செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆந்திரா -திருப்பதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் சுட்டு கொலை! வனத்துறையினரின் கொடுரம்!


திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில் உள்ளது. இந்த மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் அதிகம் உள்ளன.இந்த செம்மரக்கட்டைகளுக்கு சீனாவிலும், தெற்காசிய நாடுகளிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால், சர்வதேச அளவிலான ஒரு மாபியா கும்பல், செம்மரக்கட்டைகளை வெட்டி, கடத்தி கோடி கோடியாய் வருமானம் பார்த்து வருகிறது.எனவே செம்மரம் கடத்தல் கும்பலை அடியோடு ஒழிக்க முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செம்மரங்களை கடத்துபவர்ளை ஒழிப்பதற்கென சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து இருக்கின்றனர். 

இவர்கள் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பதில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிவாரி மேக் என்ற இடத்தில் ஏராளமான செம்மரக் கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். உடனடியாக சரண் அடையும்படி கடத்தல்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு மறுத்த கடத்தல்காரர்கள் கற்களையும், ஆயுதங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கடத்தல்காரர்களை சேர்ந்த 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த 20 பேரில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை மற்றும் சேலம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. 

இந்தப் பகுதிக்கு செம்மரங்களை வெட்ட வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அதிக வருமானம் வரும் என்று கூறி அழைத்ச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது இவர்களை ஆந்திராவைச் சேந்தவர்கள் அழைத்துச் சென்று கடத்தல் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: