செவ்வாய், 11 அக்டோபர், 2016

ஓலாவுடன் கடுமையான போட்டியில் உபேர்!

minnambalam,com : உபேர் நிறுவனம் சீனாவில் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி,
அங்கிருந்து வெளியேறியதை அடுத்து இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வரும் 2018ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் டிரைவர்களைப் பணியில் அமர்த்த உபேர் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓலாவைப் பின்னுக்கு தள்ளி தன்னை முதலிடத்துக்கு கொண்டு செல்ல உபேர் திட்டமிட்டுள்ளது.

தனது சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள உபேர், இந்தியாவில் தனது சேவையை 28 நகரங்களுக்கு விரிவுபடுத்தி, வாரத்துக்கு 55 லட்சம் பயணங்களை மேற்கொண்டு வருகிறது. இவ்வருட ஆரம்பத்தில் உபேர் மேற்கொண்ட பயணங்களை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்.
உபேரின் இந்த நடவடிக்கைகளால் உலகளவில் இந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இதைப்பற்றி உபேர் இந்திய தலைவர் அமித் ஜெயின் கூறுகையில், “உலகளவில் உபேரின் மொத்த சந்தையில் இந்தியா 12 சதவிகிதம் பங்களிக்கிறது. எனவே, இந்தியாவில் எங்களது சேவையை விரிவுபடுத்த தகுந்த இடமாக இந்தியா இருக்கிறது” என்றார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உபேர் உலகளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில்தான் உபேர் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது. இந்த வெளியேற்றத்தையடுத்து உபேர் தனது சேவையை மற்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தனது சேவையில் இரட்டிப்பு வளர்ச்சியை அடைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியா தனது முக்கிய சந்தையாக இருப்பதினால் இங்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதைப்பற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்த்திக் ஹோசனகர் கூறுகையில், “சீனாவில் இருந்து வெளியேறியுள்ள உபேருக்கு, அமெரிக்காவுக்கு வெளியே முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. உலகளாவிய சந்தை மதிப்பை அதிகரிக்கவும், தனது நீண்ட கால வளர்ச்சியைச் சாத்தியமாக்கவும் இந்தியா முக்கிய பங்காற்றும்” என்றார்.
சீனாவில் தனது சேவை தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணம், அங்கு செயல்பட்டு வந்த உள்ளூர் நிறுவனமான ‘தீதி’ ஆகும். அதேபோல இந்தியாவிலும் உபேர் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக ‘ஓலா’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டு இருக்கும் ஓலாவைப் பின்னுக்கு தள்ளுவது அவ்வளவு எளிதல்ல என்பது உபேருக்கு நன்கு தெரிந்திருக்கும்.
சீனாவில் தீதி நிறுவனம் 10 பில்லியன் டாலர் நிதியை திரட்டி, வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவது மற்றும் தனது சேவையை விரிவுபடுத்தியதன் விளைவாக உபேர் தனது இடத்தை இழந்தது. ஆனால் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓலா 1.2 பில்லியன் டாலர் மட்டுமே நிதி திரட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் உபேர் 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்தால் ஓலாவினால் உபேர் அளவுக்கு நிதி திரட்ட முடியாது.
ஓலா நிறுவனர் பாயிஸ் அகர்வாலுக்கு இந்த துறையில் ஆறு ஆண்டு அனுபவம் உள்ளது. இதனால் உள்ளூர் வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது, கட்டணத்தை நிர்ணயிப்பது போன்றவற்றில் இவர் அனுபவம் வாய்ந்தவர். அதேபோல, இந்தத் துறையில் புதுமையை புகுத்துவதிலும் இவர் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். குறிப்பாக, டிரைவர்களுக்கு மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை எளிதாக்கும் முறையில் தனது செயலியை பிராந்திய மொழிகளில் வழங்கியது ஓலா. சில மாதங்கள் கழித்து இந்த முறையை உபேரும் பின்னப்பற்றியது. அதேபோல, ஆட்டோ முதல் விலையுயர்ந்த கார்களான ஜாகுவார் வரை தனது சேவையை ஓலா வழங்கி வருகிறது. அதேபோல உபேரை விட மூன்று மடங்கு அதிகமாக தனது சேவையை வழங்கி வருகிறது ஓலா. சந்தையை வெல்வதற்கு பணத்தை விட அனுபவம் முக்கியமானது என்று ஓலா நிறுவனர் அகர்வால் தெரிவித்தார். அனுபவம், புதுமை போன்ற காரணங்களால் ஓலா முன்னிலையில் உள்ளது.
ஓலாவின் செயல்முறையை உபேர் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து தனது சேவையில் தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தவும், டிரைவர்களைப் பணியமர்த்தவும் உபேர் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. அதேபோல தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக அரசு ஊழியர்களுக்கு தனது சேவையை வழங்க அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
முதன்முதலில் இந்தியாவில் தனது சேவையை அறிமுகப்படுத்திய உபேர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலித்தது. ஆனால், இந்தியாவில் பல்வேறு வாடிக்கையாளர்களிடம் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி இல்லாததால் இந்த முறையை தற்போது மாற்றியுள்ளது. இந்திய மக்களின் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை உபேர் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல, இந்தியாவில் இன்டர்நெட் சேவை முழுமையாக இன்னும் சென்றடையாததைக் கருத்தில் கொண்டு, இன்டர்நெட் வசதி இல்லாமலும் டாக்சிகளை பதிவு செய்யும் வசதியை தனது வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறது. அதேபோல கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் தனியார் வாகனத்தில் பெண் கற்பழிக்கப்பட்டதை அடுத்து பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக தனது செயலியில் அவசர பட்டன் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
இதைப்பற்றி உபேர் இந்தியாவின் தலைவர் ஜெயின் கூறுகையில், “நாங்கள் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தரமான சேவையை வழங்க முயற்சிக்கிறோம்” என்றார். இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்த முயற்சிக்கும் உபேரும், ஏற்கனவே இந்த போட்டியில் முன்னணியில் இருக்கும் ஓலாவும் கடுமையான போட்டியில் உள்ளன. கடந்த மாதம் உபேர் தனது சேவையை செயலி மூலம் வழங்கியதை அடுத்து, ஓலா குறுஞ்செய்தி மூலம் டாக்ஸிகளைப் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதேபோல தனது சேவையை விரிவுபடுத்த ஓலா கார் தயாரிப்பாளரான மஹிந்திரா உடன் ஒப்பந்தம் செய்தது. மறுபுறம் இதே பாணியில் உபேர் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த போட்டி நீதிமன்றம் வரை கூட சென்றுவிட்டது. ஆம், இந்த ஆண்டு தொடக்கத்தில் உபேர் நீதிமன்றத்தில் ஓலாவுக்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தது. அந்த வழக்கின்படி, ஓலா நிறுவனம் போலியான கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் உபேர் டாக்ஸி பதிவு செய்வதால் தங்களுக்கு அதிகளவிலான இழப்பு ஏற்படுவதாக ஓலா மீது உபேர் குற்றம்சாட்டியது. ஆனால், இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுத்தது ஓலா.
ஓலாவின் இந்த செயலால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி தெரிவிக்காத ஜெயின், இதன் மூலம் உபேருக்கு மாதத்துக்கு பல மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சென்ற மாதம் முதன்முறையாக தொலைக்காட்சிகளில் தனது சேவைக்கான விளம்பரத்தை வெளியிட்ட உபேர், இந்த விளம்பரம் தனது சேவையை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கிறது.
இதைப்பற்றி சிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர் ருஷப் தோஷி கூறுகையில், “உபேரின் விளம்பரம் இந்தியாவில் காலூன்ற மிகப்பெரிய கருவியாக இருக்கும். குறிப்பாக முதன்முறையாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களைக் கவருவதற்கு இந்த விளம்பரங்கள் உதவும். இருப்பினும் இந்தியாவில் வளர்ச்சி அடைய கடுமையான நடவடிக்கைகளையும், உறுதியான முடிவுகளையும் எடுக்கவேண்டும்” என்றார். இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அம்சங்களைச் செயல்படுத்தி இந்திய சந்தையில் முன்னணியில் வலம்வர வேண்டும்” என்று ஜெயில் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: சரிதா ராய்
நன்றி: லைவ் மின்ட்
(http://www.livemint.com/Companies/jljItP5FzCAkvtXLwJhcfM/Uber-aims-to-unseat-Ola-in-10-billion-India-ridehailing-ma.html)
தமிழில்: ரிச்சர்ட்சன்

கருத்துகள் இல்லை: