திங்கள், 10 பிப்ரவரி, 2014

சாப்பாடு, சம்பளம், சரக்கு ! மோடியின் கூட்டத்திற்கு ஆள் பிடித்த புரோக்கர்கள் !

மோடிஎல்லாருக்குமே இப்போ சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க, 200 ரூவா தாரேனு சொல்லி இருக்காரு, திரும்பி வரும் போது குவார்ட்டரும் தாரேனு சொல்லி இருக்காங்க மத்தியிலும், மாநிலத்திலும் தாமரை ஆட்சி அமைந்திட சபதம் ஏற்க தாமரை சங்கமம் மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அடுத்து திருச்சியில் மோடி பங்கேற்ற இளம் தாமரை மாநாடு லட்சோப லட்சம் தொண்டர்களின் வருகையால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வண்டலூரில் நடக்கவிருக்கும் திறந்தவெளி மாநாடு பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கும்” என்று பொன்னாரின் “உற்சாகமான” பேட்டியை ஜூனியர் விகடனில்
படித்த பிறகு ‘பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கப் போகும்’ திறந்த வெளிக் கூட்டத்தை போய் பார்த்து வரலாம் என்று புறப்பட்டோம்.
‘பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கப் போகும்’ கூட்டத்தில் மோடி. உள்ளூர் அளவில் ‘தொண்டர்கள்’ எப்படி வந்தார்கள் என்பது இரகசியம். கூட்டத்தில் பேசுவதைக் கேட்பதற்காக செல்ல வேண்டாமென்றும், கூட்டத்திற்கு யார் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எப்படி அழைத்து வரப்படுகிறார்கள், கூட்டணிக் கட்சிகளின் பங்கேற்பு எப்படி போன்றவற்றை மட்டும் அறிந்து வரலாமென்று முதலிலேயே திட்டமிட்டோம். மோடியின் கூட்டத்திற்கு ஆள் பிடித்த புரோக்கர்கள்

கோயம்பேடு அருகில் பா.ஜ.க கொடிகள், மோடி பொதுக்கூட்ட பேனர்கள் கட்டப்பட்டு நான்கு வேன்கள் நின்றிருந்ததை பார்த்தோம். வண்டியில் ஏற்கனவே இருந்த சிலருடன் இன்னும் ஓரிருவர் ஏறிக்கொண்டிருந்தனர். உள்ளே நிறைய காலி இருக்கைகள் தென்பட்டன. நாமும் இவர்களுடன் சேர்ந்து கொண்டால் பாஜக ‘தொண்டர்களின்’ நேரடி கருத்தை அறியலாமே என்று நினைத்தோம்.
வண்டியில் இருந்தவர்களிடம், “நாங்களும் மோடி கூட்டத்துக்குத்தான் போறோம், வண்டில ஏறிக்கலாமா?” என்று கேட்டதும், “சார் கிட்ட கேளுங்க” என்று முதல் வண்டியை நோக்கி கைகாட்டினார்கள். சார் எனப்பட்டவரை அணுகினோம். சற்றே அளவுக்கதிகமான தொந்தியும், வெள்ளை வேட்டி சட்டையும், நெற்றியில் மேல் நோக்கி இழுக்கப்பட்ட நாமமுமாக புன்னகைத்தபடியே ஒருவர் நெருங்கினார். “நாங்களும் மோடிகூட்டதிற்குத்தான் போறோம். வண்டியில ஏறிக்கலாமா” என்று கேட்க, “யூ ஆர் வெல்கம். போகும் போது உங்க போன் நம்பரை மட்டும் கொடுத்திட்டு போயிடுங்க” என்று கையை குலுக்கி கொஞ்சம் வித்தியாசமாக புன்னகைத்தார். இலவச சவாரியை அளிக்கும் பெருந்தன்மையுடன் கட்சியை கட்டும் அவரது தொழில் நேர்த்தியும் குறிப்பிடத்தக்கது. எனினும், அசுரர்களையோ இல்லை சாத்தான்களையோ ஏற்றிச் செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது.
கடைசி வண்டியில் ஏறிக்கொண்டோம். அந்த வண்டியில் ஏழெட்டு பேர் இருந்தார்கள் பதின்ம வயது சிறுவர்கள் இரண்டு மூன்று பேர், மற்றவர்கள் 20 வயதுகளில். எளிய உழைக்கும் மக்கள் போலத்தான் தெரிந்தார்கள். “பரவாயில்லையே, ஒரு காலத்தில் அய்யிரு கட்சி என்று அறியப்பட்ட பாஜகஇல் ஏழை எளிய குப்பன்களும், சப்பன்களும் இருக்கிறார்களே” என்று பலரும் ஆச்சரியப்படலாம்.
ஒரு இளைஞர் புகையிலையை மென்று வெளியே துப்பிக்கொண்டிருந்தார். அடுத்த சீட்டில் ஒரு சிறுவன் மற்றொரு இளைஞரின் மடியில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தான். பின் இருக்கையில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருக்க இன்னொருவர் ஜன்னலோரம் உட்கார்ந்து காலை நீட்டியிருந்தார். யோசித்துப் பார்த்தால் மோடி ஜுரம் இங்கே சோர்வாய் கடுத்துக் கிடந்தது.
வண்டியை எடுக்கச் சொல்லி உத்தரவு வந்தது. பையன்கள் ஜன்னலின் வெளியில் எட்டி எட்டிப் பார்த்து “டேய் இது எந்த இடம்டா”  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து “நீங்கல்லாம் சென்னைதானே. எந்த பகுதியிலேர்ந்து வரீங்க” என்று விசாரித்தோம்.
“நாங்கல்லாம் கோயம்பேடு மார்க்கெட்லேருந்து வர்றோம்.”
“எத்தனை பேரு கூட வர்றாங்க?”
“மொத்தம் நாலு வேன்ல வாரோம்.”
“நாலு வண்டியா! பரவாயில்லயே. எப்பைல இருந்து கட்சியில் இருக்கீங்க?”
“நான் இந்த கட்சி இல்ல சார். விஜயகாந்த் கட்சி. யாரு மாறுனாலும் நான் மாற மாட்டேன் எப்பவும் விஜயகாந்த் தான்” அருகில் இருப்பவரை பார்த்தபடியே சொன்னார்.  இவர் கையில் தேமுதிக கொடியின் வண்ணங்களில் பேண்டு அணிந்திருந்தார்.
“நாங்க எப்பவுமே அம்மா கட்சிக்குத்தான் ஓட்டு போடுவோம்” என்று இன்னொருவர் மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
“இந்த கூட்டத்திற்கு வர்றீங்களே? உங்க தலைவர் பா.ஜ.க உடன் கூட்டணி வெச்சிட்டாரா?” என்று விஜயகாந்த் ரசிகரை கேட்டோம்.
கோயம்பேடு கே.என். முதலாளி
கோயம்பேடு கே.என். முதலாளியின் வண்டி.
“இல்லங்க.  எங்க முதலாளி தான் எங்கள கூட்டிட்டு போறாரு. இத்தினி பேரு இருக்காங்கனு காமிக்க; இந்தியா ஃபுல்லா இருந்து ஆளுங்க வாராங்களாம்.” “கோயம்பேட்டுல் K.N கடைனு இருக்குல அதோட ஓனர் இவரு தான். அவரு பேரு உண்மையில கண்ணன் ரெட்டி. அவரு பேரதான் சுருக்கி கடைக்கு வைச்சி இருக்காரு. 4, 5 கடை வெச்சி இருக்காரு, நிறைய சொத்து, ஆந்திரா பக்கத்துலயும் சொத்து இருக்கு. இரண்டு பொண்ணுங்க.”
“நீங்க எல்லாருமே அவர்கிட்ட தான் வேலபாக்குறீங்களா?”
“நான், அவரு கடைக்கு பக்கத்து கடையில வேல பாக்குறேன். அவரு கடை ஆளுங்க, அக்கம் பக்கம் கடைல வேலை பார்க்கறவங்கன்னு எல்லாரையும் வர சொல்லிருக்காரு.”
“இன்னைக்கு கடை வேலை இல்லையா,”
“ராத்திரி 12 மணி, 1 மணிக்கு லோடு வரும் போது இறக்கிக் கொண்டு கடையில போடறதுதான் நம்ம வேலை. பகல் 11, 12 மணி வரை வேலை இருக்கும். அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டு தூங்கி ரெஸ்ட் எடுப்போம். இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிட்டோம்.”
“இன்னைக்கு இங்க வந்துட்டதால நைட்டு போய் வேல பாக்கமுடியாதுல? சம்பளம் தந்துருவாரா?”
“எல்லாருக்குமே இப்போ சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க, 200 ரூவா தாரேனு சொல்லி இருக்காரு, திரும்பி வரும் போது குவார்ட்டரும் தாரேனு சொல்லி இருக்காங்க.”
வண்டியில் ஏறும் போது நாமக்காரரின் மர்மம் புன்னகை நினைவுக்கு வந்தது. “மத்தவங்கள எல்லாம் காசு கொடுத்து கூட்டிட்டு போனா இந்த மாக்கானுக வலிய வர்ரானுவளே” என்று நினைத்திருப்பார் போல. நம் பங்குக்கு வரவேண்டிய 200 ரூபாயும், சரக்கும் அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். அதற்குத்தான் அந்த சிரிப்பா?
“இரண்டு மாசம் முன்னால இதே ‘நரேந்தர்’ வந்தப்ப ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல ஒரு கிரவுண்ட்ல பேசினாரு. இப்படித் தான் எங்கள கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு  சீக்கிரமா முடிஞ்சிட்டு. இன்னைக்கு தான் எவ்ளோ நேரம் ஆகுனு தெரியல.”
நாடே மோடி மோடி என்று ஜபிக்கும் போது நமது தொழிலாளிகளுக்கு நரேந்தர் என்ற உச்சரிப்பைத் தாண்டி ஏதும் வரவில்லை. அக்டோபர் மாதம் சென்னை வந்த மோடி விமான நிலையத்தில் இறங்கியதும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரை நிகழ்த்தினார் என்ற தினமலர் செய்தியின் மர்மமும் புரிய ஆரம்பித்தது.
செப்டம்பர் மாதம் திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பேசிய பாஜக மாநில தலைவர் பொன்னார், “இன்றைய தினமணி இதழில் உண்மையைச் சொல்லும் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளைப் போல பாஜக மாநாட்டுக்கு வரும் கூட்டம் பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் வரும் கூட்டம் அல்ல. தாங்களே கட்டணம் செலுத்தி வரும் கூட்டம்” என்று முழங்கியதை கேட்டு பிரமித்திருந்தவர்களுக்கு இடி மேல் இடியாக இறங்கும் விஷயங்கள். திமுக, அதிமுகவிலாவது, உள்ளூர் பெருந்தலைகள், காண்டிராக்டில் அடித்த பணத்தை செலவழித்து கொஞ்சம் கட்சி சார்புள்ள ஆட்களைத் திரட்டிக் கொண்டு போகிறார்கள். இங்கோ, தேசிய நீரோட்டத்திலிருந்து வந்து கொட்டும் பணத்தை, மோடி என்ற பெயரே கேட்டிராத, நரேந்தர் என்ற ஏதோ தாடிக்காரர் வருகிறார் என்று வரும் கேப்டன் கட்சி, அம்மா கட்சி இளைஞர்களுக்கு கொடுத்து திரட்டி வருகிறார்கள். பாஜக உண்மையிலேயே மாறுபட்ட கட்சிதான்.
மோடிவண்டி ஏர்போர்ட்டை கடந்து கொண்டிருந்தது. ஒரு சிறுவன் தலையை வெளியில் விட்டு விமானத்தை பார்க்க முயற்சி செய்ய அவனை அதட்டி உள்ளே அமரச்செய்தார்கள் மற்றவர்கள். விமானத்தை கண்டு குதூகலமாகியிருந்தான் அந்த சிறுவன். கிட்டத்தட்ட அனைவரும். “ஏம்பா முன்ன பின்ன இத பாத்தது இல்லயா? ” என்று ஒருவர் மற்றவர்களை நையாண்டி செய்துகொண்டிருந்தார்.
“ஒங்களுக்கெல்லாம் சொந்த ஊரு எங்க…”
“விருத்தாச்சலம் பக்கமுங்க… நெல் விவசாயம் செய்வோம். மழை பெஞ்சாத்தான் விவசாயம் நடக்கும். அது வேலைக்காவலைன்னு கூலி வேலைக்கு வந்துட்டோம். 5 வருசமா சென்னையில தான் இருக்கேன். வேலை செய்றது, தங்கறது எல்லாம் கோயம்பேடுல தான் எல்லாம். வெளியில எப்பயாச்சு தான் வரமுடியும். இத எல்லாம் பாக்க முடியும். நைட்டு மூட்ட தூக்குனா பகல்ல தூங்கிருவோம். இப்படித் தான் ஓடுது.”
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து என சுற்றுலா செல்லும் கார்ப்பரேட் பணக்காரர்களின் கொள்ளையை கொள்கையாய் கொண்ட கட்சி நடத்தும் கூட்டத்திற்கு தாங்கள் அடிமாடுகள் போல அழைத்துச் செல்லப்படுவதைக் கூட உணராமல், சுற்றுலாவின் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஐந்து ஆண்டு கோயம்பேடு வாழ்கையில் அவர்கள் உதயம் திரையரங்கையோ, மீனம்பாக்கம் விமானநிலையத்தையோ அறிந்திருக்கவில்லை. ஆனால் பச்சமுத்துவின் கல்லூரி கூட்டத்தில் பேசிய மோடி “கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை இங்கேயே ஆரம்பியுங்கள்” என்று எஸ்.ஆர்.எம் அடிமை மாணவர்களுக்கு போதித்திருக்கிறார்.
வண்டி தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் வரும் போது, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கை காட்டி நிறுத்தி, “நானும் கூட்டத்துக்குத்தான் போறேன்” சொல்லிவிட்டு ஏறிக் கொண்டார். சற்று குள்ளமான நபர், பெரிய உடம்பு, பெரிய மீசை. கையில் ஏதோ ஒரு பை வைத்திருந்தார். அமர்ந்ததும் பையை கீழே வைத்து விட்டு, சிறிது நேரத்திற்கு மூச்சு வாங்கி கொண்டே இருந்தார்.
“நீங்க எந்த ஊருலேர்ந்து சார்” என்று பேச்சுக் கொடுத்தோம்.
“சொந்த ஊரு சிவகங்கை, காஞ்சிபுரத்துக்கு ஒரு வேலையா வந்தேன். அப்படியே மாநாட்டையும் பார்த்துட்டு போகலாம்னு….”
சிவகங்கையிலிருந்து வந்திருப்பவர்கள் பந்தலில் எங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பதை போனில் யாருடனோ விசாரித்துக் கொண்டார்.
“உங்க ஊருல இருந்து எத்தன பேரு வந்திருக்காங்க சார்?”
“இதே மாதிரி நாலு அஞ்சி வண்டில வந்திருக்காங்க?”
“அப்போ சிவகங்கை தொகுதில கட்சிக்கு நிறைய செல்வாக்குன்னு சொல்லுங்க”
“அப்படில்லாம் இல்லங்க. கட்சி நிர்வாகிங்க ஆளுக்கு பத்துப் பேர கூட்டிட்டு வரணும்னு ஏற்பாடு. போக வர போக்குவரத்து வசதி, சாப்பாடு, செலவுக்குக் பணம்னு ஆளுங்க வருவாங்க. ஆனா கூட்டத்திற்கு வாரவங்க அவங்க அவங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவாங்க.”
இப்படி மற்ற கட்சி தொண்டர்களையும் அவுட்சோர்ஸ் எடுத்து பலம் காண்பிக்கும் பாஜகவின் உத்தி நாடாளும் கட்சிக்கோ, சமத்துவ மக்கள் கட்சிக்கோ கூட கிடையாது என்பதை நினைத்தால் புல்லரித்தது.
அவரிடம் “மத்தபடி பிஜேபி இந்த தடவை எப்படி வாய்ப்புங்க…” என்று கேட்டோம்.
“நல்ல வளர்ச்சிங்க. ஸ்டேட் முழுக்க பரவலா ஆதரவுஅதிகமாயிருக்குன்னு சொல்றாங்க…”
“விஜயகாந்த்தும் கூட்டணில சேர்ந்துட்டா 10-15 சீட்ல ஜெயிச்சிரலாமா?”
“10-15ஆ? ரெண்டு எடத்துல ஜெயிச்சா பெரிய்யய விஷயம். ராம்நாடு, திருப்பூரு, கோயம்புத்தூரு, ஈரோடு, கன்னியாகுமரின்னு இதுல ஏதாவது கெடைக்க வாய்ப்பு இருக்கு.”
ராம்நாடு என்று கூறியது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது சொந்த ஊர் சிவகங்கை என்பதால் பரவாயில்லை என்று விட்டுவிட்டோம்.
“ஓ.. சரி. வைகோ கூட்டத்துக்கு வருவாரா உங்களுக்கு எதாவது தெரியுமா? பேப்பருல வரமாட்டாருனு போட்டிருக்கானே?”
வைகோ - மோடி பேனர்
“அப்படினா வை.கோ வை கழட்டி விட்டுற வேண்டியதுதான்”
“வரமாட்டாருனு தான் சொல்றாங்க. பேச்சுவார்த்தை முடியலைல. விஜயகாந்த் 15 க்கு மேல கேக்குறாரு போல. மத்தவங்களும் 10 கேக்குறாங்க. விஜயகாந்துக்கு ஒவ்வொரு தொகுதிலயும் அறுவதாயிரம் ஓட்டு இருக்கும். வை.கோவுக்கு முப்பதாயிரம் ஓட்டுகிட்ட இருக்கும். இவங்க வெற்றி தோல்விய நிர்ணயிப்பாங்க. மத்தபடி இவங்க பெரிய ஆளு எல்லாம் இல்ல. இப்படி அடிச்சிக்கிட்டு தனியா நின்னா அது அந்த அம்மாவுக்கு தான் லாபம். விஜயகாந்த் காசு வாங்கிகிட்டு தனியா கூட நிக்க வாய்ப்பு இருக்கு. பாப்போம்………………………………………………”
கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்கோர், மைதானம் என்று பழைய வரலாறுகளை கிளறி, பத்திரிகைகளில் வந்த கருத்துக்களை கலந்து கட்டி அடிப்பது போல, அவர் ஒரு மினி கருத்தாளராக கலக்கினார்.
“திமுக கூட கூட்டணிக்கு வாய்ப்பு இருக்குனு சொல்றாங்களே? அப்போ இன்னும் பிரச்சனையாகும்ல.”
“அப்படினா வை.கோ வை கழட்டி விட்டுற வேண்டியதுதான்” என்றார் ஒரே போடாக. பா.ஜ.க வின் சாதாரண தொண்டன் வரை வை.கோவை வெறும் உப்புக்குச் சப்பாணியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. வெளியில் எட்டிப் பார்த்தால், ‘திராவிட’ இயக்க வாரிசுகள் வைத்திருந்த “குருட்சேத்திர போர்க்களத்தில் தேரோட்டும் கிருஷ்ணன் இடத்தில் வைகோ முகம் பொருத்தி, வில்லேந்திய அர்ஜூனனாக மோடி தேரில் உட்கார்ந்திருக்கும்” பேனர் கண்ணில் பட்டு தொலைத்தது. கிருஷ்ண பகவான் வைகோவை குறித்து ராமன்-கிருஷ்ணனை வைத்து பிழைப்பை நடத்தும் கட்சியின் தொண்டர் என்ன ஒரு எகத்தாளமாக நினைக்கிறார்?
பெருங்களத்தூர் பாலத்தில் ஏறுவதற்கு முன்பு இடது புறம் ரோட்டோரமாக கோட்டை முகப்பு போல பெரிதாக எழுப்பி, பாஜக கொடிகள், மோடி படங்கள் என்று வைத்திருந்தார்கள். கூட்டம் நடக்கும் இடம் வண்டலூர் என்றுதானே போட்டிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, வேன் அந்த வளைவின் அருகில் நின்றது.
அந்த வளைவின் கீழ் ஒரு ஷாமியானா போட்டு ஒரு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைகளின் மீது குடிநீர் பாக்கெட்டுகள், டேப்ளாய்ட் அளவில் மோடி படம் போட்ட பளபள நோட்டிசுகள் வைத்திருந்தார்கள். ஒரு தம்பி கீழே இறங்கி குடிநீர் பாக்கெட்டுகளை வாரிக் கொண்டு வந்து வேன் உள்ளே எல்லோருக்கும் வினியோகித்தான். “போற வழியில குடிக்கவும் வச்சுக்கலாம்” என்று தாராளமாக அள்ளிக் கொடுத்தான்.
தொலைக்காட்சி சோப்புத் தூள் விளம்பரத்திலிருந்து அப்போதுதான் வெளியில் வந்தவர் போல பளீர் வெள்ளையில் சட்டை, பேன்ட் போட்டிருந்த, அன்றைய குளிர்கால வெயிலிலும் முகம் சிவந்து போயிருந்த, பெரிய தொப்பையுடனான ஒருவர் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். ஏதோ சிந்தனையில் மூழ்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “நாம போட்டிருக்கிற பணத்துக்கெல்லாம் ஏதாவது தேறுமா” என்று கணக்கு போடும் சேட்டு போலவே தெரிந்தார்.
ஐ.ஜே.கே படை
அப்பாவி பெண்களே ஐ.ஜே.கே படையினர்.
பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் தாண்டி கொஞ்ச தூரத்தில் மைதானத்துக்குள் வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். அங்கிருந்து வண்டலூர் வரை நடந்து போக வேண்டியதுதான்
வண்டி நிறுத்துமிடத்தில் பத்து பத்து பெண்களாக கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். ஐ.ஜே.கே (IJK) என்று எழுதப்பட்டிருந்த சேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு, தலையில் பாரிவேந்தர், மோடி படம் போட்ட ஒரு பேப்பரை கட்டி விட்டிருந்தார்கள். “சுய உதவிக் குழுவா” என்று விசாரித்தால், “ஆமா..” என்றார்கள்.
அருகில் இதுபோல நெற்றியில் பாரிவேந்தரை பொறித்திருந்த ஒருவரை அணுகினோம்.
“இது என்ன கட்சிங்க, புதுசா இருக்கே” நெற்றி பட்டையை காண்பித்து கேட்டோம்
“இதுவா, இது ஒடையாரு (உடையார்) கச்சி, உங்களுக்குத் தெரியாதா”
“அப்படியா, அது என்ன கட்சி, கேள்விப்பட்டதே இல்லையே?”
“அதான் ஒடையாருங்க, இங்க காலேஜ்லாம் வச்சிருக்காரே. ஆர்.எஸ் காலேஜா ஏதோ…”
“ஓ, எஸ்.ஆர்.எம் காலேஜ சொல்றீங்களா? ”
“ஆமா ஆமா. அதுதான் அதுதான்”
“உங்க கட்சி எப்படீங்க, தேர்தல்ல ஜெயிச்சிருமா.”
“நீங்கல்லாந்தான் பார்த்து ஓட்டு போடணும்”
“எந்த சின்னத்துக்கு ஓட்டு போடணுங்க”
“ரெட்ட எலக்கிதான். நமக்கு எப்பவும் எலை தான்”
சரி சரி… என்றபடியே நடந்தோம். பச்சமுத்துவின் கட்சி கூட எத்தனை செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது!
ஒபாமா -மோடி
மோடியை கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது ஆலோசகர்கள்.
வழியெங்கும் விதவிதமான் பிளெக்ஸ் பேனர்கள். பேனர் வைப்பதில் ஜெயா ஆட்களுக்கு தாங்கள் குறைந்தவர்கள் இல்லை நிரூபித்திருந்தார்கள். ஆட்சியை பிடித்துவிட்டால் ஒன்றுக்க்கு பத்தாக திரும்ப எடுத்துவிடலாம் என்ற கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.
ராயபுரம் பகுதி, ரெட்டேரி பகுதி, மடிப்பாக்கம் பகுதி என்று வேன் வேனாக ஆட்கள் இறங்கி சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். பெரிய அளவுக்கு கூட்டமோ, நெரிசலோ இல்லை. ஏதோ காலை நேர வாக்கிங் போவது போல அமைதியாக போனது. யாரோ குழு பேண்ட் வாத்திய செட்டை அழைத்து வந்திருந்தது. மற்றபடி பெரிதாக ஆரவாரம் இல்லாமலேயே அந்த 4 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்து கொண்டிருந்தோம்.
இரண்டு பேர் ஒரு பேனரை பிடித்திருந்தார்கள். தொலைக்காட்சியில் மோடி பேசிக் கொண்டிருக்க, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது ஆலோசகர்கள் முகத்தில் முடிச்சுடன், கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மோடியை கலாய்ப்பதற்கு யாரோ பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த படத்தை கர்மசிரத்தையாக பிளெக்ஸ் செய்து பிடித்துக் கொண்டு போகும் இது போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை பாஜகவை யாரும் அடிச்சிக்க முடியாதுதான்.
வண்டலூர் உயிரியில் பூங்காவைக் கடக்கும் போது பலரது கவனம் அங்கு திரும்பியது. முன் வாசலில் நின்றிருந்த காவலர் ஒருவர் “இன்னைக்கு நேரம் முடிஞ்சிருச்சி. இனிமேல் இங்க போக முடியாது, போங்க போங்க” விரட்டிக் கொண்டிருந்தார். திருப்போரூர் சாலையைக் கடந்து, கிரெசன்ட் கல்லூரியைத் தாண்டி, சில நூறு மீட்டர்கள் தொலைவில் மாநாட்டு வளாகத்துக்கு வந்தே விட்டோம்.
மோடி முகமூடிகள், மோடி பற்றிய புத்தகங்கள் என்று விற்க முயன்ற ஓரிருவருக்கு எதுவும் போணியாவதாக தெரியவில்லை. கடைசியில் இலவசமாக கொடுத்தார்களோ என்னமோ தெரியவில்லை.
வாடிப்பட்டி மேளம் முழங்க நமோ பேரவை என்ற பேனருடன் சிலர் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். நல்ல மப்பில் ஆடிக்கொண்டிருந்த மோடி ரசிகர்களை சைடு கட்டி நுழைவாயிலை அடைந்தோம். கூட்ட முடிவில் பழைய பேப்பர் சேகரிக்கும் தொழிலாளிகளுக்கு ஏகப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் கிடைத்திருக்கும்.
“மோடியின் வருகையில் சென்னை குலுங்கியது, தொண்டர்கள் குவிந்தார்கள்” என்று மாலை பத்திரிகைகளின் போஸ்டர் செய்திகள் அலறியதற்கு மாறாக, அரை பங்கு மைதானம் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும்படி காலியாக கிடந்தது.
“போலீஸ்காரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வெளியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான எங்கள் தொண்டர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் காட்டாற்று வெள்ளம் போன்றவர்கள். தடுக்க நினைத்தால்…………….” என தமிழிசை சௌந்தர்ராஜன் சிவகாசி அணுகுண்டு போல பல நூறு டெசிபலில் மைக் மூலம் போலீசை மிரட்டிக்கொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தோம்..  நமோ பேரவை குத்தாட்ட குரூப்பை தவிர வெளியில் பெரிதாக கூட்டம் ஏதும் இல்லை. போலீசுகாரர்கள் தான் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை இவர்களைத்தான் பி.ஜே.பி தொண்டர்கள் என்கிறாரோ?    குஜராத் முதல் கோவை வரை காவிக்கும் காக்கிக்கும் அப்படி ஒரு ரத்த பிணைப்பு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும், அதை இப்படி வெளிப்படையாகவா தமிழிசை பேசுவார்!
இதையே அடுத்த நாள் தினமலரில், “அவர் (தமிழிசை) பேசியதும்  கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் எழுந்து நின்று, போலீசாரை நோக்கி, தொண்டர்களை உடனே அனுப்புங்கள் என ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர்” என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த மெய் கூச்செரியும் அனுபவத்தை நேரில் போயிருந்தும் நாம் அனுபவிக்க முடியவில்லையே என்று வருத்தமாயிருந்தது. ஒரு வேளை நாம் கவனிக்காத வேளையில், கவனிக்காத மூலையில் தினமலர் நிருபருக்கு மட்டும் பாஜக தொண்டர்களின் ஆவேசம் சிறப்பாக வெளிப்பட்டிருந்திருக்கலாம்.
கூட்டத்தில் மற்ற தலைவர்கள்  பேச ஆரம்பிக்கும் போது இருந்த ஆரவாரத்தை விட பச்சமுத்து பேச ஆரம்பிக்கும் போது தான் கைத்தட்டல் ஆரவாரம் அதிகமாக இருந்தது. பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் வரை நடப்பவர்கள் மத்தியிலும் சரி, மைதானத்தில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியிலும் சரி, பச்சமுத்துவின் படம் பொறித்த தலை மகுடம் அணிந்தவர்களின் குழுக்கள் கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டனர். இது மோடி கூட்டமா, பாரிவேந்தர் கூட்டமா என்கிற அளவுக்கு ஐ.ஜே.கே ‘தொண்டர்கள்’ நிறைந்திருந்தார்கள்.
ஐஜேகே படையினர்
பச்சமுத்து பெயர் கூட தெரியாத ஐஜேகே படையினர்
மைதான திரைகளில் பாரிவேந்தரின் மந்தகாசம் தவழும் பெரிய மனித முகத்தை காட்டும் போதெல்லாம், மற்ற பேச்சாளர்கள் அவரது பெயரை சொல்லும் போதெல்லாம் கைத்தட்டலும், விசிலும் பறந்தன.
பாரிவேந்தர் பேசுவார் என்று தமிழிசை அறிவித்ததும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. பாரிவேந்தர் மைக்கின் முன் சில நிமிடம் அமைதியாக நின்று ஆரவாரத்தை ரசித்து விட்டு பின்னர், தொண்டர்களை அமைதியாகுமாறு கையை காட்டியும் அடங்கவில்லை. அவர் பேச ஆரம்பிக்கும் வரை ஆரவாரம் நீடித்தது.
“மோடி வருவார் வருவார், அவர் முன்னால் பேசலாம் என்று ஆவலாய் இருந்தேன். தற்போது வேறு வழியில்லாமல் அவர் வருவதற்கு முன்பாகவே பேசுகிறேன்” என ஆரம்பித்தவர், “…. ஐ.ஜே.கே தொண்டர்களே, பீகார் மாநில ஐ.ஜே.கே நிர்வாகிகளே, மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களே!” என செல்ஃப் எடுத்து இறுதியில் “நாங்களும் தேசியக் கட்சி, நீங்களும் தேசியக் கட்சி, பிஜேபி விரும்பினால் இந்தியா முழுக்க ஐ.ஜே.கே போட்டியிடும்” என்று  பேசி முடித்தது வரை பாரிஜியின் பேச்சு முழுக்க சரவெடி. அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் ஆர்ப்பரிப்பதும் அடங்கவேயில்லை அவ்வளவு எழுச்சி. மேலும் பாரிஜி காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டமும் வாங்கிய கூலிக்கு மேல் கூவும் விதமாக தங்கள் விசுவாசத்தை கடைசி வரை காட்டினார்கள்.
பாரிஜி பேசியதை தனி பதிவாகவே எழுதலாம். அந்த அளவுக்கு வரலாறு, தத்துவம், கொள்கை, விவரங்கள் அனைத்தையும் ரவுண்டு கட்டி அடித்து, அனைவரையும் மிரள வைத்தார். அந்த சமயத்தில் பொன்னார் உள்ளிட்ட பாஜக தலைகளின் ரியாக்சனை காண்பிக்காமல் காமிராக்கள் பாரிஜியை மட்டுமே போகஸ் செய்தது நிச்சயம் ஒரு மனக்குறைதான். ஏதோ ஒரு சுவையை அனுபவிக்க முடியாமல் இழந்து விட்டது போல் இருந்தது.
மோடி அலையை பார்க்கலாம் என்று வந்தால் பாரிவேந்தர் சுனாமி நம்மை போட்டுத் தாக்கவே அங்கிருந்து கிளம்பினோம். என்னடா இது பி.ஜே.பிக்கு வந்த சோதனை என்றபடியே சில பிஜேபியினரும் வெளியேறியதை பார்க்க முடிந்தது.
அடுததநாள் ஞாயிறு காலை தினமலரை புரட்டினால் “மோடி அலை, குலுங்கியது சென்னை” “பல லட்சம் தொண்டர்கள் திரண்டார்கள்” என்று விதவிதமான செய்திகள்.  ‘ஒரு வேளை, பாஜக மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும் 10 பேருக்கு சமம்’ என்ற கணக்கில் அந்த எண்ணிக்கையை வந்தடைந்திருப்பார்களோ?
எவ்வளவு முக்கினாலும், அந்த மைதானத்தில் 50,000 பேருக்கு மேல் அடைக்க முடியாது. அதிலும் கால் வாசி மைதானம் காலியாக இருந்தது. நாம் பார்த்தது வரையில் 30,000 பேர் இருந்திருப்பார்கள். வெளியிலும் சென்னையிலிருந்து வண்டலூர் சாலையிலும், வண்டலூரிலிருந்து செங்கல்பட்டு திசையிலும் வாகன நெரிசலோ, மக்கள் நெரிசலோ இல்லை. தினமலர் கூறும் அந்த பல லட்சம் பேர் ஃபோட்டோஷாப்பின் மகத்துவமாக இருக்க சாத்தியமில்லை.
குத்தாட்டம்
மோடி படையின் குத்தாட்டம் – குவிந்த குவார்ட்டர் பாட்டில்கள்.
அனைத்து செய்தித்தாள்களும் காட்சி ஊடகங்களும் இதையே வேறு வேறு விதமாக வாந்தி எடுத்திருந்தன. இதில் தினமலர், தினமணி, விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கும், தந்தி, மாலைமலர் போன்ற ‘சூத்திர’ பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் இல்லை.
கூட்டத்திற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் பேச்சு கொடுத்திருந்தாலே அவர்கள் காசுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது தெரிந்திருக்கும். இருந்தும் இப்படி எழுதி வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் இந்த ஊடக வியாபாரிகளுக்கு. இது, தன் வாசகர்களையும் மக்களையும் ஏமாளிகளாகவும், கிள்ளுக்கீரைகளாகவும் நினைக்கும் ஊடகத் திமிர் அன்றி வேறேதுமில்லை.
டெல்லி சட்ட மன்ற தேர்தலின் போது மோடியின் கூட்டங்களில் லட்சக் கணக்கானோர் கூடியதாக சொன்னதும், “கொல்கத்தா கூட்டத்தில் 40,000 டீக்கடைக்காரர்களை அழைத்திருக்கிறோம்” என்று பெருமையாகக் கூறிக் கொண்டதும், “அந்த ஊர்ல இவ்வளவு லட்சம், இந்த ஊர்ல இவ்வளவு லட்சம்” என்று இவர்கள் பீற்றிக்கொள்ளும் கூட்டங்கள் எல்லாம் இப்படி கட்டமைக்கப்பட்ட சீட்டுக் கட்டு கோபுரங்கள்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
“இது, தானா வளந்த உடம்பு இல்ல, காசு குடுத்து வரைஞ்ச உடம்பு” என்ற வடிவேலு நகைச்சுவை இவர்களுக்கு சரியாக பொருந்தும். மோடியின் பிம்பத்தை காசுக்காக வரைந்து கொடுக்க ஆளும் வர்க்க ஊடகங்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் “கூட்டதிற்கு வந்த ‘சிலர்’ கட்சியினரால் அழைத்து வரப்பட்டவர்கள், அவர்களுக்கு மோடியின் பெயரோ அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதோ கூட தெரியவில்லை. அவர்களில் ஒருவர் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் கூட்டம்’ என்று கூறி தன்னை அழைத்து வந்திருப்பதாக தெரிவித்தார்” என்று பெட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது.
மோடியின் ஊதுகுழலான டைம்ஸ் ஆஃப் இந்தியாவே இப்படி ஒரு பெட்டிச் செய்தி வெளியிடும் அளவுக்கு சென்னை கூட்டத்தின் லட்சணம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.  ஊடகங்கள் கூறுவது போல சென்னை கூட்டத்தில் எந்த எழுச்சியும் இல்லை வெங்காயமும் இல்லை. கார்ப்பரேட் ஊடகங்களும், பார்ப்பன ஊடகங்களும், அதை படித்து விட்டு பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் பார்த்தசாரதிகளும இருக்கும் வரை இந்த ஊடகங்களுக்கும், காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வாங்கி “வெற்றி வெற்றி” என ஊர்வலம் வரும் ‘புல்லட் பாண்டி’ மோடிக்கும் எந்த குறையும் வரப்போவதில்லை.
புராணங்களில் பகவானின் விசுவரூப தரிசனத்தை புரூடா விட்டு பார்ப்பன-ஷத்திரியர்கள் தங்களது வருணாசிர ஒடுக்குமுறையை தக்கவைத்தார்கள். இப்போது ஊடகங்கள் வாயிலாக இந்துமதவெறியர்கள் தமது கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை தக்கவைக்க மோடியின் விசுவரூபத்தை இட்டுக்கட்டி எழுப்ப முயல்கிறார்கள்.
- வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: