கோபத்தில் உள்ள அண்ணன் அழகிரியை சந்தித்து, சமாதானம் பேசி, மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கும் விஷயத்தில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் சற்று தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தே.மு.தி.க., உடனான கூட்டணி உறுதியாகும் முன், அழகிரியை சந்திப்பது சரியாக இருக்காது என, நினைப்பதால், இன்று அவர் மதுரை செல்லமாட்டார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர, இருவரின் சகோதரியும், கருணாநிதியின் மகளுமான, செல்வியும், அழகிரியின் மனைவி காந்தி, மகள் கயல்விழி மற்றும் குடும்பத்தினரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கருணாநிதியும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.பயணம் ரத்து: இதனால், ஸ்டாலின் - அழகிரி இடையேயான சந்திப்பு, சென்னை, திருவான்மியூரில் உள்ள, அழகிரியின் மகள், கயல்விழியின் வீட்டில், சமீபத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. SASI & JAYA மேட்டர் இது போல தான்
ஆனால், சில பிரச்னைகள் காரணமாக, கடைசி நேரத்தில், அழகிரி தன் சென்னை பயணத்தை, ரத்து செய்து விட்டார். அதனால், அடுத்த கட்டமாக, இன்று, மதுரையில் நடைபெற உள்ள, தி.மு.க., பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஸ்டாலின் செல்வார் என்றும், அப்போது, அண்ணன் அழகிரியின் வீட்டிற்கு சென்று, வரும், 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடைபெற உள்ள, தி.மு.க., மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து, மாநாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுப்பதோடு, பழைய விஷயங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற ரீதியில், சமாதானம் பேசுவார். அப்போது, இருவரும், மனம்விட்டு பேசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முடிவாகாத நிலையில்:
அதனால், ஸ்டாலின், இன்று மதுரை செல்லலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'தே.மு.தி.க., உடனான கூட்டணி முடிவாகாத நிலையில், அழகிரியை சந்தித்து சமாதானம் பேசினால், கூட்டணி அமைப்பதில், சிக்கல் ஏற்படலாம்; வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தாழியை உடைக்க வேண்டாம்' என, ஸ்டாலினிடம், அவருக்கு நெருக்கமான, தி.மு.க., மூத்த தலைவர்கள், யோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உடன், ஸ்டாலின் இதுபற்றி, தந்தையும், தி.மு.க., தலைவருமான, கருணாநிதியிடம், ஆலோசித்துள்ளார். அவரும், 'அவர்கள் சொல்வது சரியே' என, கூறியுள்ளார். ஏனெனில், அழகிரியின் பேச்சு காரணமாகவே, தி.மு.க., உடன், கடந்த சட்டசபை தேர்தலில், தான் கூட்டணி அமைக்கவில்லை என, விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மதுரையில், இன்று நடைபெறும், தி.மு.க., பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில், ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்; அழகிரியை சந்திக்க மாட்டார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலக்கத்தில்:
விஜயகாந்த் கட்சியுடனான கூட்டணி உண்டா அல்லது இல்லையா என, ஒரு முடிவு கண்ட பின்னரே, மதுரை சென்று அண்ணனை சந்திப்பது அல்லது சென்னைக்கு அவரை வரவழைத்து சந்திப்பது போன்றவற்றை மேற்கொள்வார் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், கடைசி நேரத்தில், இந்த முடிவில், மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதேநேரத்தில், ஸ்டாலின் -அழகிரி மோதல் நிகழ்ந்த நேரத்தில், இருவருக்கும் ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி, பரபரப்பு ஏற்படுத்திய விசுவாச ஆதரவாளர்கள், அண்ணன் - தம்பி சேர்ந்தால், தங்களுக்கு, 'ஆப்பு' அடித்து விடுவார்களோ என்ற கலக்கத்தில் உள்ளனர். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக