சனி, 20 பிப்ரவரி, 2016

2,000, 'டாஸ்மாக்' கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


சட்டசபை தேர்தல் நெருக்கடியால், கோவில், பள்ளி அருகிலுள்ள, 2,000, 'டாஸ்மாக்' கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மதுவிலக்கை அமல்படுத்துமாறு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், 'அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருப்பதால், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சமீபத்தில் தெரிவித்தார். < இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், பள்ளி, கல்லுாரி, கோவில்களுக்கு அருகிலுள்ள கடைகள், மது விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவை அடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 504 டாஸ்மாக் கடைகள், 2013ல்மூடப்பட்டன. இதேபோல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, பிப்., 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி, பலரும் போராடி வருகின்றனர். ஆனால், கடைகளை மூட அரசு அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் கடைகளை மூடாத நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சியினர் சென்றால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடை; மக்கள் எதிர்ப்பு உள்ள கடை; தினமும், 50ஆயிரம் ரூபாய் கீழ் விற்பனையாகும் கடை என, 2,000 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது.மூட வேண்டிய கடைகள் குறித்த விவரம் சேகரிக்கும் பணி, முடியும் நிலையில் உள்ளது. டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு, கடைகள் மூடுவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஜெ., வீடு அருகில் கணக்கெடுப்பு:
சென்னை மாநகராட்சி, 118வது வார்டில், முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ளது. இந்த வார்டில், அண்ணா சாலையை ஒட்டி உள்ள, ஒரு டாஸ்மாக் கடைக்கும், முத்தையா தெருவில் இருக்கும் பள்ளிக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பது, நேற்று கணக்கெடுக்கப்பட்டது. இதேபோல், பல இடங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

- நமது நிருபர்   தினமலர்.com

கருத்துகள் இல்லை: