வெள்ளி, 15 ஜனவரி, 2016

மெரினாவில் ”காணும் பொங்கல்” குழந்தைகளுக்கு ”போன் நம்பர் வளையம்”- காவல்துறை!

சென்னை:
பொங்கல் விழாவிற்கு மெரினாவிற்கு வரும் குழந்தைகளின் கைகளில் போன் நம்பர் அடங்கிய வளையம் மாட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகள் மாயமானால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய் விடுவார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு சிரமமாகவே இருந்து வந்தது. மாயமாகும் குழந்தைகள் எங்காவது அழுது கொண்டிருக்கும். அவர்களை யாராவது பார்த்து போலீஸ் உதவி மையத்தில் கொண்டு போய் விடுவார்கள்.
Number band for Children in Marina பின்னர் குழந்தையின் அங்க அடையாளங்களையோ அல்லது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை வைத்தோ போலீசார் ஒலி பெருக்கியில் அறிவிப்பார்கள். இதன் பின்னர் பதறியடித்துக் கொண்டு பெற்றோர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுச் செல்வார்கள். இதனை தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டு போலீசார் மற்றும் பெற்றோர்களின் போன் நம்பர் அடங்கிய வளையம் குழந்தைகளின் கைகளில் அணிவிக்கப்பட்டது. அந்த வளையத்தில் மெரினா, அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையங்களின் போன் நம்பர்கள், இன்ஸ்பெக்டர்களின் செல்போன் நம்பர்கள், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களின் செல்போன் எண்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை வைத்து மாயமான நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டும் அதே போன்று வளையம் குந்தைகளின் கைகளில் அணிவிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெரினா கடற்கரை மட்டுமின்றி, வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. மணல் பரப்பில் வேகமாக செல்லும் 4 வாகனங்கள் போலீசில் உள்ளன. இதனை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: