சனி, 11 ஏப்ரல், 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் வெளியீடு


கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் சென்னையில் நாளை திரையிடப்படுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய நினைவு தொகுப்புகளை மையமாக வைத்து பு.சாரோன் என்பவர் இயக்கியுள்ள 2.30 மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆவணப்படத்தின் குறுந்தகட்டினை (வீடியோ சி.டி.) திரைப்பட இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவம்மாள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் ஒருகட்டமாக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நாளை (12-ம் தேதி) காலை சுமார் 11 மணியளவில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடன் நெருக்கமாக இருந்த சிலர் அவரைப் பற்றிய அரிய தகவல்களை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவுகளுடன் கவிஞர் இயற்றிய மிகவும் பிரபலமான பாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்றும் கொண்டிருந்தார்.

தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டிய இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் கொட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் ஒருசேர சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக வடித்துத் தந்தார்.

இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, தமிழ் சினிமா இசைத்துறையில் அழுத்தமான முத்திரையை பட்டுக்கோட்டையார் பதித்தார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.    maalaimalar.com

கருத்துகள் இல்லை: