ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

தமிழ்நாட்டுக்கு ஐந்து தலைநகரம்! சீமான் தேர்தல் அறிக்கை...

சென்னையை கணினி தலைநகராகவும், திருச்சியை நிர்வாக தலைநகராகவும், கோவையை வர்த்தக தலைநகராகவும், மதுரையை பண்பாட்டு தலைநகராகவும், கன்னியாகுமரியை தொல்லியல் தலைநகராகவும் ஆக்குவோம்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். இதனையடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 வேட்பாளர்களில் 42 பெண்களும், ஒரு திருநங்கையும் இடம்பெற்றுள்ளனர். சீமான் கடலூரில் போட்டியிடுகிறார். கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நேற்று 234 வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களாகிய நாம், வந்தாரை ஆள வைத்து நம் பெருந்தன்மையால் பிழை செய்து விட்டோம். எனவே இனிமேல் எம் சொந்தங்களை ஆள வைப்போம். மொழிப்போரால் ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ் மொழியை காக்க எதுவும் செய்யாததால் தான், ‘நாம் தமிழர்’களாகிய நாம் வந்தோம். தமிழர்களுக்கு எதிரி ஆரியர்கள் இல்லை, தமிழர்களாகிய நமக்குள் உள்ள சாதியும், மதமும் தான்.
சாதி ரீதியாக எத்தனை காலம் தான் பிரிந்து கிடப்பது? நாம் தமிழால், நாம் தமிழராய் இணைவதைத்தவிர வேறு வழியில்லை. எங்கள் திருநாட்டில் எங்கள் நல்ல ஆட்சி வரப்போகிறது. எங்கள் ஆட்சியில் தலைநகரை அல்ல, தமிழ்நாட்டையே மாற்றுவோம். சென்னையை கணினி தலைநகராகவும், திருச்சியை நிர்வாக தலைநகராகவும், கோவையை வர்த்தக தலைநகராகவும், மதுரையை பண்பாட்டு தலைநகராகவும், கன்னியாகுமரியை தொல்லியல் தலைநகராகவும் ஆக்குவோம்.
நீர் வளத்தை பெருக்குவோம். வேளாண்மையையும், ஆடு மாடு வளர்க்கும் தொழிலையும் அரசு தொழிலாக்குவோம். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்போம். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்போம்.தமிழை பயிற்று மொழியாக்குவோம், ஆங்கிலம், இந்தி உள்பட அனைத்து உலக மொழிகளையும் விருப்ப மொழியாக கற்க வைப்போம். தமிழர்களை உலகில் உள்ள எல்லா மொழிக்காரர்களுடனும் தொடர்பு கொள்ளும் திறமையுடையவர்களாக்குவோம். 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை மாற்றிகாட்டுவோம். தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.உங்கள் அன்புக்குரிய பிள்ளைகளாகிய நாங்கள் முதல் முதலாக தேர்தல் களத்தில் நிற்கிறோம். கேரள மாநிலம் தேவிகுளம் மற்றும் தமிழகத்தில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இப்போது திமுகவுடன் காங்கிரஸ் கூட்டு வைத்தது எதிர்பார்த்ததுதான். அவர்களுடன் தேமுதிகவும் சென்று விடும். தமிழனுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் என்று கூறி விட்டு இப்போது எப்படி திமுகவால் கூட்டு வைக்க முடிகிறது? ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தற்போதுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது என்பதாலும், தமிழருக்காக எத்தனை வாக்குகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கவுமே தனித்து களம் காண்கிறோம்” என்று பேசினார்.    aanthaireporter.com

கருத்துகள் இல்லை: