வியாழன், 13 பிப்ரவரி, 2014

பண்ணையாரும் பத்மினியும் ஒரு நல்ல சினிமா !

மனிதர்களை வைத்து கதை சொல்லும் சினிமாக்களை பார்த்திருக்கிறோம், மிருகங்களை வைத்துக் கதை சொல்லி பார்த்திருக்கிறோம், அமானுஷ்ய சக்தியாக உருவெடுக்கும் பல அனிமேஷன் படங்களை பார்த்திருக்கிறோம்... ஆனால் ஒரு காரை (மகிழுந்து) வைத்து கதை சொன்னது, முற்றிலும் புதிது! 90களின் தொடக்கத்தில் நடக்கிற கதையாக இருக்கிறது இப்படம். ஊருக்குள் இருக்கும் பண்ணையாரைப் பற்றியும் அவர் வைத்திருக்கும் பத்மினி காரைப் பற்றியும் கதை சொல்லும் ’பண்ணையாரும் பத்மினியும்’ ஒரு நல்ல சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை அந்த ஊருக்கு அறிமுகப்படுத்தும் பண்ணையார், தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி என அந்த ஊர் மக்கள் எந்த நேரத்திலும் தன் வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பவர். அம்புட்டு நல்லவருன்னுன்னா பாத்துக்கோங்க! அவருக்கு அன்பான மனைவி. 

பண்ணையார் தன் நண்பன் வீட்டுக்கு போகும்போது அங்கே பத்மினி காரை பார்க்கிறார். அந்த கார் மேல் ஆசைப்படும் பண்ணையார், வீடு திரும்பியும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் பண்ணையாரின் வீடு தேடி வரும் அவர் நண்பர், தன் மகள் வீட்டுக்கு போவதாக சொல்லி, பத்மினி காரை அங்கேயே விட்டுச் செல்கிறார். ஆசைப்பட்டது தேடி வந்த சந்தோஷத்தில் திளைக்கிறார் பண்ணையார். ஊரில் ஒருவரை பாம்பு கடித்துவிட, ‘வண்டிய எடுங்கைய்யா..’ என்று குரல் கேட்கிறது. கார் ஓட்டத் தெரியாத பண்ணையார், கார் ஓட்டத் தெரிந்த ஒருவரை கூட்டிவரச் சொல்ல... சுறுசுறுப்பாக தாடி வைத்த முகத்துடன் வந்து நிற்கிறார் விஜய் சேதுபதி. 


ஊருக்குள் சாவு, கல்யாணம், காதுகுத்து, கும்பாபிஷேகம் என எது நடந்தாலும் பண்ணையாரின் பத்மினி கார் சிட்டாய் பறக்கிறது. ஒரு சாவு சடலத்தை காரில் வைத்து அடுத்த ஊருக்கு கொண்டுசெல்ல... அங்கே அழுகாச்சியுடன் இருக்கும் ஐஸ்வர்யாவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. சாவு நேரத்திலும் சந்தோஷமாய் மனதுக்குள் ஒரு காதல் பாட்டு பாடுகிறார் ஹீரோ. அதன் பிறகு பத்மினி காரில் ஹீரோயினும் ஹீரோவும் காதலோடு வலம் வருகிறார்கள். வழக்கமான சில சண்டைச் சச்சரவுகளும் வந்து போகிறது. 

ஆனால், ஹீரோ ஹீரோயினைவிட அதிகம் சிக்ஸர் அடிப்பது பண்ணையாரும் பண்ணையாரம்மாவும் தான்! கிராமத்து வயதான ஜோடிகளை பிரதிபலிக்கும் வகையில் அசத்தல் நடிப்பு. அகநானூறு தமிழ் இலக்கியத்தில், பெண் மானும், ஆண் மானும் தண்ணீர் பருகும் காட்சியைப் படித்திருக்கிறோம். அதே போல அவர் நினைப்பதை இவர் சொல்ல, இவர் நினைப்பதை அவர் சொல்ல என ஒரே ரொமான்ஸ் மயம் தான்! துளசி - ஜெயப்பிகாஷ் ஜோடிக்கு 'ஜோடி நம்பர் ஒன்' என்று பட்டமே வழங்கலாம். காரைக் கொடுத்துவிட்ட நேரத்தில், கார் நிறுத்தப்பட்டுக் கிடந்த இடத்தைப் பார்த்து, ‘பெத்த புள்ள மாதிரி இங்குட்டே சுத்திகிட்டு கிடந்துதா...’ என்று துளசி சொல்லும் வசனம் பார்வையாளர்களின் கண்களை கலங்க வைக்கும்!


பல தடங்கள்களுக்கு பிறகும் பத்மினி காரை பண்ணையார் தனக்கே சொந்தமாக்கிக் கொள்வதும், அதற்கு விஜய் சேதுபதி கடைசிவரை ட்ரைவராக இருப்பதும் எனக் கவிதையாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார். சாதாரண கதையை அசாதாரண திரைப்படமாய் மாற்றியமைதுள்ளார் இயக்குனர்.  

படத்தின் சில காட்சிகள் மெதுவாக நகர்கிறதோ என தோன்றினாலும், உணர்வுகளை சிதைக்காமல், கதைக்கு உண்மையோடும் உத்தமத்தோடும் நடந்து கொண்டிருக்கிறார் இயக்குனர். பண்ணையாரின் மகள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஒரு பொருளை எடுத்து செல்வதும், ஏதாவது ஒரு பொருளை எடுத்துச் செல்லவே வீட்டுக்கு வருவதுமென சுவாரஸ்மான காட்சிகள் ரிலாக்சிங் நிமிடங்கள்! விஜய் சேதுபதி காரை வைக்கோல் போருக்கு உள்ளே ஒளித்து வைக்கும் காட்சிக்கு க்ளாப்ஸ் நிச்சயம்.
இந்த கதைக்கு ஹீரோவாக என்று சொல்வதைவிட, பண்ணையாரின் பத்மினி காருக்கு ட்ரைவராக யார் வேண்டுமானாலும் நடித்திருக்க முடியும். இருந்தாலும் விஜய் சேதுபதி தனக்கே உரிய வாய்ஸ் மாடுலேஷனோடு கலக்குகிறார். பஸ் ட்ரைவரோடு மோதல் வரும் காட்சியில், சாதாரண ஹீரோ போல சட்டையை கழட்டி சண்டைக்கு கிளம்பிவிடுவாரோ என்று தியேட்டரே பயப்படுது! நல்ல வேளை. விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை! அவர் கூடவே வரும் ‘பீட’ பாலசரவணன் சிரிப்பதற்கு உதவி செய்கிறார். 

இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் வியக்க வைக்கிறார். அத்தனை பாடல்களும் அருமை! ‘பேசுறேன் பேசுறேன் காதல் மொழி...’ மற்றும் ‘உனக்காக பொறந்தேனே...’ என்ற பாடல்கள் படம் பார்க்கிறவர்கள் இதயத்தில் ரீங்காரமிடும்! ஒளிப்பதிவார் கோகுல் சபாஷ் வாங்குகிறார். கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில், கார் எடுத்துச்செல்லப்பட்டதும் மஞ்சள் பூக்கள் விழுவதை வார்த்தைகளால் சொல்ல முடியாத கவிதையைப் போல காட்சிபடுத்தியிருக்கிறார் கோகுல்.

பண்ணையாரும் பத்மினியும் - சாதாரண கதை அசாதாரண திரைப்படமாய்!
cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை: