திங்கள், 11 ஜனவரி, 2016

தமிழ்நாட்டை கொள்ளை அடித்து பார்பனர்களை குடியேற்றிய திருமலை நாயகனுக்கு ஜெயலலிதா அரசு விழா?

சென்னை: தமிழர்களுக்கு எதிராக ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். அவருக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மக்கள் மாநாடு கட்சி என்ற கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான சக்திவேல் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தமிழருக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மன்னர் திருமலை நாயக்கர் என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது. திருமலை நாயக்கர் ஆட்சியிலே தான் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தெலுங்கர்கள் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள்.
ஆட்சி நிர்வாகம் முழுமையாக தெலுங்கர் மயமாக்கப்பட்டு, தெலுங்கு ஆட்சிமொழியாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. சமஸ்கிருத, தெலுங்கு மொழிகள் வளர்க்கப்பட்டதும் தமிழ் மொழி பின்னுக்கு தள்ள‌ப்பட்டதும் இவரின் ஆட்சியிலே தான். தமிழரின் பண்பாடுகளை சிதைத்து, சமஸ்கிருத வழிமுறைகளை கோயில்களில் புகுத்தியவர் திருமலை நாயக்கர். இவரின் ஆட்சியிலே தான், கோயில்களில் தமிழ் வள்ளுவர்கள் பூசாரிகளாக இருந்ததை மாற்றி பார்ப்பனர்களை அர்ச்சர்களாக மாற்றி, தமிழையும் தமிழர்களையும் தமிழ்க் கோவில்களில் இருந்து விரட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர். இப்படி, திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பூமியில் தமிழருக்கு எதிராக ஆட்சிப் புரிந்த, தமிழர்களை அடிமைப்படுத்திய பல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே இருக்க‌லாம். அத்தகைய ஒருவருக்கு தமிழ் மண்ணில் அரசு விழா என்பது தமிழர்களை கேவலப்படுத்தும் செயலாகும். உலக வரலாற்றில் அடிமைப்படுத்தி ஆண்டவர்களை, அவர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற எந்த இனமும் கொண்டாடியது இல்லை. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களில் பலர் சிறந்த ஆட்சியை தந்து இருக்கிறார்கள் என்பதற்காக அத்தகைய ஆங்கிலேயர்களுக்கு கூட இந்தியாவில் விழா எடுக்க முடியாதோ அதே போன்று தான் தமிழர்களை அடக்கி ஆண்ட திருமலைநாயக்கருக்கு தமிழகத்தில் அரசு விழா கூடாது. இத்தகைய திருமலைநாயக்கரின் நினைவைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தைப்பூசத் திருநாள் அரசு விழாவாக மதுரையில் கொண்டாடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஆழ்ந்த கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை மக்கள் மாநாடு கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் சக்திவேல்.

//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: