செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஏறுதழுவுதலும் கலாச்சார அரசியலும்"....ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோருபவர்களின் பின் உள்ள அரசியல்

சு.தியடோர் பாஸ்கரன் (2013 பிப்ரவரி உயிர்மை இதழில் வெளியான கட்டுரை) சென்னை: நியூயார்க் நகரத்தில், மெட்ரொபாலிடன் அருங்காட்சியகத்தின் கிரேக்க பிரிவில் சுற்றிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த சில ஜாடிகளில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் என்னை ஈர்த்தன. கி,மு 2ஆம் நூற்றாண்டு காலத்திய இந்த ஒரு மீட்டர் உயரமுள்ள ஒயின் ஜாடிகளின் மேற்புறத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டிருந்தன. கிரீசுக்கு அருகிலுள்ள கிரீட்(Crete), மைசீன் (Mycene) தீவுகளில் அகழ்வாராய்ச்சியில் வெளிக் கொணரப்பட்ட சுவரோவியம் ஒன்றிலும் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை, போன்ற நூல்களிலும், கிரேக்க பயணி டாலமி குறிப்புகளிலும் தமிழ்நாட்டிற்கும் கிரேக்க, ரோமானிய நாடுகளுக்கும் இருந்த வாணிப உறவு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ராபோ தமிழகத்திலிருந்து ஒரு குழு சக்ரவர்த்தி அகஸ்டஸ் தர்பாருக்கு வந்திருந்த்தை பதிவு செய்திருக்கின்றார். ஜல்லிகட்டு நட்த்தும் பழக்கம் இங்கிருந்து அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து வந்ததா என்று தெரியவில்லை. 
அதுமட்டுமல்ல. சிந்து சமவெளி நாகரிக இடமான மொஹஞ்சதரோவில் கிடைத்த ஒரு முத்திரையில் ஜல்லிக்கட்டு காட்சி சித்தரிக்கபட்டுள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று டில்லி அருங்காட்சியகதிலிருக்கும் இந்த கல்லாலான முத்திரை 2000, கி,மு, காலத்தைச் சார்ந்த்து. (
 
ஹிந்து 13.8.1008) Behind the Politics of Jallikkattu பண்டைய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் இந்த நிகழ்வு பற்றி குறிப்புகள் உள்ளன. அன்று இதற்கு ஏறுதழுவுதல் என்று பெயர். கலித்தொகையில் 103வது பாட்டின் ஒரு பகுதி ஒரு ஏறுதழுவல் நிகழ்விற்கு வந்திருந்த பலவகை காளைகளையும் பங்கெடுத்த வீர்ர்களையும் விவரிக்கின்றது. மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும், மீன் பூத்து அவரி வரும் அந்தி வான் விசும்பு போல வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல வளையுபு மலிந்த கோடு அணை சேயும், பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து - அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும், பெரு மலை விடரகத்து, ஒருங்குஉடன் குழீஇ படுமழை ஆடும் வரையகம் போலும் - கொடி நறை சூழ்ந்த தொழூஉ. தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின, ஏறு. ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் உருவ மாலை போல குருதிக் கோட்டொரு குடர் வலந்தன சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு முக்கிய தீர்ப்பை வெளியிட்ட்து. சில விதிகளுக்கு உட்பட்டு, இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று கூறியது. எப்படி இந்த சமாச்சாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது? ஜல்லிக்கட்டு நிகழ்வு காளைகளை துன்புறுத்துவதாக அமைந்திருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு பிராணி நல அமைப்பு வழக்கு தொடுத்திருந்தது. 
 
காளைகளுக்கு ஜல்லிக்கட்டு ஊறு விளைவிக்கின்றது என்ற கருத்தாக்கம் எவ்வாறு உருவானது? 1972ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் பீட்டர் சிங்கர் (Dr.Peter Singer) விலங்கின விடுதலை (Animal Liberation) என்ற நூலின் மூலம் மனிதரைச் சார்ந்திருக்கும் உயிரின்ங்களுக்கு நாம் காட்டும் கரிசனம் குறைவு என்ற கருத்தாக்கத்தை பரவ விட்டார். வரவேற்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட விலங்கு உரிமை இயக்கம் உருவானது. ஹாலிவுட் நடிகைகள் பிரிஜெட் பார்டோ (Brigitte Bardot ) கோல்டி ஹான் (Goldie Hawn ) இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள், பறவைகள் சரியாக வளர்க்கப்பட வேண்டும், சர்க்கஸ், சினிமா துறைகளில் ஈடுபடுத்தப்படும் விலங்கின்ங்கள் கனிவுடன் நட்த்தப்படவேண்டும், பந்தயக் குதிரைகளை அடிக்கக் கூடாது என்று இந்த அமைப்புகள் போராடி வெற்றியும் பெற்றன. 
இன்று குதிரைப்பந்தயத்தில் ஜாக்கி கையிலிருக்கும் குச்சிக்கும் கூட ஒரு சர்வதேச அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கூடங்களில் சோதனைக்காக பயன்படுத்தப்படும் உயிரினங்களுக்காக போராடியது இவர்களது முக்கியமான வெற்றி. கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டு மூன்று பெயர்களில் இந்தியாவில் இயங்கி வரும் விலங்கு ஆர்வல அமைப்புகளின் மூலம் இந்தக் கருத்தாக்கம் பரவி, ஆர்வலர்கள் தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர். இங்கும் சில நடிகைகளின் ஆதரவு இந்தக் கருதுகோளுக்கு கிடைத்துள்ளது. பம்மல் சம்பந்தம் (2002) படத்தில், ஒரு ஸ்டுடியோவில் கதாநாயன் சிவன் வேடத்தில் ஒரு காளையின் மீது அமர்ந்திருக்கும் போது, கதாநாயகி பதாகைகள் பிடித்த ஒரு கூட்டத்துடன் அங்கு நுழைந்து படப்பிடிப்பை குலைக்கும் காட்சி இந்த இயக்கத்தை பகடி செய்தது. 
 
ஆனால் இந்த விலங்குரிமை இயக்கம் இந்தியாவிற்குள் வந்த போது ஒரு அடிப்படை உருமாற்றம் பெற்றது. அதுதான் இங்கு பிரச்னை. இங்கு இயக்கம் மரக்கறி உணவைப் போற்றி அதற்கு ஆதரவாகவும், இறைச்சி உணவிற்கு தீவிர எதிராகவும் செயல்பட ஆரம்பித்த்து. (அமெரிக்காவில் புலால் உண்பதற்கு எதிராக இந்த இயக்கம் பதாகை தூக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.) இந்தியாவில் உள்ள கோவில் யானைகளின் பரிதாப நிலைமை இவர்கள் கண்ணில் படவில்லை. 
 
ஜல்லிக்கட்டு இவர்களுடைய ஒரு இலக்கு. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற நிலைப்பாடு எடுத்து இவை பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஜல்லிகட்டு உட்பட கிராம தெய்வ வழிபாட்டின் சில கூறுகளையும் இந்த இயக்கம் ஜீவகாருண்யம் என்ற பெயரில் எதிர்த்தது.. இன்று சிறுதெய்வ வழிபாட்டின் அடையாளங்களை அழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் பின்புலத்தில் நாம் ஜல்லிக்கட்டு பிரச்னையை பார்த்தால் ஒற்றை அடையாள மதவாதமும் இந்தக் கூடாரத்திற்குள் இருக்கின்றது என்பது தெரியவரும். உலகின் எல்லா தொன்மை வாய்ந்த கலாச்சாரங்களிலும் கால்நடைகளுக்கும் விவசாயிகளுக்கும் நெருங்கிய உறவு உண்டு. நம் நாட்டில் பல இடங்களில் கிராமப்புற வீடுகளுக்கு உள்ளேயே கால்நடைகளுக்கு இடம் கொடுத்திருப்பார்கள். நான் முழுவதும் கால்நடைகளுடனேயே இருந்து வேலை பார்ப்பார்கள். இந்த நெருக்கத்தை பெருமாள் முருகன் கூளமாதாரி நாவலில் விவரிக்கின்றார். 
 
இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த பாரம்பரியம். நகரங்களில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கணிணியை தட்டிக் கொண்டிருக்கும் நாம், கால்நடைகளை எவ்வாறு பேண வேண்டும் என்று குடியானவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. பொங்கல் விழாவின் போது நான்காவது நாள் - மாட்டுப்பொங்கல்- கால்நடைகளுக்கானது. அவைகளைத் தேய்த்து குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசுவார்கள். அதில் சில காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கெடுக்கும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் காளைகளே ஜல்லிக்கட்டிற்கும் வரும் என்றாலும், இந்த விளையாட்டிற்கென்று வளர்க்கப்படும் காளைகளும் - ஜல்லிக்கட்டுக்காளை- உண்டு. இந்திய இனக் காளைகளை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இன்று சிலர் உணர்ந்து வருவது ஒரு நல்ல அறிகுறி. 
 
தமிழ்நாட்டில் காங்கேயம் காளை, பருகூர் காளை போன்ற மாட்டின்ங்களின் பராமரிப்பை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஊக்கப்படுத்துகின்றது. முந்தைய காலத்தில் காளையின் கொம்புகளில் ஒரு துண்டைக்கட்டி அதில் நாணயத்தை வைப்பதுண்டு. மாட்டின் திமிலைப் பிடித்துக் கொண்டு இந்த துண்டை எடுக்க முயற்சிப்பார்கள். ஜல்லிக்கட்டு (சல்லிக்கட்டு) என்ற பெயர் வரக்காரணம் இதுதான். இன்று கூட சில இடங்களின் ஊர்ப்பெரியவர்கள் சிலர் தங்ககாசை ஜல்லிக்கட்டு பரிசாக அறிவிக்கின்றார்கள். இந்தப் போட்டியின் அடிப்படையான ஒரு நியதி மனிதர் ரத்தம் சிந்தினாலும், காளையின் ரத்தம் ஒரு துளி கூட சிந்தப்படக்கூடாது. ஏனென்றால் அது கால்நடையை போற்றும் பண்டிகை.. இந்த நிகழ்வு கிராப்புற தெய்வ வழிபாடுடன் தொடர்புடையது என்று கூறினேன். 
 
கிராமத்து பெரியவர்கள், தாரை தப்பட்டை முழங்க முதலில் அய்யனார் அல்லது கருப்புசாமி கோவிலுக்கு சென்று தான் ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைக்கின்றார்கள். வாடிவாசல் எனப்படும் சிறு நுழைவு போன்ற இடத்திலிருந்து காளைகளை ஓடுதளத்தில் விட ஆரம்பிக்கிறார்கள். முதல் காளையை யாரும் பிடிக்க மாட்டார்கள். ‘புடுச்சுக்கோ' என்ற கூவல் எழ, அடுத்த காளை வாடிவாசலிலிருந்து பிய்த்துக்கொண்டு ஒட, நிகழ்வு தொடங்குகின்றது. மாடுபிடி வீர்ர்கள் மாட்டின் திமிலைப் பிடித்தபடி ஒரு குறிப்பிட்ட தூரம் ஓட வேண்டும். இதுதான் ஜல்லிக்கட்டின் சாரம். 
 
காளையுடன் சண்டை போடுவது பற்றியோ அல்லது அதை அடக்குவது பற்றியோ பேச்சே இல்லை.. ஆனால் ஆங்கில ஊடகங்கள் Bull fighting, bull taming, bull baiting போன்ற பதங்களை போட்டு அர்த்தத்தையே மாற்றி நிகழ்வை கொச்சைப்படுத்தி விடுகிறார்கள். வாசகர்களும் இதைத் தவறாக புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்கு எதிரான நிலைப்பாடு கொள்கிறார்கள். Bull vaulting என்பது ஏறக்குறைய சரியான ஆங்கில சொற்றொடர். பொங்கலின் போது சில கிராமங்களில் ரேக்ளா பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதற்கென மோளை எனப்படும் ஒரு குட்டைஇன மாடு வளர்க்கப்படுகின்றது. காளைகள் சார்ந்த மற்றொரு நிகழ்வு மஞ்சு விரட்டு. மாடுகள் கிராமத்து வீதிகளில் விரட்டிவிடப்பட்டு, சிலர் அவைகளை துரத்தி பிடிப்பர். 
 
போர்ச்சுகல் நாட்டிற்கருகே உள்ள தெர்சீரா (Terceira, one of the 9 Azores islands off Portugal) என்ற தீவில் மஞ்சு விரட்டு நடக்கின்றது. துராத அகார்தா (tourada-a-corda ) என்ற இந்த நிகழ்வில் (bull running) ஒரு காளையை நீண்ட இரு கயிறுகளால் கட்டி இருவர் பிடித்துக்கொள்ள, சிலர் அதை சீண்டுவர். மாடு துரத்தினால் ஓடித் தப்பித்துக் கொள்ளவது தான் விளையாட்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரை அவனியாபுரத்தில் காவேரி மணியம் அவர்களின் வீட்டு மாடியிலிருந்து நான் பார்த்த ஜல்லிக்கட்டிற்கும் இன்று நடப்பதற்கும் பல வரவேற்கத்தக்க வேறுபாடுகள் தெரிகின்றன. 
 
அரசின் கரிசனம் நன்றாகத் தெரிகின்றது. மாடுபிடி வீர்ர்கள் சீருடையில் இருக்கின்றார்கள். தண்ணி போட்டு விட்டு யாரும் களத்தில் இறங்க முடியாது. மருத்துவ சோதனைக்குப்பின் தான் அவர்களுக்கு அடையாள அட்டை தரப்படுகின்றது. அவர்களைத் தவிர யாரும் இறங்கி களத்தில் நிற்பதில்லை . ஆகவே அங்கு கூட்டமில்லை. முதலுதவி உடனேயே கிடைக்கின்றது. முன்பு போல விபத்துக்கள் அதிகம் இல்லை. 'நின்று குத்தும் காளை' என்றறியப்படும் சில காளைகள் களத்தில் ஓடுவதை திடீரென நிறுத்தி, திரும்பி நிற்கும். அப்போதுதான் ஆபத்து. இந்த வருடம் நடந்தது போலவே நியதிகளுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு கவனத்துடன் நடத்தப்பட்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் கால்நடைகளைப் போற்றும் இந்தக் கொண்டாட்டம் தொடரும். 
 
குத்துச்சண்டை, மல்யுத்தம், போன்ற போட்டிகள் அவ்வ்போது கொண்டுவரப்படும் சில புதிய விதிகளுடன் ஒலிம்பிக்ஸில் கூட சேர்த்துக் கொள்ளப்படும் போது, ஜல்லிக்கட்டை தொடர முடியாதா? சில ஆண்டுகளுக்கு முன் கோதாவில் ஒரு போட்டியின் போது தலையில் அடிபட்டு ஒரு பாக்சர் உயிரிழந்ததால் இன்று குத்துச்சண்டை போட்டிகளில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு விட்டது. பாரம்பரியம் (heritage) என்பது தஞ்சைப் பெரியகோவில் மாதிரியான உன்னத கலைப்படைப்புகள் மட்டுமல்ல. ஏறுதழுவுதல் போன்ற நிகழ்வுகளும் தான். மனித வரலாற்றில் இம்மாதிரி ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் வெகு குறைவு. அவை போற்றப்பட வேண்டும். நன்றி: உயிர்மை
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: