ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஒரு கல்லில் பலமாங்காய் அடித்தது திமுகவா காங்கிரசா அல்லது இரண்டுமேவா? கலைஞர் Preemtive against whom?

ஆர்.மணி அரசியல் விவரம் அறிந்தவர்கள் எதிர்பார்த்திருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகி விட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்திப்பதென்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முறையான அறிவிப்பும் சனிக்கிழமை, பிப்ரவரி 13 ம் தேதி வெளிவந்து விட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் மு.கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் இந்த தகவலை ஆசாத் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். இதனை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் பின்னர் உறுதிபடுத்தினார். கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்று கேட்கப்பட்டதற்கும், எத்தனை இடங்களை காங்கிரஸ் கோரும் என்று கேட்கப்பட்டதற்கும் ‘இது போன்ற சிறிய விஷயங்களை நாங்கள் பேசவில்லை' என்று ‘அரசியல் பெருந்தன்மை ததும்பி வழியும் வண்ணம்' ஆசாத் பதில் அளித்தார்.
நிச்சயம் இந்த பதில் அடுத்த முறை தமிழகத்தில் அமையும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றே பேசி வந்துக் கொண்டிருந்த தமிழ் நாடு காங்கிரஸ்காரர்களுக்கு ஆப்பு வைத்தது போலவே ஆனது. கடந்த ஒரு மாத காலமாக திமுக பாஜக வுடன் போகப் போகிறது என்றெல்லாம் யூகங்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பு எல்லா யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அதுவும் ஒரு வாரத்துக்கு முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் சென்னையில் மு.க. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தப் பின்னர் இந்த வதந்தி மேலும் வலுப்பெற்றது. தற்போது கூட்டணி விவகாரத்தில் தெளிவு வந்து விட்டது.


இந்தக் கூட்டணி அறிவிப்பின் மூலம் வழக்கமாக கூட்டணிகளை உருவாக்குவதில் ஜெயலலிதா தான் முதலில் இருப்பார் என்ற மாயத் தோற்றமும் விலகியிருக்கிறது. காங்கிரஸூடனான கூட்டணி அறிவிப்பின் மூலம் கருணாநிதி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தி தன் வசப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. இந்த முறை 'அம்மா' வை நிச்சயம் 'ஐயா' முந்திக் கொண்டிருப்பதாகவே தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக எந்தக் கட்சியும் திமுக வுடன் சேரத் தயாராக இல்லையென்ற கருத்தோட்டம் தகர்க்கப்பட்டிருக்கிறது. தேர்தல்களில் வாக்குப் பதிவில் வெற்றி பெறுவதற்கு முதல் படி மக்களின் கருத்தில் இது வெற்றிப் பெறக் கூடிய கூட்டணி, அதாவது வாக்குகளை பெறக் கூடிய கூட்டணி என்ற எண்ணத்தை பதிய வைக்க வேண்டும்.

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனிருந்த பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இந்த முறை இல்லை. தனி மரமாக நின்று கொண்டிருந்த திமுக வுக்கு இன்று ஒரு கூட்டணி கட்சி கிடைத்திருக்கிறது. இதன் மூலம் மற்ற கட்சிகள் வந்து சேர்வதற்கான ஒரு பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வருவாரா, மாட்டாரா என்று விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெளிவானதோர் சமிக்ஞை கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒரு கட்சி கூட்டணியில் வந்து சேர்ந்து விட்டது. முதல் படிதான் முக்கியமான படி. அதனை திமுக ஏறியிருக்கிறது. இனிமேல் விஜயகாந்த் வந்து விட்டாலும் வரா விட்டாலும் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தான் தயாராகி வருவதான சிக்னலை "கேப்டனுக்கு" கருணாநிதி தெளிவாகவே கொடுத்து விட்டார். ஒரு வித வலுவான நிலையில் கேப்டனுடன் பேரம் பேசும் திறனை இந்த கூட்டணி அறிவிப்பு திமுக வுக்கு உருவாக்கி விட்டது.

மூன்றாவதாக குடும்பத்துக்குள்ளும் திமுக தலைவர் ஒரு காரியத்தை சாதித்திருக்கிறார். சனிக்கிழமை நடைபெற்ற குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பில் கனிமொழியும் அமர்ந்திருக்கிறார். இதுதான் முக்கியமானது. ஸ்டாலின் மட்டுமே திமுக தலைவரின் வாரிசு என்ற பரவலான பேச்சு வலுவடைந்திருக்கும் நிலையில், அதிலும் நமக்கு நாமே பயணத்தின் மூலம் ஸ்டாலின் தானே அடுத்த முதல்வர் என்ற கருத்தோட்டத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் கனிமொழிக்கான இடம் கட்சிக்குள் உத்திரவாதப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆசாத் - கருணாநிதி பேச்சு வார்த்தையின் போது முழுவதும் உடனிருந்தார் கனிமொழி. இதனை கனிமொழியையும், அவரது ஆதரவாளர்களையும் திருப்தி படுத்தும் செயலாக மட்டும் கருணாநிதி செய்யவில்லை. மாறாக ஸ்டாலின் மட்டுமே போட்டியில்லாத ஒரே அதிகார மையம் என்ற கருத்தை தகர்க்கவும் செய்யப்பட்டதுதான் இது. இதன் மூலம் தன்னுடைய இருப்பையும் அதாவது திமுக வென்றால் தானே முதல்வர் என்ற கருத்தை நிறுவவதற்கும் சேர்த்துத் தான் கருணாநிதி தானே ஆசாத்துடன் பேச்சு வார்த்தையை நடத்தியிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு அவ்வளவு சுலபத்தில் தான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான்காவதாக வலுவான கூட்டணியின் தொடக்கம் இதுவென்ற கருத்தோட்டத்தை மற்ற கட்சிகளுக்கு குறிப்பாக ஜெயலலிதாவுக்கு கருணாநிதி உணர்த்தியிருக்கிறார். இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா, இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அந்த கருத்தோட்டத்தை, அதாவது வலுவான, வெல்லும் கூட்டணி என்ற கருத்தோட்டத்தை அதாவது ஆங்கிலத்தில் சொல்லுவதென்றால் ‘பர்சப்ஷனை' உருவாக்கியிருக்கிறார். வெற்றி பெறும் குதிரையில் பந்தயம் கட்ட விரும்பும் கட்சிகளுக்கு (தேமுதிக போன்ற கட்சிகளுக்கு) இது உரிய சமிக்ஞையை கொடுக்கும் என்பதுதான் கருணாநிதியின் கருத்தோட்டம்.

;ஐந்தாவதாக திமுக வுடன் பாஜக சேரப் போகிறதென்று வந்து கொண்டிருந்த செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இது முக்கியமானது. காரணம் பாஜக திமுக கூட்டணி என்ற செய்தி வலுப்பெறுவதென்பது, ஏற்கனவே செல்வாக்கை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு மேலும் பாதிப்புகளை உருவாக்கும் என்று உணர்ந்த காரணத்தால்தான் காங்கிசுடனான உறவை புதுப்பித்து, மீண்டும் கூட்டணி என்ற அறிவிப்பை இப்போதே அறிவித்து விட்டார் கருணாநிதி ...... காங்கிரசுடனான கூட்டணி அறிவிப்பு தள்ளிப் போவது பாஜகவுடனான கூட்டணிக்கான நிர்ப்பந்தத்தை குடும்பத்துக்குள் நாட்கள் செல்ல செல்ல மேலும் மேலும் அதிகிருக்கும் என்ற ஆபத்தை உணர்ந்ததால் தான் கருணாநிதி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆறாவதாக நாட்டின் இரண்டாவது பெரிய தேசீய கட்சியான காங்கிரசை தான் சொல்லுவதைக் கேட்டு நடக்கும், கிட்டத் தட்ட விசுவாசமிக்க ஏவலாளியாக மாற்றியிருப்பது. ஆட்சியில் பங்கு நிச்சயம் என்றே முழங்கி வந்த தமிழ் நாடு காங்கிரஸ்காரர்களின் மூக்கை அவர்களது தலைவரை வைத்தே அறுத்து போட வைத்து விட்டார் கருணாநிதி .... இதெல்லாம் சரிதான். இந்த கூட்டணி வெற்றி பெறுமா? அல்லது தோல்வியைத் தழுவுமா என்பதுதான் முக்கியமான கேள்வியாகும். ஒன்பதாண்டு காலம் மன்மோகன் சிங் அரசில் பதவி சுகங்களை அனுபவித்த திமுக மார்ச் 21, 2013 இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்வதாக சொல்லி காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்டது.

;இவை எதற்கும் பதில் இல்லை. காரணம் 2013 ல் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு காரணம் இலங்கை தமிழர் விவகாரம் என்பது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் ... நாடு முழுவதிலும் செல்வாக்கை வேகமாக இழந்து வந்து கொண்டிருந்த காங்கிரசுடன் 2014 ல் அதாவது ஓராண்டு கழித்து வரவிருந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேருவதிலிருந்து தப்பிக்கவே கருணாநிதி மார்ச் 21 2013 ல் அந்த முடிவை எடுத்தார். ஆனாலும் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக மண்ணைக் கவ்வியது என்பது வேறு கதை. இப்போது கிட்டத் தட்ட தமிழக அரசியலில் எந்தவோர் கட்சியும் சேர அஞ்சி ஓடும் நிலையில், அதாவது அரசியல் தீண்டாமையை அனுபவித்து வருவதால், மீண்டும் காங்கிரசுடன் சேர்ந்திருக்கிறார் தமிழினத் தலைவர். சீண்டுவார் யாருமில்லாத காங்கிரசுக்கோ இது ஜாக்பாட் தான். இந்தக் கூட்டணி வெற்றிக் கனியைப் பறிக்குமா? இது தேமுதிக வின் முடிவைப் பொறுத்துத் தான் அமையப் போகிறது. இது சுலபமானது. திமுக வின் வாக்கு வங்கி தற்போது 28 லிருந்து 30 சதவிகிதமாக இருக்கிறது. தேமுதிக வின் 5 சத விகிதம், காங்கிரசின் 4 சதவிகிதத்தை கூட்டினால் இது கிட்டத் தட்ட 40 சதவிகிதத்தை எட்டும். அரசுக்கு எதிரான வாக்குகள், நிச்சயம் நான்கிலிருந்து ஐந்து சதவிகிதமாக இருக்குமென்பதால் இது வெற்றிக் கூட்டணியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் ஒரு சாராரின் கருத்து, இதைத்தான் திமுக வுன் நம்பிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், காங்கிரசுக்கு ஒவ்வோர் தொகுதியிலும் இருக்கும் சில ஆயிரம் வாக்குகள் வெற்றிப் பெற துடிக்கும் திமுக வுக்கு மிக மிக முக்கியமானவை. தனியாக நின்றால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும். ஆனால் . 1969 ல் அண்ணா மறைவுக்குப் பிறகு 1971 ல் நடைபெற்ற சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்த கருணாநிதி 30 மக்களவைத் தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கி, 10 ல் மட்டுமே திமுக வை போட்டியிட வைத்தார்.

அதில் பலருக்கும் இன்று மறந்து போன ஒரு விஷயம் 1971 சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட - ஆம் - ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை - 30 மக்களவைத் தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க கருணாநிதி போட்ட இந்த கண்டிஷனை அன்று இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டு 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் போட்டியிடாமல் திமுக விடம் சரணாகதியடைந்தார் என்பது வரலாறு. பின்னர் இந்த உறவு 1975 ல் அறுந்து 1976 ல் திமுக அரசு டிஸ்மிஸ் ஆனது. ஆனால் 1980 ல் மீண்டும் திமுக காங்கிரஸ் உறவு வந்தது. நேருவின் மகளே வா, நிலையான ஆட்சியை தா என்ற கோஷத்தை எழுப்பினார் கருணாநிதி. இந்த உறவு 1983 ல் அறுந்தது. அதன் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து 2004 ல் மீண்டும் திமுக காங்கிரஸ் உறவு அரும்பியது. ஒன்பதாண்டுகள் தொடர்ந்த இந்த உறவு 2013 ல் மீண்டும் அறுந்தது. தற்போது மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் மலர்ந்துள்ளது 1969 முதல் கடந்த 47 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் காங்கிரசுடன் திமுக உறவு கொண்டிருந்தது. 1983 ல் அறுந்த உறவு மீண்டும் ஏற்பட 21 ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்த முறை மூன்றே ஆண்டுகளில் உறவு ஏற்பட்டுள்ளது. 1983 ல் அறுந்த திமுக காங்கிரஸ் உறவு அதிகாரபூர்வமாக மலர்ந்தது 2004 பிப்ரவரி 13. இந்த முறை 2013 ல் அறுந்த உறவு மீண்டும் மலர்ந்ததும் அதே பிப்ரவரி 13. ஆம். 2004 பிப்ரவரி, 13 ம் நாளன்றுதான் சோனியா காந்தி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி பற்றிய முறையான அறிவிப்பும் வந்தது. அது மக்களைவைத் தேர்தல் கூட்டணி. 2004 பெற்ற வெற்றியை இந்த முறை திமுக காங்கிரஸ் கூட்டணி பெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அது அவ்வளவு சுலபமானதுமல்ல. காரணம் 2004ல் 2ஜி இல்லை, குடும்ப அரசியலின் கோரத் தாண்டவம் இப்போது போல அப்போது இல்லை ... இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதென்பது அடுத்த இரண்டரை மாதங்களில் ஜெயலலிதா செய்யும் தவறுகளில் தான் இருக்கிறது ஆம். ஜெயலலிதா வின் தவறுகளை நம்பியும் இந்தக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கிறதென்றே கூறலாம். அந்த வகையில் பார்த்தால் கருணாநிதியும், சோனியா காந்தியும் தங்களது கூட்டணி வெற்றிக்கு ஜெயலலிதாவின் ‘தயவை' நாடி நிற்கிறார்கள் என்றே நாம் சொல்லலாம்......

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: