புதன், 8 ஏப்ரல், 2015

Aiadmk தலைமையை காப்பாற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பலிகடாவா? வாழ்க தியாகி/அடிமை அக்ரி ?

சென்னை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேலும் சில ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களும் சிக்குகின்றனர். அவர்களை காப்பாற்ற மூத்த அமைச்சர்கள் முயற்சிப் பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரிக்கை வலுப்பெற துவங்கியுள்ளது.திருநெல்வேலி வேளாண் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் முத்துகுமாரசாமி. இவர் சமீபத்தில் நெல்லையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்வதற்கு காரணம் முன்னாள் வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர்கள் தொலைபேசியில் மிரட்டியதும், அதைத் தொடர்ந்தே முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டின. வழக்கை சிபிஐக்கு மாற்ற விடாமல் தடுக்கத்தான் இந்த கைது நாடகமோ?


நெல்லை வேளாண் துறையில் சில டிரைவர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு, தான் சொல்லும் ஆட்களைத் தான் நியமிக்க வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஆளுங்கட்சியை சேர்ந்த ஆட்களும் மிரட்டியுள்ளனர். இதற்கு இடம் கொடுக்காத முத்துகுமாரசாமியை மிரட்டியும் அடித்தும் அவமானபடுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து இந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியை தந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் கடைசியில் கைது வரைக்கும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

ஆனாலும் நெல்லை மாவட்ட ஆளுங்கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியில் கைது குறித்து பலவாறாக பேச்சு அடிபடுகிறது. இதில் அக்ரி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல முக்கிய குற்றவாளிகளாக சிலரை ஆளுங்கட்சியினரே கைகாட்டுகின்றனர். நெல்லை எம்பி முத்து கருப்பன், முத்துகுமாரசாமியை போனில் கடுமையாக திட்டி மிரட்டிய ஆதாரங்களை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் திரட்டிவிட்டனர்.இதில் எம்பியின் மகனும் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகி, மாவட்ட அவைத்தலைவர், ஜெ.பேரவை மாவட்ட நிர்வாகி, அக்ரி சேர்மன் ஆகியோரும் கடுமையாக மிரட்டியுள்ளதும், வீட்டுக்கே போய் மிரட்டியதும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதில் முத்துகுமாரசாமி தற்கொலைக்கு சில நாட்கள் முன்பு வீடு தேடி சென்று கடுமையாக மனைவி பிள்ளைகள் எதிரிலேயே மிரட்டியதும், மாவட்ட நிர்வாகி ஒருவர், குடும்பத்தார் எதிரிலேயே தாக்கி, வா பேச்சு வார்த்தைக்கு என்று இழுத்து சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை சாட்சியத்துடன் சிபிசிஐடி போலீசார் திரட்டியதுமல்லாமல் அக்ரியிடம் நடத்திய விசாரணையிலும் உறுதி படுத்தியுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது குடும்பதார் எதிரிலேயே ஆளுங்கட்சி பிரமுகர்களால் தாக்கப்பட்டதும் தற்கொலைக்கு முக்கிய காரணம் எனபதால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மீது போடப்பட்ட 120, 306 பிரிவுகளின் கீழ் மேலும் முக்கிய புள்ளிகள் கைதாகும் வாய்ப்பு உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த விவகாரத்தில் மேலும் 6 பேர் வரை சிக்கலாம் என கூறப்படுகிறது. - See more tamilmurasu.org

கருத்துகள் இல்லை: