சனி, 11 ஏப்ரல், 2015

பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது 36 Rafale fighter jets


பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தமானது.
இதன்படி, ரூ.79,000 கோடி மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளிடையே கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸýக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அந்நாட்டு அதிபர் பிரான்சுவா ஹொலாந்தை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாடுகளிடையேயான நல்லுறவு, பாதுகாப்புத் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மோடி கூறியதாவது:
இந்தியாவுக்கு போர் விமானங்கள் அத்தியாவசியத் தேவையாக உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது இயங்கும் நிலையில் உள்ள ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்திடம் பேச்சு நடத்தினேன்.
இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்துச் செல்லும் என்றார் மோடி.
அணு உலைத் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து: இந்நிலையில், நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இரு நாடுகளுக்கு இடையேயான ஜெய்தாப்பூர் அணு உலை ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி, இந்திய அணுசக்திக் கழகம் - பிரான்ஸின் அரேவா ஆகிய நிறுவனங்களிடையே மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய அணு உலைகளை நிறுவுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
17 ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடியின் பயணத்தின் ஒரு பகுதியாக ஜெய்தாப்பூர் அணு உலை ஒப்பந்தம் உள்பட பல்வேறு துறைகள் தொடர்பாக மொத்தம் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான மேகா டிராப்பிக்ஸ் செயற்கைக்கோளிடமிருந்து தகவல்களைப் பெறுதல், பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கத் தக்க ஆற்றல்கள் துறையில் தகவல் பரிமாற்றம், சுற்றுச்சூழல் மேம்பாடு, ரயில்வே துறை, ஆயுர்வேத மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் தொடர்பாக மற்ற 16 முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளன.
ரூ.6,000 கோடி முதலீடு: இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பெரு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் பேசிய அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ""பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் நிலையான வளர்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடி முதலீடு செய்யப்படும்'' என அறிவித்தார்.dinamani.com

கருத்துகள் இல்லை: