புதன், 13 ஜனவரி, 2016

தடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை? மீறக்கூடிய சாத்தியம் அதிகமாக தெரிகிறது....வாழ்த்துக்கள்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு வாய்ப்பு குறைவு! மூத்த வழக்கறிஞர் விஜயன்:பிராணிகள் வதைச் சட்டப் பிரிவு, 3, 11 மற்றும், 22ன் படி, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. சட்டப் பிரிவு - 3, 11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கின்றன. சட்டப் பிரிவு - 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில், 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது; 3 மற்றும், 11வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும், 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சதியில் உச்ச நீதிமன்றமும் பங்கு பெற்றுள்ளது.....எல்லா கேசும் வருடக் கணக்காக இழுப்பாங்க....ஆனா, இந்த வழக்கு மட்டும் ஒரே நாளில் விசாரணைக்கு வருது, தீர்ப்பு கொடுக்குறாங்க?...எல்லாமே முன்கூட்டி திட்டமிட்ட மாதிரியே இருக்கு?....
மத்திய அரசு வெளியிட்ட அரசாணை முழுமையாக இல்லை. மேலும், அரசாணை மூலம், உச்ச நீதிமன்ற உத்தரவை தடுக்கவும் முடியாது. ஜல்லிக்கட்டை தொடர்ந்து தடையின்றி நடத்த, அவசர சட்டத்தை தற்போது பிறப்பிக்க முடியாது.பார்லிமென்டில் புதிய சட்டம் இயற்றி, பிராணிகள் வதை குறித்த சட்டப் பிரிவுகளில் இருந்து, காளைக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதற்கு, உடனடி சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை; எனவே, இப்போதைக்கு வாய்ப்பு குறைவு.


அவசர சட்டமே தீர்வு!
மூத்த வழக்கறிஞர் வில்சன்:பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில், உடனடியாக உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அதற்கான அவசர சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வரலாம். இந்த சட்ட திருத்தத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில், புதிய பிரிவுகள் சேர்க்க வேண்டும். அதில், நிபந்தனைகளும் விதிக்கலாம்.மத்திய அரசுக்கு அவசர சட்டம் கொண்டு வர அதிகாரம் உள்ளது. அதை எதிர்த்து வழக்கு தொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தடை விதிப்பது அரிது.

தவறு நடந்தது எங்கே?
பிராணிகள் நல ஆர்வலர் ராதா ராஜன்:ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன், காட்சிப்படுத்த கூடாத பிராணிகள் பட்டியலில் இருந்து, காளையை விடுவிக்க, அப்போதைய காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால், இதை ஏற்காமல், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்த உத்தரவில், 'இதில் மாற்றமோ, திருத்தமோ, மத்திய அரசு செய்ய விரும்பினால், பிராணிகள் நல வாரியத்தை ஆலோசிக்க வேண்டும்' என, குறிப்பிட்டது.இதை மத்திய அரசு செய்யாமல், தன்னிச்சையாக ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டது. அதில், 'காட்சிப்படுத்த தடை விதிக்கப்படும் பட்டியலில் இருந்து, காளையை நீக்கவில்லை; மாறாக, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்' என, குறிப்பிட்டு உள்ளது.இதுவே தவறானது; தடை செய்யப்படும் பட்டியலில் இருந்து, காளையை நீக்காமல், ஜல்லிக்கட்டு காளைக்கு விலக்கு என்பது, சட்ட ரீதியாக ஏற்க முடியாதது. இந்த காரணத்தால், மத்திய அரசின் அரசாணை, தடை செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல், அரசியல் அழுத்தங்களுக்காக, ஓர் அரசாணையை வெளியிட்டது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, அரசாணை மூலம் நிறுத்துவது என்பது தவறான முன்னுதாரணம்; இதை, மத்திய அரசுசெய்திருக்கக் கூடாது.

பிரதமருக்கு ஜெ.,மீண்டும் கடிதம்:
'ஜல்லிக்கட்டு நடத்த, உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
கடித விவரம்:பொங்கல் பண்டிகை, 14ம் தேதியில் இருந்து துவங்குகிறது. கிராமப் பகுதிகளில், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதால், அவற்றை காண ஆவலோடு உள்ளனர்.எனவே, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

அவசர சட்டம்கருணாநிதி ஆதரவு:
தி.மு.க., தலைவர் கருணாநிதி:ஒரு நீதிமன்ற தீர்ப்பை, அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின்படி, ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ, அவசர சட்டத்தின் மூலம், அந்த தீர்ப்பின் அடிப்படையை மாற்றி அமைக்க முடியும் என, பல்வேறு தீர்ப்புகளில், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அணுகுமுறையை, மத்திய அரசு ஏன் பின்பற்றவில்லை என, தெரியவில்லை. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, 'அரசியல் அமைப்பு சட்டத்தின், 7வது பிரிவின்படி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை, மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டத்தை பிறப்பிக்கும்படி, கவர்னரிடம் கேட்பதே போதுமானது' என, தெரிவித்திருக்கிறார்; அவரது கருத்தை, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என, கேட்டுள்ளார்; அதை தான் தமிழக கட்சிகளும் கூறியுள்ளன. எனவே, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

விரைவில் சட்ட திருத்தம்!
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்:ஜல்லிக்கட்டு போட்டி, நம் பாரம்பரிய விளையாட்டு. காலம் காலமாக தமிழர்களால் விளையாடப்படும் வீர விளையாட்டு. இதற்கும், தொல்லியல் நாகரிகத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதனால், இதை தொல்லியல் ரீதியாக பார்த்திருக்க வேண்டுமே தவிர, மேலெழுந்தவாரியாக அணுகி இருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையால், ஒட்டுமொத்த தமிழகமும்,சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும், தமிழக அரசு செய்து விட்டது. இப்போது, தடை என்றதும், அதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர் என, தெரியவில்லை. மீண்டும் ஜல்லிக்கட்டை சட்டரீதியான பிரச்னைகள் இல்லாமல் நடத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்க, மத்திய அரசை வலியுறுத்த

ஆரம்பித்துள்ளேன். இதற்காக பிரதமர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என, எல்லாரையும் சந்தித்து, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கப் போகிறேன். விரைவில், சட்டத் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.
கவலையை விடுங்கள்!
நான் ஒரு உபாயம் சொல்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு தான் கோர்ட் தடை விதித்துள்ளது. அதனால், 'பொங்கல் விளையாட்டு' என்ற பெயரில், அதை நடத்திவிட்டு போகலாமே; அந்த பெயர் கொண்ட விளையாட்டுக்கு தான் தடையில்லையே! - மார்க்கண்டேய கட்ஜு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி


வாடிவாசலில் கறுப்பு கொடி:
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளதால், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கூலமேடு கிராமத்தில், வாடிவாசல் பகுதி பொதுமக்கள் கண்களில், கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். பொங்கலை ஒட்டி, 18ம் தேதி, இங்கு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நேற்று மாலை, 3:00 மணியளவில், வாடிவாசல் பகுதியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், ஊர் முழுவதும், கறுப்பு கொடி கட்டியும், தங்களது கண்களில் கறுப்பு துணி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்; பெண்கள், ஒப்பாரி வைத்து அழுதனர்.மாடுபிடி வீரர்கள், 10 பேர், பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உள்ள, 60 அடி உயர மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மீது ஏறி, தற்கொலை செய்வதாக, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அனுமதி கேட்டு படையெடுப்பு:
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில், 'கலெக்டரிடம் அனுமதி பெற்று, ஜல்லிக்கட்டு நடத்தலாம்' என கூறியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர், கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்க துவங்கி உள்ளனர்.வேந்தன்பட்டி, ராப்பூசல் மற்றும் ஆலத்துார், வடமலப்பூர், வன்னியம்பட்டி மக்கள், 14, 15, 17 ஆகிய தேதிகளில், அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, நேற்று மனு கொடுத்தனர்.

திட்டமிட்டபடி மஞ்சு விரட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வீரளூர், மேல் சோழங்குப்பம், பாலுார் மேல் பாலுார், காந்தப்பாளையம், ஆதமங்கலம் புதுார் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு, மஞ்சு விரட்டு விழா நடத்துவதற்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகளை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.தடை உத்தரவு குறித்து, வீரளூர், மேல்சோழங்குப்பம், காந்தப்பாளையம், ஆதமங்கலம் புதுார் கிராம மக்கள் கூறுகையில், 'நீதிமன்றம் தடை விதித்தாலும், திட்டமிட்டபடி பொங்கல் விழாவில், மஞ்சு விரட்டு விழா நடத்துவோம். மீறி போலீசார் கைது செய்தாலும், சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம்' என அறிவித்துள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: