ஊழலை ஒழிப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என்று, ராஜினாமா
செய்த டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
கொட்டும் மழையில் பேச்சுநேற்று மாலை சட்டசபை கூட்டம் முடிந்ததும், முதல்–மந்திரி கெஜ்ரிவால் மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. கொட்டும் மழையில் அங்கு திரண்டு வந்த தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசினார்.
வழக்கமாக அணியும் தொப்பியுடன் வந்திருந்த அவர், பதவி விலகல் முடிவை அறிவித்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர் கூறியதாவது–
காங்கிரஸ்–பா.ஜனதா
‘‘பதவியை ராஜினாமா செய்வது என்று, மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுத்து இருக்கிறோம். சட்டசபையை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்படி கவர்னருக்கு சிபாரிசு செய்து இருக்கிறோம். எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட இரண்டு நாட்களில் காங்கிரசும் பா.ஜனதாவும் ஒன்று சேர்ந்து எங்கள் அரசை வீழ்த்த திட்டமிட்டனர். அவர்களுடைய உண்மையான முகம் வெளுத்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை அம்பானிதான் நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சி அவருடைய சொந்த கடையை போன்றது. அவர் எப்போது விரும்பினாலும் தேவையானதை அந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம். கடந்த ஓராண்டு காலமாக நரேந்திரமோடிக்கு (பா.ஜனதா பிரதமர் வேட்பாளர்) பின்னாலும் அம்பானிதான் இருந்து வருகிறார். நாடு முழுவதிலும் விமானம், ஹெலிகாப்டர்களில் பறந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்குப் பணம் எங்கிருந்து வந்தது?
உயிர் தியாகம் செய்ய தயார்
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக மின்சார நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யவில்லை. 5 நாட்களில் அந்தப்பணியை நாங்கள் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்கள் ஊழலை ஒழிக்கவில்லை. ஷீலா தீட்சித் செய்த ஊழலுக்கு எதிராக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். இதையெல்லாம் செய்யாமல், ஆட்சி நிர்வாகத்தை மட்டும் பாருங்கள் என்று அவர்கள் கூறினார்கள். ஊழல் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது ஆட்சியாளர்களின் வேலை இல்லையா?
நான் தனி மனிதன் அல்ல. நான் உங்களில் ஒருவன் ஆட்சியில் அமருவதற்காக நான் அரசியலுக்க வரவில்லை. ஊழலை ஒழிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கள் மந்திரிகளில் சிலர் இரவு பகலாக தூங்காமல் மக்கள் பணியாற்றினார்கள். ஊழலை ஒழிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி விலக தயாராக இருக்கிறேன். கடைசியாக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதெல்லாம், ‘‘நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். எங்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுங்கள். அதன் மூலம் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட இந்த நாட்டின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்யவும் நாங்கள் தயாக இருக்கிறோம்.’’.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
அரசியலுக்கு வந்த அதிகாரி
எப்போதும் பரபரப்பாக செயல்படும் 48 வயது கெஜ்ரிவால், அரியானா மாநிலம், ஹிசாரில் கடந்த 1968–ம் ஆண்டு ஆகஸ்டு 16–ந்தேதி பிறந்தவர். ஐ.ஐ.டி. என்ஜினீயரான அவர், வருமான வரித்துறை உயர் அதிகாரியாக பணிபுரிந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி தளபதியாக பங்கேற்ற கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராக விளங்கினார்.
ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்து வந்த கெஜ்ரிவால், டெல்லியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார். இதன் மூலம் அந்த இரு கட்சிகளின் ஓட்டு வங்கியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சட்டசபை தேர்தலில் அவர் புதிதாக தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக, காங்கிரஸ் ஆதரிக்க முன்வந்ததால் ஆட்சியையும் கைப்பற்றியது.
தேர்தல் வாக்குறுதி
டெல்லியில் காங்கிரசின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதிய கெஜ்ரிவால், தேர்தலில் முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்டு வீழ்த்தினார். ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டண குறைப்பு, இலவச குடிநீர் வினியோகம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். பதவியேற்ற சில வாரங்களிலேயே டெல்லிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும்படி கோரியும், போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்யக்கோரியும் அவர் நடத்திய தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.மற்றொரு முக்கிய வாக்குறுதியான ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், சர்ச்சைக்குரிய அவருடைய 48 நாள் ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக