வெள்ளி, 10 ஏப்ரல், 2015

திருப்பதி காட்டில் இன்னும் 30 பேரை காணவில்லை ! அவர்களின் நிலை கேள்விகுறி?

வேலூர்: ஆந்திர மாநில காட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த போது, தப்பி யோடிய, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், சேஷாசலம் காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.கடந்த 7ம் தேதி, ஆந்திர மாநில வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக, துப்பாக்கியால் சுட்டதில், தமிழகத்தை சேர்ந்த, 20 பேர் கொல்லப்பட்டனர். செம்மரம் கடத்தலில் சர்வதேச அளவில், 'பெரும்புள்ளி'களாக, கடப்பாவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு, ஐதராபாத்தை சேர்ந்த ராமா நாயுடு, கர்னூலைச் சேர்ந்த வெங்கடேசம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மூலம் தான், செம்மரம் கடத்தி வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்களுக்கு, சர்வதேச அளவில் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் பட்டியலில், இவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சர்வதேச மார்க்கெட்டில், கடந்த மாதம் செம்மரத்திற்கு தட்டுப்பாடுஏற்பட்டதை அடுத்து, ஒரு டன், 10 லட்சம் ரூபாயில் இருந்து, 80 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. இதையடுத்து, செம்மரம் கடத்தல் தீவிரமானது. கடந்த மாதம், கடத்தல் கும்பல் திருப்பதியில் நடத்திய ரகசிய கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த செம்மரம் ஏஜன்டுகள், பல கட்சி களைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, 'ஏப்ரல் இறுதிக்குள், 10 ஆயிரம் டன் செம்மரம் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு எவ்வளவு ஆட்கள் வேண்டுமானாலும் அழைத்து வந்து, மரம் வெட்டிக் கொடுங்கள்; இரு மடங்கு கூலி கொடுக்க தயார்' என, தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏஜன்டுகள், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, மரம் வெட்ட ஆட்களை திருப்பதிக்கு அனுப்பி வந்தனர். மரம் வெட்டுவோரை, கிராமங்களில் இருந்து காரில், வேலூருக்கு அழைத்து வந்தனர். அங்கு, அவர்களுக்கு வேட்டி கொடுத்து, நாமம் போட்டு, ரயில், பஸ்களில் திருப்பதிக்கு அனுப்பினர். இதை, திருப்பதி உளவு பிரிவு போலீசார் கண்டுபிடித்து எச்சரித்தனர். இதை அடுத்து தான், போலீசார், வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான், கடந்த 7ம் தேதி, 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த போது, உடன், 200 க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். சம்பவம் நடந்ததும், தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி ஓடியதில், 150 பேரை, கடந்த மூன்று நாட்களில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்; மற்றவர்கள் என்ன ஆயினர் என, தெரியவில்லை.



இதுகுறித்து, ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த காட்டில் சிறுத்தைகள், கரடிகள் அதிகம் உள்ளன. தப்பி ஓடியவர்கள், மிருகங்கள் தாக்கி இறந்திருக்கலாம் அல்லது காட்டுக்குள் பதுங்கி இருக்கலாம். இதற்குள், 20 பேரை சுட்டது பற்றி, கடும் கண்டனம் எழுந்ததால் அதிர்ச்சியடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, காட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்த வேண்டாம் என, தெரிவித்துள்ளார். தேடுதல் பணி நடத்தாவிட்டால், காட்டுக்குள் பதுங்கி இருப்போர் வெளியே வர வாய்ப்பு உள்ளது. வந்தால், அவர்களை கைது செய்யாமல், கண்காணித்தால் போதும் என, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார் dinamalar.com

கருத்துகள் இல்லை: