வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தினமலர்: சட்டசபையில் சபரீசன் விவகாரம்.....யார் இந்த சபரீசன்?

சட்டசபையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
மார்கண்டேயன் பேசியதால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். 'சபரீசன் குறித்து, அவர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோஷமிட்டபட்டி வலியுத்தினர். சபையில், கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. இதனால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள், கருணாநிதியிடம் விளக்கினர். அதைத் தொடர்ந்து, 'இனி சபை நடவடிக்கைகளில் தி.மு.க., பங்கேற்காது' என, முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னணி குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருணாநிதி பேசுகையில், 'அ.தி.மு.க., தரப்பு, கடந்த ஐந்தாண்டுகளாக, என்னைப் பற்றியும்; குடும்ப பெண் உறுப்பினர்கள் குறித்தும் சபையிலும்; வெளியேயும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக என்னை பற்றி, 'தள்ளுவண்டி சண்டியர்' என, குறிப்பிட்டனர்.

அப்போதெல்லாம் பெரிய அளவு அமளியில் ஈடுபடாத தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், இப்போது, ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து விமர்சித்தனர் என்றதும், பொங்கியது ஏன்?' என, ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.இதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. இந்த விரக்தியை அடுத்தே, சட்டசபை கூட்டத்துக்கே போக வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்தார்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க.,வில் சபரீசன் பங்கு என்ன?

சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன் பற்றி, பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது, சபரீசன் குறித்து, தமிழக சட்டசபையில் விவாதம் நடக்கும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது.

பிரம்மாண்ட மாளிகை கட்டி...சபரீசன் செயல்பாடுகளை நன்கு அறிந்த, தி.மு.க., இளைஞர் அணி மாநில நிர்வாகி கள் சிலர் கூறியதாவது:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சபரீசன்; முதலியார் வீட்டு இளைஞர். சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டாலின் மகள்
செந்தாமரையை காதலித்து மணந்தார்; சில மாதங்கள், தனிக் குடித்தனம் நடத்தினார்.

முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், சென்னை, செனடாப் சாலையில், பிரம்மாண்ட மாளிகை கட்டி குடியேறிய உடன், அவருடனேயே வந்து தங்கினார். துவக்கத்தில், ஸ்டாலின் செல்வாக்கை பயன்படுத்தி, அரசில் சிறிய சிறிய வேலைகளை மட்டும் செய்து கொண்டிருந்ததார். பின், தி.மு.க.,வில் உள்ள அனைத்து தரப்பினருட னும் பழகத் துவங்கினார்.

மாமனார் துணை முதல்வராக இருந்ததால், வீட்டுக்கு வரும் அதிகாரிகளுடனும் பழகினார். இப்படி ஆட்சி அதிகாரத்தின் அத்தனை நுணுக்கங்களையும், கொஞ்சம் கொஞ்சமாக கற்ற சபரீசன், 2011 தேர்தலில், முதன் முதலாக, தன்னை அரசியலுக்குள் நுழைத்தார்.

மாமனார் ஸ்டாலினை, அடுத்த முதல்வராக முன்னிலைப்படுத்த வேண்டும் என, அப்போதே ஆசைப்பட்டார். ஆனாலும், அன்றைய சூழ்நிலை, தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லாததால், அந்த விஷயத்தில் வேகமாக களம் இறங்கவில்லை. அவர் அடக்கி வாசித்தது போலவே, தி.மு.க.,வும் தேர்தலில் தோல்வி அடைந்தது.

அதன்பின், சபரீசன் வேகமாக களம் இறங்கினார். மாமனார் ஸ்டாலினை, அரசியல் களத்தில், வேகமாகவும், வித்தியாசமாகவும் செயல்பட வைத்து, மொத்த கட்சி யையும், ஸ்டாலினின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை கையில் எடுத்தார். அன்றாடம் எப்படி அழகுப்படுத்திக் கொள்வது என்பதில் ஆரம்பித்து, தலைக்கு, 'டை' அடிப்பது; என்ன கலர் சட்டை போடுவது என்பது வரை, ஸ்டாலினை தன் விருப்பப்படி, புது மனிதராக மாற்றினார்.

கடந்த, 2015 லோக்சபா தேர்தலின் போது, சபரீசன் முழுமையாக களம் இறங்கி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நேரடியாகவே கவனம் செலுத்தினார். 'தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும்' என, ஸ்டாலின் மூலம், தலைமையை வற்புறுத்தி செயல்படுத்தினார். ஆனால், அவரது துரதிருஷ்டம், கட்சி தோல்வி அடைந்தது. ஆனாலும், ஸ்டாலினும், சபரீசனும் கவலைப்படவில்லை. கட்சி தோல்வி அடைந்தாலும், கட்சியை முழுமையாக ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததில் சந்தோஷம் அடைந்தனர்.

அதன் பின், சட்டசபை தேர்தலுக்கு ஸ்டாலினையும், தி.மு.க.,வையும் தயார்படுத்தும் வேலையில் இறங்கிய சபரீசன், இதற்காக உருவாக்கிய திட்டம் தான், 'நமக்கு நாமே' பயணத் திட்டம். தமிழகம் முழுவதும், ஸ்டாலின் விதம் விதமான, 'கெட் அப்'களில் சென்று, பல தரப்பட்ட மக்களையும்சந்தித்து, பிரபலப்படுத்த உதவினார்.

இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய வைத்ததோடு, இதை செயல்படுத்துவதற்கு என்று, தனியாக ஒரு குழுவையும் ஏற்படுத்தினார். சமூக வலைதளம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப விஷயங்களிலும் கவனம் செலுத்தி, கட்சியை பல நிலைகளிலும் எடுத்துச் சென்றதில், சபரீசன் பங்கு அலாதியானது.சாதுர்யமான செயல்பாடுகள்இதன் அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு முதல், தேர்தலை எப்படி சந்திப்பது ent
என்பது வரையில், பல வகையிலான திட்டங் களை கையில் வைத்திருக்கும் சபரீசன், அதற்கான முனைப்புகளில் உள்ளார்.இது பொறுக்காமல் தான், ஸ்டாலினின் மூத்த சகோதரர் அழகிரி, கட்சியையும், ஸ்டாலினையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்படி சபரீசன் செயல்பாடுகளால், கட்சிக்கு பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், அவரது செயல்பாடுகளால் முக்கியத்துவம் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் சிலர், கட்சிக்கு வெளியேயும் சபரீசனை கொண்டு சென்ற தன் விளைவு தான், சட்ட சபை வரையில், அவர் குறித்த விமர்சன பேச்சு கிளம்பியது.

சபரீசனின், சாதுர்யமான செயல்பாடுகள், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எரிச்சலில், அ.தி.மு.க.,வினர் அவரை விமர்சிக்க துவங்கி உள்ளனர்.இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.< நிதி உதவி :தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் அனைத்து துறையினரும், அ.தி.மு.க., ஆட்சியை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால், தமிழக அரசோ, முதல்வர் ஜெயலலிதாவோ, இவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தினால் எங்களுக்கு என்ன என்ற பாணியில், ஏனோதானோ என நடந்து வருகின்றனர். அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான, வேலுாரை சேர்ந்த குப்பு சாமி என்ற மாற்றுத் திறனாளிக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார் என்ற துயர செய்தி வந்துள்ளது. உரிய நேரத்தில் அரசு சார்பில் அழைத்து பேசியிருந்தால் குப்புசாமி மறைந்திருக்க மாட்டார்.குப்புசாமியின் மறைவுக்கு, தி.மு.க., சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் தி.மு.க., அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படும்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: