திங்கள், 6 மே, 2013

ராமதாஸ் கைது 500 பேருந்துகள்சேதம் 13 பேருந்துகள் சாம்பல்


விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13 பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இரவு நேர போக்குவரத்தில் சில மாற்றங்களை காவல்துறை செய்துள்ளதுடாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் வட மாவட்டங்கள் சிலவற்றில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


பல இடங்களில் இது வன்முறையாக மாறியுள்ளது. பல வட மாவட்டங்களில் பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கி வருகின்றனர். இதுவரை 500 பேருந்துகள் சேதமடைந்துள்ளன. 13 பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 4300 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தற்போது சென்னையிலிருந்து வட மாவட்டங்கள் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துப் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக பெருங்களத்தூர் பேருந்து நிலையம் வந்து பின்னர் பல்வேறு ஊர்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்போது நிலைமை சரியில்லை என்பதால் இரவு நேரத்தில் மதுரவாயல் புறவழிச்சாலையில் வாகனங்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதால், இரவு நேரத்தில் புற வழிச்சாலையை அரசு பேருந்துகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நிலைமை சகஜமாகும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: