சனி, 16 ஜனவரி, 2016

எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று..மதிமாறன்

மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும்? இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ?
அவுரும் வழக்கம்போலச் சிறப்பா வாசிக்கிறாரு.. பாடலும், பின்னணி இசையும் ஒட்டல. துறுத்திகிட்டு நிக்குது. குறிப்பா கர்நாடக சங்கீத பாணியிலான பாடல்கள்.

எனக்கென்னமோ அவுருக்கு இனிமேலும் இதெல்லாம் வேண்டாத வேலையாதான் படுது.
பேசாமல்.. சர்வதேச இசை ஆல்பம் தயாரிப்பில் ஈடுபடலாம். இன்னும் எதுக்கு.. இவுங்களோடேயே மல்லுக்கட்டிக்கிட்டு.
*
கரகாட்ட பெண் கலைஞர்கள் ஆட்டத்தின் போது, குட்டையாக உடை உடுத்துகிறார்கள் என்பதற்காக, பாடல் காட்சிகளில் கீழே சப்பனம் போட்டு உட்கார்ந்து கொண்டு அவர்களின் கால்களுக்கு இடையே சிக்கி சிக்கித் தவிப்பதும்,
கிட்டே போய்த் தொடைகளுக்கு நடுவே எட்டிப் பார்ப்பதுமாகத் தன் ஆண் பார்வையாளர்களுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறது கேமரா?
ஒப்பிட்டால், கங்கை அமரன் மகா கலைஞன் தான். ‘தாரை தப்பட்டை’யில் வந்துபோல், ஒரே ஒரு ஷாட் கரகாட்டக்காரனில் பார்த்திருக்கவே முடியாது.
*
போஸ்ட்மார்ட்டம் செய்கிற பணியில் இருக்கிற தோழர்கள் மிகப் பரிதாபத்திற்குரியவர்கள். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பிணத்தைக் கூறு போட்டு அறுக்கிற வேலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற கொடூரம்.
ஆனால் தாரை தப்பட்டையோ, பார்வையாளர்களிடம் அவர்களையே கொடூரமானவர்களாகச் சித்தரிக்கிறது.
*
‘நாயகி சூறாவளி யை திட்டமிட்டுத் திருமணம் செய்து கொள்கிறான் வில்லன். எதுக்காக அதைச் செய்கிறான் என்று சொல்ல வந்த இயக்குர்.. பிறகு அதை மறந்துட்டாரோ.. கடைசி வரை அதைச் சொல்லவே இல்லையே?’ – கேட்டான் உடன் படம் பார்த்த சு.ம. கவின். (Kavin Smk)
எனக்குத் தெரியல. இயக்குநர் பாலாவிற்குத் தெரியுமா?
*
தன் குழுவிலிருந்து ஒருவர் தன் தங்கையுடன் தனியாகச் சென்று சினிமா பாடலுடன் ஆபாசமான வார்த்தைகளும், அசைவுகளுமாக ஆடி பிழைப்பதைப் பார்த்த நாயகன்;
‘இதெல்லாம் ஒரு பொழப்பா’ என்று கடுமையாகத் திட்டுகிறார்.
ஒரு ஊரின் நடுவில் அதுபோல் ஆடி பிழைக்கிற அவரையே கடுமையாகத் திட்டுகிறாரே நாயகன்,
அவர் தன் தங்கையுடன் ஆடுகிற அந்த ஆபாச ஆட்டத்தை அப்படியே தனது படத்தில் வைத்து, உலகம் முழுவதும் கொண்டு போயிருக்கிற தனது இயக்குநர் பாலா வை திட்டினால் எப்படித் திட்டுவார்? (நாயகனுக்குக் கோபம் வந்தால் பெண்களையே ‘அரிப்பெடுத்தாடி..அலையிற..’ என்பார்)
*
கொலைக்காரனை கருணாமூர்த்தி ன்னு கூப்பிடறமாதிரி.. எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று.
படத்துக்குப் பொருத்தமில்லாமல் பெயர் வைக்கிறதுல ஆஸ்கர் அவார்டு கொடுக்கிறதா இருந்தா.. தமிழ் சினமாகாரர்கள் மொத்த ஆஸ்கர் அவார்டையும் போட்டியே இல்லாமல் தட்டிக்கிட்டு வந்துடுவாங்க.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: