புதன், 8 ஏப்ரல், 2015

பத்ரி :அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது.

மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். 
ஊழல் சாம்ராஜ்ஜியம் தற்போது நடந்துகொண்டிருக்கும் அஇஅதிமுக ஆட்சியை தமிழக ஊழல் வரலாற்றின் உச்சம் என்று சொல்லலாம். ஊழல் பற்றி என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் அதனைப் பெரும்பாலும் “ஜெயலலிதா vs கருணாநிதி” என்று சுருக்கி, “ஏன் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். இவ்விருவரையும் விட்டால் வேறு கதி இல்லை என்பதால், ஊழலை நகர்த்திவிட்டு பிற காரணங்களுக்காக திமுகவா அல்லது அதிமுகவா என்று தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் உள்ளனர். நான் இப்போது பேச வருவது தேர்தல் பற்றியே அல்ல. அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றியல்ல. இப்போதைய ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து மட்டுமே. இதனால் முந்தைய ஆட்சியில் ஊழலே இல்லை என்றோ இனி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்றோ நான் சொல்லவில்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.


ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி 2011-ல் ஆரம்பித்ததும், ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது. எனக்குத் தெரிந்த சில உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். புதிய பள்ளிகூடங்களுக்கான அனுமதி, பழைய பள்ளிகளுக்கான அனுமதி நீட்டிப்பு ஆகியவற்றுக்கு மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இந்தத் தகவல் அவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

நீங்கள் புதிய பள்ளிக்கூடம் ஆரம்பித்து, இந்தப் பணத்தைத் தரவில்லை என்றால், எவ்வகையிலும் உங்கள் பள்ளிக்கு அனுமதி தரப்படாது. இந்தப் பணம் தவிர்த்து, உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும். அது தவிர, பஞ்சாயத்து அல்லது முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்குத் தனியாகக் கப்பம் தரவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைப் பெறுபவர்கள் மொத்த ஒப்பந்த அளவில் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் தரவேண்டும். இந்தப் பணத்தை துறையில் பொறியாளர் பெற்று, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தருவார். நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல், பொது நூலகத்துறையிடமிருந்து நூலக ஆணை பெற விரும்புவோர், ஆர்டர் தொகையில் 20% முன் லஞ்சமாகக் கொடுத்தே ஆகவேண்டும்.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் தலா 20-25 லட்ச ரூபாய் பெறப்படுகிறது. இது உயர் கல்வி அமைச்சர் வாயிலாகத் தொகுக்கப்பட்டு, மேல்நோக்கிச் செல்கிறது.

எல்லாத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதில் கணிசமாகப் பணம் பெறப்படுகிறது. இது சார்ந்த தகவல்கள் விவசாயத் துறைப் பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

முத்துக்குமாரசுவாமிபோல நேர்மையாகப் பணியாற்றும் ஓர் அதிகாரியின் நிலை தமிழகத்தில் இதுதானா? ஒன்று அவர் லஞ்சம் வசூலித்துத் தரவேண்டும்; அல்லது அப்படிச் செய்யாவிட்டால் அவரது நேர்மையால் பொறுக்கிகள் இழக்கும் பணத்தை அவர் தனது சொந்தக் காசிலிருந்து தரவேண்டும் என்ற நிலைக்கு நாம் சென்றிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் உந்துதலில், சாதாரண மக்களிடமிருந்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்தும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். இது தமிழக அரசில் வேலை செய்யும் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த அரசு ஊழியர்களில் ஒரு சிறு சதவிகிதத்தினராவது நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை (1) ஏன் தடுக்கவேண்டும் (2) எப்படித் தடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமாரசுவாமியின் தற்கொலை ஒரு டிப்பிங் பாயிண்ட். இந்த நேர்மையான அரசு ஊழியர்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில், நாட்டு மக்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொள்ளும் அளவுக்கு அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை ரகசியமான முறையில் வெளியே அம்பலப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும்போது தங்களுக்குப் பிரச்னை ஏற்படாதவாறு கவனமாகச் செய்யுங்கள். பத்திரிகை நண்பர்களிடம் உங்கள் தகவல்களைத் தாருங்கள். ஏதேனும் ஒரு பத்திகையாவது இவற்றை வெளிப்படுத்தும். இல்லாவிட்டால் இணையம் இருக்கவே இருக்கிறது. தமிழகத்துக்கு என்று நாமே விக்கிலீக்ஸ் போன்றதோர் இணையத்தளத்தை உருவாக்குவோம்.

இந்தத் தகவல்கள் வெளியாகும்போது அரசு ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும். ஜெயலலிதா குற்ரவாளியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் ஓர் அதிகாரி தற்கொலை செய்துகொண்டிருப்பதால்தான், இன்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சரியான நேரம். இன்னும் பிறர்மீதும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவோம். இனி யார் அரசு அமைத்தாலும், ஊழல் செய்வதற்கு இடம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதற்கு முதல் கட்டமாக, தற்போது நடந்துவரும் அட்டூழியங்களை வெளிப்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை: