வியாழன், 13 பிப்ரவரி, 2014

வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது ஊழல் தடுப்பு துறை வழக்கு!


இயற்கை எரிவாயு ஊழல் வழக்கில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்-, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது டெல்லி மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணா, கோதாவரி படுகையில் எரிவாயு எடுத்து வரும் ரிலைன்ஸ் நிறுவனம், அதனை மத்திய அரசுக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கான விலையை மத்திய அமைச்சர்கள் சிலரின் துணையுடன் அதிரடியாக அந்த நிறுவனம் உயர்த்தியதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், செயற்கையான முறையில் தட்டுப்பாடு ஏற்படவும் ரிலையன்ஸ் நிறுவனம் வழிவகுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்ய டெல்லி மாநில ஊழல் தடுப்பு துறைக்கு, டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, முரளி தியோரா மற்றும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், இது அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், விசாரணையை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறினார். எந்த விசாரணைக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். இரண்டு விஷயங்களை தெளிவாக விளக்க வேண்டும். ஒன்று இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மேலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. இந்த இரண்டும்தான் உண்மை. வேறு எதுவும் சொல்ல முடியாது. மேலும் எந்த விசாரணைக்கும் நாங்கள் எதிரி அல்ல. யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை: