திங்கள், 10 அக்டோபர், 2016

சசிகலா நடராஜன் தம்பிதுரை பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தினமும் ஆலோசனை.

போயஸ் கார்டனில் வழக்கமாக ஆயுத பூஜை களைகட்டும். கார்டனுக்கு வெளியே இருக்கும் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். வீட்டுக்குள் ஸ்பெஷலாக பூஜைகளையும் நடத்துவார் ஜெயலலிதா. கார்டனில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை பதார்த்தங்கள் கொடுத்து அனுப்புவார்கள். ஜெயா டி.வி.யிலும் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் களையிழந்து காணப்பட்டது கார்டன். எப்படியும் பூஜை செய்வதற்கு, சசிகலா மட்டுமாவது வருவார் என்று கார்டன் ஊழியர்கள் நினைத்தார்கள். அதற்காக, பூஜைக்கான பொருட்களை வாங்கி வைத்திருந்தார்கள். ஆனால் சசிகலா வரவில்லை. கார்டனிலும் சரி... ஜெயா டி.வி.யிலும் சரி... ஆயுத பூஜை கொண்டாடப்படவில்லை.
அதேபோல, அமைச்சர்களின் பங்களாக்களிலும் எங்கும் ஆயுத பூஜை போடப்படவில்லை. ‘அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது ஆயுத பூஜை வேண்டாம்’ என, நேற்று மாலையே தம்பிதுரையிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. இந்தத் தகவலை நேற்றே அமைச்சர்களுக்கு சொல்லிவிட்டாராம் தம்பிதுரை. சில அமைச்சர்களின் உதவியாளர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டார்களாம். இந்த தகவல் தெரிந்ததும் அவர்களும் பூஜைக்கு நோ சொல்லிவிட்டார்களாம்.

இன்று காலையிலிருந்தே அப்பல்லோவுக்கு அமைச்சர்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தார்கள். சிலர் சொந்த ஊருக்குப் போயிருந்த காரணத்தால் பத்து மணிக்குப் பிறகுதான் வந்தார்கள். சசிகலா தங்கியிருக்கும் அறையில் உள்ள டி.வி.யில் ஆயுத பூஜை கொண்டாட்டம் தொடர்பான செய்திகளைப் பார்த்தபோது அவர் கண்கலங்கிவிட்டார் என்கிறார்கள். ‘போன வருஷம் கார்டன்ல எவ்வளவு சிறப்பா ஆயுத பூஜை கொண்டாடினோம். அக்கா எவ்வளவு உற்சாகமாக இருந்தாங்க. இன்றைக்கு ஆயுத பூஜைன்னுகூட அக்காவுக்குத் தெரியாது. தெரிஞ்சா மனசு ரொம்பவும் கஷ்டப்படுவாங்க..’ என்று சொல்லி வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து இதுவரை இரண்டுமுறை மட்டும் போயஸ் கார்டன் போய் வந்திருக்கிறார் சசிகலா. தினமும் ஒருமுறையாவது தம்பிதுரை, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மட்டும் சந்தித்துவிடுகிறார் சசிகலா. அவர்களிடம் மட்டும் சில விஷயங்கள் பேசும் சசிகலா, முதல்வர் உடல்நிலை பற்றி மட்டும் எதுவும் பேசுவது இல்லை” என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது. அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘சசிகலா புஷ்பா எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலா பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறாரே?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது.
அதற்கான பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக டைப்பிங் செய்தது ஃபேஸ்புக். ‘‘டெல்லியில் சசிகலா புஷ்பா பத்திரிகையாளர் சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், சன் நியூஸ் சேனல் தவிர வேறு சேனல்கள் எதுவும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. சன் நியூஸ் சேனலில் லைவ் போய்க் கொண்டிருந்தபோதுதான், அப்பல்லோவில் இருந்த சசிகலாவுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவரும் உடனடியாக அந்தச் சேனலில் சசிகலா புஷ்பாவின் பேட்டியைப் பார்த்திருக்கிறார். அதில் சசிகலா புஷ்பா சொன்னதில் மிக முக்கியமானது, ‘கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா துடிக்கிறார். அவருக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பேச வைக்கிறார். உடனடியாக, அவரை அப்பல்லோவில் இருந்து வெளியேற்ற வேண்டும்' என்று சொன்னதைக் கேட்டு ஆடிப்போய்விட்டாராம் சசிகலா. அப்போது இளவரசி மட்டும் உடன் இருந்திருக்கிறார்.
சசிகலா புஷ்பாவின் பேட்டி சரியாக 40 நிமிடங்கள் போனது. அது முடிந்ததும் சன் நியூஸ் சேனலில் அதே பேட்டி மீண்டும் ஒளிபரப்பானது. அப்போது, அதை முழுமையாகப் பார்த்திருக்கிறார் சசிகலா. அதற்குள் இந்தத் தகவல் முதல் தளத்தில் இருந்த அமைச்சர்களுக்கும் பரவி, அவர்களும் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யில் சசிகலா புஷ்பாவின் பேட்டியைப் பார்த்திருக்கிறார்கள். பேட்டி முடியும்வரை அமைச்சர்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசவில்லை. பேட்டி முடிந்த பிறகும்கூட அமைதியாகவேதான் இருந்திருக்கிறார்கள். சரியாக ஒரு மணியளவில், சசிகலாவின் உறவினர்கள் டாக்டர் சிவகுமார், இளவரசி மகன் விவேக் உள்ளிட்ட சிலர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் நேராக இரண்டாவது தளத்துக்குப் போய், சசிகலா இருந்த அறைக்குள் போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும்மேல் அங்கே ஆலோசனை நடந்திருக்கிறது. 3.30 மணிக்குத்தான் அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். சசிகலா புஷ்பாவின் பேச்சு கட்சிக்கார்களிடம் பெரியளவில் தாக்கத்தை உண்டாக்கிவிடும் என சசிகலா பயப்பட ஆரம்பித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் தொகுதியில் சசிகலாவை போட்டியிடச் சொல்லி அவரது உறவினர்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள். இன்று, இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, ‘இப்போ நான் தஞ்சாவூர் தொகுதியில நின்னால் கட்சிக்காரங்க கொந்தளிச்சுடுவாங்க. அதனால அது எதுவும் வேண்டாம்!’ என சசிகலா சொன்னதாகவும் தகவல் பரவி வருகிறது. டாக்டர் சிவகுமார், விவேக் வந்துபோன பிறகு அமைச்சர்கள் யாரையாவது சசிகலா அழைத்துப் பேசுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் சசிகலா யாரையும் அழைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அமைச்சர்கள் சிலர் மட்டும் தங்களுக்குள் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். அதிமுக-வில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்களுக்கான விதையை விதைத்துவிட்டார் சசிகலா புஷ்பா” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: