காதலர் தினம் பற்றி 10 நிமிடம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக நேற்று (13-02-2014) பேசினேன். அது இரண்டு நிமிடங்களாக சுருக்கப்பட்டு இன்று காலை ஒளிபரப்பானது.
“காதலர் தினம் வர்த்தக தினமாக இருக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்பட்டப் பிறகுதான் காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.”
“தொழிலாளர் தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழலை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கிறது”
“காதலர் தினத்தை ஒழுக்கக்கேடு என்று சொல்கிற மத பழைமைவாதிகள் கள்ளக் காதல் கொண்டுகிற அளவிற்கு மோசமானவர்கள்” என்றேன். இது ஒளிபரப்பானது. இப்படி தெளிவாக அல்ல. குழப்பமாக.. காரணம் இடையில் நான் பேசிய பல செய்திகளை நீக்கியதால்.
நான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,
“கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”

“ஜாதி மத எதிர்ப்பு அரசியல்தான் காதலை வாழவைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதியை விட செப்டம்பர் 17 – ஏப்ரல் 14 இவைதான் காதலர்களுக்கான நாட்கள். அவை தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாட்கள். அவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவது என்பது அவர்களின் அரசியலை உயர்த்திப் பிடிப்பது. அதுதான் காதலர்களை பாதுகாக்கும்.”
இந்தப் பகுதிகள் ஒளிபரப்பாக வில்லை.
இதுபோலவே இதற்கு முன் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இடஓதுக்கிடூ பற்றிய கருத்துரையில் பார்ப்பனர்களின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு பற்றிய என்னுடைய கருத்துகள் நீக்கப்பட்டன.
நான் சொன்ன சில பொதுவான விசயங்களும், நீக்கப்பட்டு அது அவர்களின் கருத்தாக வாய்ஸ் ஓவரில் இடம் பெற்றது.
இந்து மதத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக சொன்னால்தான் கலைஞர் செய்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதைகூட விட்டுவிடுங்கள், பெரியார் – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று சொன்னால்கூடவா அவர்களின் பார்ப்பன பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்?
இதுபோன்ற பிரச்சினையின் காரணமாகத்தான், சிலர் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது வேறு காரணம் சொல்லி தவிர்த்துவிடுகிறேன். ‘இந்த முறை அப்படி நேராது’ என்றதால் நம்பினேன். நேர்ந்தது.
இந்த விசயத்தில் பகுத்தறிவு கலைஞர் டி.வியோடு ஒப்பிட்டால் நம்ம பக்திமான் கேப்டன் டி.வியை புரட்சிகர தொலைக்காட்சியாகவே அறிவிக்கலாம்.