செவ்வாய், 11 அக்டோபர், 2016

அப்பல்லோவுக்கு இரவில் வந்தவர் யார்?

மின்னம்பலம்,காம் : சரியாக மதியம் ஒரு மணியளவில், சசிகலாவின் உறவினர்கள் டாக்டர் சிவகுமார், இளவரசி மகன் விவேக் உள்ளிட்ட சிலர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், நேராக இரண்டாவது தளத்தில் இருக்கும் சசிகலா அறைக்குள் போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அங்கே ஆலோசனை நடந்திருக்கிறது. 3.30 மணிக்குத்தான் அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். சசிகலா புஷ்பாவின் பேச்சு கட்சிக்காரர்களிடம் பெரியளவில் தாக்கத்தை உண்டாக்கிவிடும் என சசிகலா பயப்பட ஆரம்பித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.’ - இது, நேற்று சொன்ன தகவல். அதாவது, சசிகலா புஷ்பா நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில், சசிகலாமீது புகார்களை நேரடியாகவே கொட்டித் தீர்த்துவிட்டார். அதன் பிறகுதான் அப்பல்லோவில் தன் உறவினர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் என்ன பேசினார்கள் என்ற தகவல் எங்கும் கசியவில்லை. வழக்கமாக, கார்டனில் என்ன நடந்தாலும் தனக்கு நெருக்கமான சில நண்பர்களிடம் இளவரசியின் மகன் விவேக் பகிர்ந்துகொள்வார். ஆனால் நேற்று சசிகலாவுடன் நடந்த ஆலோசனைபற்றி அவர் நண்பர்களிடம்கூட எதுவும் பேசவே இல்லை.

சசிகலாவுடன் பேசி முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து மாலை கிளம்பிச்சென்ற விவேக், திரும்பவும் இரவு 10.40 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். விவேக் வந்த காரை காவல் துறை நிறுத்தவில்லை. நேராக மெயின் பிளாக் இருக்கும் வாசலுக்குத்தான் போய் நின்றது. அந்தக் காரில் இருந்து விவேக்குடன் இன்னொரு நபரும் இறங்கினார். அவர் யார் என, அங்கிருந்த அமைச்சர்களுக்கே தெரியவில்லை. தரைத்தளத்தில் நின்றிருந்த சில அமைச்சர்கள் விவேக்கை பார்த்து வணக்கம் சொல்லியிருக்கிறார்கள். தலையை மட்டும் ஆட்டியபடி விறுவிறுவென லிஃப்ட்டுக்குப் போயிருக்கிறார் விவேக். இரண்டாவது தளத்துக்குப் போய் லிஃப்ட் நின்றிருக்கிறது. விவேக்குடன் வந்த நபரை காவல் துறையும் யாரென்றுகூட விசாரிக்கவில்லை. சசிகலா தங்கியிருந்த அறைக்கு அந்த நபருடன் விவேக் போயிருக்கிறார். 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நபருடன் வெளியே வந்திருக்கிறார் விவேக். அந்த நபர் யார்... அவர் எதற்காக சசிகலாவை சந்திக்கப்போனார் என்ற எந்த விபரமும் யாருக்கும் தெரியவில்லை. விவேக் மருத்துவமனைக்கு வரும்போது வழக்கமாகவே காவல் துறையினர் எதற்காகவும் நிறுத்த மாட்டார்கள். நேற்று இரவு, அவரோடு வந்த நபர் யார் என்றுகூட விசாரிக்காமல் இரண்டாவது தளம் வரை அனுப்பினார்கள் என்றால், முன்கூட்டியே அவரின் வருகைபற்றி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள்.
சசிகலா புஷ்பாவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, சசிகலா இயல்பு நிலையில் இல்லை என்கிறார்கள். ‘இப்படி பண்ணிட்டாளே அந்தப் பொம்பளை...’ என்று தொடர்ந்து புலம்பியபடியே இருந்தாராம். அது சம்பந்தமான ஆலோசனை நடத்துவதற்காகத்தான் விவேக் இன்னொரு நபரை அழைத்து வந்தார் என்றும் சொல்கிறார்கள். மன்னார்குடி வட்டாரத்தில் நடக்கும் அத்தனை மூவ்களும் அப்பல்லோ மருத்துவமனை சீக்ரெட்போலவே இருக்கிறது. எந்தவிதத்திலும் அவர்களின் மூவ் வெளியே தெரியக்கூடாது என்பதில் சசிகலா குடும்பத்தினர் கவனமாக இருக்கிறார்கள். சசிகலா, இளவரசி, டாக்டர் சிவகுமார், விவேக் ஆகிய நான்குபேரைத் தவிர அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியது”என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றினையும் போஸ்ட் செய்தது. அந்த ஸ்டேட்டஸ் லொக்கேஷன் கிரீம்ஸ் ரோடு எனக் காட்டியது.

"இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை வெறிச்சோடி இருந்தாலும் கிரீம்ஸ் ரோடு மட்டும் பரபரப்பாகவே இருந்தது. அமைச்சர்கள் வழக்கம்போல 8 மணியில் இருந்தே அப்பல்லோவுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் என அடித்தடுத்து வந்தார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள ரிசப்சனுக்கு பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் மட்டும் போனார்கள். சசிகலா உறவினர்கள் சிவகுமார், ராஜமாதங்கி, விவேக் உள்ளிட்ட சிலர் சசிகலா தங்கியிருக்கும் அறைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஆனால் பன்னீரையோ, எடப்பாடி பழனிசாமியையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சசிகலா தங்கியிருந்த அறைக்கு அழைக்கவோ இல்லை. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்தால் மட்டும் அவர்களிடம், ‘அம்மா நல்லா இருக்காங்க. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்’ என்று சொல்வதற்காக மட்டுமே அவர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இன்று மருத்துவமனைக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போனார். அவர் நீண்டநேரம் பன்னீர்செல்வத்துடன் பேசியபடி இருந்தார். ' அம்மா எப்படித்தான் இருக்காங்க.... சொல்லுங்க!' என்று சரத்குமார் கேட்டிருக்கிறார். ' சரியாகிட்டு இருக்காங்க. உங்களுக்குத் தெரியாததா? நீங்களே இப்படி கேட்கலாமா?' என்று பன்னீர் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு வெளியேவந்த சரத்குமார், 'தொண்டர்கள் மற்றும் மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைவார்' என்று மையமாக சொல்லிவிட்டுப் போனார்.

கருத்துகள் இல்லை: