திங்கள், 6 மே, 2013

பா ம க : பஸ்கள் மீது தாக்குதல் நடத்துவது நாங்கள் அல்ல? கண்றாவியை நம்பி தொலைக்கிறோம் நிறுத்துங்க சார்



பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி, அந்தப் பழியை பா.ம.க. மீது போட சதி நடந்து வருகிறது. இதில் பா.ம.க.வினர் சிக்கி விடக் கூடாது. அமைதி வழியில் தங்களது போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வன்முறைகளுக்கு பா.ம.க. மீது பழி போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் எங்கும் பேருந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.


பா.ம.க. ஒரு வன்முறை கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையில் சிலரும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இனியாவது காவல்துறையினர் நியாயமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்று பழி போட ஆட்சியாளர்களும், எதிரிகளும் திட்டமிட்டிருப்பதால், பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பா.ம.க.வினர் தொடர்ந்து அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையம் கேட்டுக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது
viruvirupu.com

கருத்துகள் இல்லை: