செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சலுகை தமிழக அரசின் ஆணை ரத்து


சென்னை : சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 3 லட்சம் கட்டிடங்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வெறும் அபராதம் மட்டும் செலுத்தி தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்த கட்டிட உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநலன் மனு:சென்னை நகர் முழுவதும் விதிமுறைகளை மீறி சுமார் 3 லட்சம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அனுமதித்தால் பல்வேறு பிரச்னைகள் வரும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதியோ சலுகையோ வழங்க கூடாது. எனவே, கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தேன். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘1999ம் ஆண்டுக்கு பிறகு, விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவேண்டும்Õ என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அப்போது அரசு அமைத்த கமிட்டி, விதிமுறைகள் மீறிய கட்டிடங்களை வரன்முறைப்படுத்தலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதைத்தொடர்ந்து விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறைப்படுத்த புதிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.அதாவது 1971ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதற்கு பிரிவு 113(சி) என்று பெயரிட்டது. இந்த சட்டதிருத்தம் செல்லாது. இந்த சட்ட திருத்தத்தின் படி 2 அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையின்படி 1999ம் ஆண்டு முதல் 2007 வரை விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறைப்படுத்தலாம். கட்டிட உரிமையாளர் அபராதம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தமும் செல்லாது. அரசின் 2 அரசாணையும் செல் லாது. இந்த மூன்றையும் ரத்து செய்ய வேண்டும். 99ம் வருடத்துக்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங் களை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது.
இதன்பிறகு தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது சட்ட விரோதமானது. அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.இவ்வாறு பொதுநலன் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்து இருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு:சென்னையில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு கொண்டுவந்த சட்டதிருத்தம் செல்லும். ஆனால் அனைத்து கட்டிடங்களுக்கும் அபராதம் விதித்ததோடு விட்டுவிடலாம் என்று 2 அரசாணை கொண்டுவந்தது செல்லாது. கட்டிடங்களை தனித்தனியாக ஆராய்ந்து பார்த்துதான் அரசு முடிவெடுக்க வேண்டும். இதற்காக ஒரு புதிய கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி ஆய்வு செய்தபிறகு கட்டிடங்களுக்கு ஏற்றவாறு வரன்முறைப்படுத்தி முடிவெடுக்க வேண்டும்.
சென்னையில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் நாளுக்குநாள் புற்றீசல்போல் பெருகி வருகிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். 2 அரசாணையை மட்டும் ரத்து செய்கிறோம். இவ்வாறு உத்தரவு பிறப்பித்தனர்.வழக்கின் முடிவில் உயர் நீதிமன்றம் அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.அவை வருமாறு: * சட்டதிருத்தத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். சட்டதிருத்தம் செல்லும். அரசுக்கு இதற்கு அதிகாரம் உள்ளது. இதை ரத்து செய்ய முடியாது. * சட்டதிருத்தத்தை தொடர்ந்து அரசு விதிமுறைகளை வகுத்து 2 அரசாணை 2012ம் ஆண்டு வெளியிட்டது. இது செல்லாது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்கிறோம். * அரசாணையின்படி கட்டிடங்களுக்கு அபராதம் விதித்து விட்டு விட்டுவிடலாம் என்று பிறப்பித்த விதிமுறை சரியல்ல. அதை ரத்து செய்கிறோம்.
 உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் 2007ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டியில் 5 அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். இந்த கமிட்டி 33 தடவை கூடி, அரசுக்கு பல சிபாரிசுகளை செய்தது. ஆனால், இந்த கமிட்டி சிபாரிசுகளை பின்பற்ற, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்கவில்லை.எனவே, இந்த கமிட்டி அல்லது புதிய கமிட்டியை அரசு நியமிக்க வேண்டும். அந்த கமிட்டி புதிய விதிமுறையை வகுத்து, அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். சட்ட திருத்தத்தை சரியாக அமுல்படுத்த சிறந்த விதிமுறைகளை கமிட்டி வகுக்க வேண்டும். சட்டத்திருத்தத்தை முழுமையாக சரியான விதிமுறைகளை அமல்படுத்தி வகுக்க வேண்டும் என்று அரசை கேட்டுகொள்கிறோம். * எதிர்காலத்தில் சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டாதவாறு அரசு கண்காணிக்க வேண்டும். * காளான் போல், புற்றீசல் போல் விதிமுறை மீறி கட்டிடங்கள் பெருகி வருகிறது. இதை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதை அரசுக்கு நினைவு படுத்த தேவையில்லை என்று கருதுகிறோம். இருந்தாலும் இதை கூறுகிறோம். அரசு மேலும் அவகாசம் தராது என்று கருதுகிறோம். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர் dinakaran.com 

கருத்துகள் இல்லை: