புதன், 12 பிப்ரவரி, 2014

இந்திய சூரியசக்தி கொள்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார்


solarஇந்திய சூரியசக்தி கொள்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் செய்துள்ளது.
“ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்” கொள்கை கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி 2022-ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ல் தொடங்கிய தேசிய சோலார் மிஷன் திட்டத் தின் முதல் பகுதி 2013-ல் நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் பகுதி திட்டத்துக்கு 2013 அக்டோபரில் இந்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த இரண்டாவது திட்டத்தில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையால் இந்தியா வுக்கு பெருமளவில் சூரியசக்தி மின் சாதனங்களை ஏற்றுமதி செய்து வந்த அமெரிக்க நிறுவனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்கா சார்பில் உலக வர்த்தக அமைப்பிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2-வது முறையாக அந்த அமைப்பிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சூரிய சக்தி கொள்கை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு முரணாக உள்ளது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் நடவடிக் கைக்கு அந்த நாட்டு வர்த்தக கூட்டமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைப்பின் முக்கிய நிர்வாகி மேக் புரோமேன், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவில் சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களை தயாரிக்கும் பணியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனைக் காக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. இந்தியாவின் சூரிய மின்சக்தி கொள்கையால் அமெரிக்காவின் ஏற்றுமதி சரிந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச நடுநிலையாளர்கள், வளரும் நாடுகள் சுயசார்பு நிலையைக் கடைப்பிடிப்பதை எதிர்த்து வளர்ந்த நாடுகள் வர்த்தகப் போர் தொடுத்து வருகின்றன. அந்த அடிப்படையில்தான் உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா இப்போது புகார் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர் salasalappu.com

கருத்துகள் இல்லை: