்க்கம் நெடுநாளாகப் பயன்படுத்தி வருகிறது. “காஷ்மீரின் சாபம் என்று இதனை அழைப்பது, உண்மைக்கு நெருக்கமானதாக அமையும்.
– சூரியன்

கருத்துகள் இல்லை: