வியாழன், 9 மே, 2013

நல்ல மதிப்பெண் வாங்கியும் மருத்துவம் படிக்க முடியாதேன்னு தற்கொலை செய்துகொண்ட மாணவி

பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: