சனி, 11 மே, 2013

ராமதாசுக்கு ஞானியின் கடிதம்: மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை.

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு
வணக்கம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், என் மீது நீங்கள் வைத்திருந்த மதிப்பினால் என் வீடு தேடி வந்து நீங்கள் என்னுடன் ஒரே கட்டிலில் அமர்ந்து ஒரு மூத்த உறவினர் போல எந்த தயக்கமும் தடைகளும் இன்றி மூன்று மணி நேரம் உரையாடியது என் மனதில் இன்னமும் பதிந்திருக்கிறது.
விடை பெற்றுப் புறப்படும்போது காரில் ஏறியதுமே நீங்கள் தன்னிச்சையாக பாதுகாப்பு பெல்ட்டை அணிந்ததையும், உங்கள் ஓட்டுநர் முதல் உடன் வந்திருந்த இதர நண்பர்கள் வரை அனைவரும் யாரும் சொல்லாமலே அப்படிச் செய்ததையும் கண்டு நான் வியந்து பாராட்டியது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்.

சமூகத்தில் மேம்போக்கான மாற்றங்களைச் செய்யாமல், ஆழமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற  தொலை நோக்குடன் நீங்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல் கட்சி வளர்த்த நாள் வரை என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறீர்கள் என்று கோப்புகள், ஆவணங்கள் உதவியோடு அன்று எனக்கு விளக்கினீர்கள். சினிமாவை சார்ந்திராத சுயேச்சையான தொலைக்காட்சி நடத்துவது, தாய்மொழிக் கல்வி, அரசின் நிதி நிலை அறிக்கைக்கு துறை வாரியாக மாற்று யோசனை அறிக்கைகள் , பூரண மதுவிலக்கு என்ற பல கொள்கைகள் எனக்கும் உடன்பாடானவையே என்று நானும் உங்களிடம் சொன்னேன்.
அனைத்தையும் விட வட தமிழகம் முழுவதும் நீங்களும் தொல். திருமாவளவனும்  சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் வாயிலாகக் கடந்த சுமார் பத்தாண்டுகளாக ஏற்படுத்தியிருக்கும் சாதி சமரச அமைதி உணர்வு மகத்தானது என்பதை நான் உங்களுக்குச் சொன்னேன். ஏனென்றால் வன்னியர்களை நான் ஆதிக்க சாதியாகக் கருதியதில்லை. தீண்டாமை என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர வன்னியரும் பறையரும் ஒரே அடித்தள வாழ்நிலையில்தான் வட தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பதை அந்த மண்ணின் மைந்தனான நான் நேரடியாக அறிவேன்.
இன்னும் சொல்லப் போனால் இந்த இரு பிரிவினரும் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த வட்டாரத்தில் வேறு எந்த அரசியல் சக்தியும் ஆதிக்க சாதியும் தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்தவே முடியாது என்ற உண்மையையும் நாம் விவாதித்தோம்.
ஆனால் நீங்களோ, தாழ்த்தப்பட்ட சாதியினர், குறிப்பாக பறையர்,  தம் கட்சி ஆதரவுடன் சாதி மறுப்பு என்ற பெயரால், கலப்புத் திருமணம் என்ற பெயரால் காதல்நாடகங்கள் நடத்தி மிரட்டிப் பணம் பறிப்பதை எதிர்க்கவே ஓர் உயர் சாதிக் கூட்டமைப்பை ஏற்படுத்தியதாக எனக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்.
விடலைக் காதலை நானும் ஆதரிக்கவில்லை. காதல் நாடகங்களை நானும் ஆதரிக்கவில்லை. மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை. மனித நேயமும் சமத்துவமும் விரும்பும் எவரும் ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் காண மறுக்கிற முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த அட்டூழியங்கள் எல்லாம் ஏதோ ஒரு சாதியினர் மட்டும் செய்பவை அல்ல. இப்படி செய்வோர் எல்லா சாதிகளிலும் எல்லா கட்சிகளிலும் – உங்கள் கட்சி உட்பட – இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும்
நம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுதான் தீர்வே தவிர. பழியை ஒற்றை சாதி மீது மட்டும் போட்டு இதர சாதிகளை ஓரணி திரட்டும் உங்கள் முயற்சி தவறானது என்பதை உங்களிடம் சொன்னேன்.
இந்த தவறின் விளைவாக என்ன ஆயிற்று ? சாதி சங்கத்தலைவர் என்ற குறுகிய வட்டத்திலிருந்து எல்லாருக்குமான பொதுவான அரசியல் தலைவர் என்ற பிம்பத்தைப் பெறத்தொடங்கிய நீங்கள் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே போய் சேர்ந்துவிட்டீர்கள். எப்படிப்பட்ட வீழ்ச்சி இது உங்களுக்கு ! பொது மேடையிலும் தனிப் பேச்சிலும் கண்ணியமாகவும் கறாராகவும் பேசுபவர் என்ற பிம்பம் நொறுங்கி, மாமல்லபுர மேடையில் உங்கள் சகா காடுவெட்டி குருவே வெட்கப்படும் அளவுக்கல்லவா உங்கள் பேச்சு தரம் தாழ்ந்துபோயிற்று !
ஒரு கட்டாய ஓய்வை சட்டமும் அரசும் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றன. சிறைச்சாலையின் நோக்கம் தண்டிப்பதல்ல, திருத்துவது என்றே பண்பாளர்கள் எப்போதும் சொல்லி வந்துள்ளனர்.  இந்த ஓய்வு உங்களை நீங்களே திருத்திக் கொள்வதற்கான நல்வாய்ப்பாக அமையட்டும்.
திராவிடக் கட்சிகளின் ஊழல் முகத்துக்கு முன்னால் இருக்கும் முற்போக்கு சாயம் முற்றிலுமாக வெளுக்கும் வரை கூட இருந்து உங்களை வளர்த்துக் கொண்ட நீங்கள், இனி அவற்றுடன் கூட்டு இல்லை என்று அறிவித்தபின் செய்திருக்க வேண்டியது என்ன ? அவற்றை விட முற்போக்கான அமைப்புகளுடன் அல்லவா அணி சேர்ந்து தமிழகத்தில் புதிய அரசியல் பார்வை தழைக்க முயற்சித்திருக்க வேண்டும் ? நீங்களோ, திராவிடக் கட்சிகளை விட பிற்போக்கான சாதி அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் உடனடிப் பயனாக, சிறையில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.
இந்த நேரத்தில் யோசியுங்கள். ஏன் உங்கள் அரசியல் இப்படி வீணாயிற்று ? நீங்கள் அரசியலில் நுழைந்த நாட்களிலேயே என்னைப் போல மிக சிலர் உங்களுடைய ரோல் மாடலே சரியில்லை என்றே கருதினோம். உங்களுக்கு ஒரு ரோல் மாடல் கலைஞர் கருணாநிதி. மற்றவர் செல்வி ஜெயலலிதா. இரண்டாமவரை அரசியலில் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவே இயலாது. ஒரு எம்ஜிஆர் இல்லையென்றால் அவர் இல்லை. எம்ஜிஆர் போன்ற செல்வாக்குடையவர் ஆசி இல்லாமல் வரும் நீங்கள் பின்பற்றியது கருணாநிதியின் ரோல் மாடலைத்தான். அவர் ஆசி வழங்க அண்ணா இல்லையென்றாலும் அரசியலில் மேலே வந்திருக்கக்கூடிய ஆற்றல் உடையவர்.
கலைஞரிடமிருந்து எங்கும் தமிழ், சாதிய எதிர்ப்பு, சமூக நீதி என்ற கோஷங்களையெல்லாம் எடுத்துக் கொண்ட நீங்கள் அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும். அவருடைய குடும்பப் பாசம், சுயநல அரசியல், வாரிசு ஊக்குவிப்பு, ஊழல், அராஜகம் என்ற அத்தனை எதிர்மறை அம்சங்களையும் எடுத்துக் கொண்டீர்கள். அவரை இன்று வீழ்த்திய அதே அம்சங்கள் உங்களையும் வீழ்த்திவிட்டன. கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் இல்லாத ஒரு பலம் – ஒரு பெரும் சாதியின் பிரதிநிதி என்ற பலத்தை – உங்களுக்கு எதிரான பலவீனமாக இன்று ஆக்கிக் கொண்டீர்கள். வாரிசு அரசியலால் உங்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஸ்டாலின் கலைஞருக்கு உதவும் அளவு கூட அன்புமணியால் உங்களுக்கு அரசியல் பயனில்லை.அவருக்குத்தான் உங்களால் லாபம். கடைசியில் நீங்கள் காடுவெட்டி குருவைத்தானே நம்புவராக ஆகிவிட்டீர்கள் !
உங்களுடைய இன்றைய சாதி அரசியல் வரப் போகும் தேர்தலில் உங்களுக்கு துளியும் உதவப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்நியர் ஓட்டு வன்னியர்க்கில்லை என்று ஆக்கிவிட்டீர்கள். நீங்கள் தேர்தலில் ஜெயிக்காமல் போனால் நாட்டுக்கு எந்த இழப்புமில்லை. ஆனால் உங்கள் சாதி அரசியல் உங்கள் சாதியினருக்கே எதிரானது. மாமல்லபுரத்தில் நீங்கள் சாதி வெறியைத் தூண்டியதால் தலித்துகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உங்கள் சாதியினர் இருவரும் செத்தார்கள். அடித்தட்டில் இருக்கும் இரு சாதியினர் கைகளில் எழுதுகோல் ஆயுதத்தைக் கொடுக்க வேண்டிய மருத்துவர் நீங்கள். மனிதக் கறி வெட்ட, கத்தியைக் கொடுக்கும் கசாப்பு கடைக்காரராகிவிட்டீர்கள்.
சிறையில் இதையெல்லாம் பொறுமையாக சிந்தியுங்கள். நீங்கள் அறிவும் சிந்திக்கும் திறனும் உடைய 73 வயது மூத்த குடிமகன். நீங்களும் உங்களோடு சிறை புகுந்தோரும் இருக்க வேண்டிய இடம் சிறையல்ல. பல்கலைக்கழகம். வெளியே வரும்போது தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். சாதியக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஆரோக்கியமான மாற்று அரசியலை முன்வையுங்கள். உங்கள் ரோல் மாடலாக காந்தியையும் மண்டேலாவையும் அம்பேத்கரையும் எண்ணிப் பாருங்கள். காடுவெட்டி குருக்களுடன் எதிர்கால வாழ்க்கையை செலவிடுபவராக உங்களை நீங்கள், மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு முறையேனும் நினைத்துப் பார்த்திருப்பீர்களா என்று யோசியுங்கள்.
தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் நடிப்போருக்கே தமிழக மக்கள் மறுபடியும் மறுபடியும் திருந்த வாய்ப்பு தருபவர்கள். நிஜமாகவே திருத்திக் கொள்வோருக்கு ஆலயமே எழுப்புவார்கள்.
மனமாற்றத்துடன் வெளியே வருவதாக தகவல் அனுப்புங்கள். சிறை வாயிலில் தொல்.திருமாவளவனுடன் வந்து மாலை அணிவித்து உங்களை வரவேற்கக் காத்திருப்பேன். நான் மட்டுமல்ல இன்னும் பலர். மாற மறுத்துப் பிடிவாதமாக இருப்பீர்களானால், மன்னியுங்கள். மலர் வளையம் வைக்க வேண்டிய நாளில் கூட ஒருவரும் வரமாட்டோம்.
அன்புடன்
ஞாநி
(கல்கி 11.5.2013 இதழுக்காக எழுதி அனுப்பியது. அவர்களுக்கு  உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் வெளியிடவில்லை என்று நினைக்கிறேன்.)

கருத்துகள் இல்லை: