திங்கள், 6 மே, 2013

துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!

thulu3
பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).
இருந்தும் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை துளு சினிமா எட்டியிருக்கிறது. இம்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘செப்டம்பர் 8’ இருபத்தி நான்கு மணி நேரத்தில் மொத்தமாக தயார் செய்யப்பட்டு உலகசாதனை படைத்தது. ஆசிய திரைப்படவிழாவான ஓசியன் சினிஃபேனில் ‘சுடா’ என்கிற துளு திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ’பங்காரு பட்லர்’ என்கிற திரைப்படம் நிறைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறது.
                               
மிகச்சிறுபான்மை மொழியான தங்கள் மொழியிலும் படங்களை எடுத்து ஆத்மதிருப்தி பட்டுக்கொண்டாலும், என்னதான் விருதுகளை குவித்தாலும் மற்ற மொழிப்படங்களை மாதிரி வணிகரீதியாக காசு பார்க்க முடியவில்லையே என்று துளுக்காரர்களுக்கு நீண்டநாள் ஏக்கம் இருந்தது. 2011ல் வெளிவந்த ‘ஓரியார்டோரி அசல்’ அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது. பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒன்றரை கோடிக்கும் மேலாக வசூலித்து, துளுவில் படமெடுத்தால் துண்டைப்போட்டுக் கொண்டுதான் போகவேண்டும் என்கிற நிலையை மாற்றியமைத்திருக்கிறது. ‘துளுவின் வெற்றிகரமான முதல் சினிமா’ என்று அங்கிருக்கும் விமர்சகர்கள்(!) கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பெங்களூர், மும்பை மாதிரி பெருநகரங்களிலும், இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. விருது வாங்குவதற்கும், பெயர் பெருவதற்கும்தான் துளு சினிமா என்கிற நிலை இனியில்லை. துளுவர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், மலையாளர்கள், கொங்கணிகளும் இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்தார்கள். ஆயிரம் மாச்சரியங்கள் இருந்தாலும் நம் பங்காளிக்கு ஒரு கவுரவம் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஓரியார்டோரி அசல்’ நாடகமாக மேடையில் ஏறியபோது துளுவர்கள் எப்படிப்பட்ட பரவசத்தை அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த நாடகத்தை எழுதி இயக்கிய விஜயகுமார் கோடியால்பெய்ல் ஓவர்நைட் நட்சத்திரமாக மின்னினார். நாடகத்துக்கு கிடைத்த ஆதரவைக் காட்டிலும், அது சினிமாவாக எடுக்கப்பட்டால் பன்மடங்கு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். தயாரிப்பாளர்கள் அப்படி எண்ணவேண்டுமே?
director
இத்தனை ஆண்டுகளாக ஸ்க்ரிப்ட்டை புள்ளைத்தாய்ச்சி மாதிரி சுமந்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் வீட்டு வாசலாய் அலைந்ததுதான் மிச்சம். பணத்தைக் கொண்டு போய் கிணற்றில் போடச் சொல்கிறாயா? என்று விரட்டி அடித்தார்கள். கலைச்சேவைக்கு காசு செலவழிக்க எல்லாருக்குமா மனமிருக்கும். விஜயகுமார் சோர்ந்துவிடவில்லை. சிறுகச்சிறுக சேர்க்கும் டி.என்.எஸ்.சி. பேங்க் சிட்டுக்குருவியாய் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார். நிறைய கடன் வாங்கினார். (அவருடைய படத்தைப் பாருங்கள், டொக்கு விழுந்துப்போய் பரிதாபமாக இருக்கிறார்). ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததும், தில்லாக பூஜையும் போட்டுவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஸ்டார்ட், கட் சொல்லத் தெரியாது என்பதால் இயக்கத்தை மட்டும் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துவிட்டார்.


கதை நடப்பதாக சொல்லப்படும் கோடியால்பெய்ல் பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. ‘ரியாலிட்டி வேண்டும். எனவே நோ செட்டிங்ஸ்’ என்று அவர் சொன்னாலும், செட்டிங்ஸ் போடவும் ஆர்ட் டைரக்டருக்கு பணம் கொடுக்கவும் அவரிடம் காசு இல்லை என்பதுதான் உண்மை. படத்தின் ஹீரோ சின்னத்திரையில் ஃபேமஸான லிங்கா ஷெட்டி. ஹீரோயின் ரம்யா பர்ணா. கொடுத்த காசுக்கு மேலேயே நடிக்கத் தயாராக இருந்தார்கள். துளு நாடகத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் விஜயகுமாருக்கு கைகொடுக்க முன்வந்தார்கள். நவீன் படில், அரவிந்த் போலார், ராஜேஷ் பந்த்வால் போன்றோர் கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே நடித்தார்கள் என்று தகவல். கன்னட சினிமா ஆட்களான ரேகாதாஸ், லட்சுமிதேவி, சத்யஜித், ரேமண்ட் டிசவுசா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான குருகிரண் கவுரவ வேடத்தில் தோன்றினார்.
thulu2
துளு நாடகங்களுக்கு மறுமலர்ச்சி தந்த ‘ஓரியார்டோரி அசல்’, துளு சினிமாவுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு படமெடுத்த விஜயகுமாருக்கு, படம் வெளியானபின்பு நல்ல அறுவடை. கடன்காரர்களுக்கு என்னென்ன சாக்கு சொல்லவேண்டும் என்று திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவருக்கு, அதற்கெல்லாம் அவசியமே படாமல் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டியது. ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேலே லாபமாம். இன்னமும் தினமும் தன் கையை தானே கிள்ளிப் பார்த்து, தான் வாழ்வது கனவுலகில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் விஜயகுமார்.


படத்தின் கதை ரொம்ப சிம்பிள். வீட்டு ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குமான பிரச்சினைகள். ஒரே காம்பவுண்டில் பல வீடுகள் வசிக்கும் முறையை ‘வட்டாரம்’ என்போம் இல்லையா (திருச்சியில் ‘ஸ்டோர்’ என்பார்களாமே?), அம்மாதிரி வட்டார வீடு ஒன்றில் நடக்கும் தினப்படி சம்பவங்கள்தான் கதை. முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை. வாடகைக்கு வசிக்கும் மூன்று குடும்பங்கள். அதில் ஒரு பையன் வீட்டு ஓனரின் பெண்ணையே எப்படியோ உஷார் செய்துவிடுகிறான். சில பல குழப்படிகளுக்கு பிறகு சுபம்.
thulumovie1துளுவர்களின் ஏற்றம், தாழ்வு என்று அனைத்தையுமே மறைமுகமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அம்மொழியை பேசுபவர்கள் இன்று சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன என்னவென்று அடையாளம் காட்டுகிறது. தங்களைப் பற்றிய கண்ணாடியாக இப்படம் அமைந்திருப்பதால், வெறிகொண்டு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் துளுவர்கள். இப்படத்தை தொடர்ந்து துளுவில் மூன்று, நான்கு படங்கள் வந்துவிட்டன. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. இப்போதைய துளு படங்களின் டிரெண்ட் காமெடிதான். இந்த வெற்றி கர்நாடகாவில் பேசப்படும் மற்றைய சிறுபான்மை மொழிகளான கொடவா, பேரி போன்ற மொழிகளிலும் சினிமா எடுக்க தெம்பு கொடுத்திருக்கிறது.


சிறுகுழந்தைகள் கூட்டாஞ்சோறு விளையாடுவது மாதிரி படமெடுக்கிறார்கள். சுவைத்துப் பார்த்து, குறைகளை மறைத்து அவர்களது மனம் மலர பாராட்டலாம்.
                                     

(நன்றி : cinemobita.com)

கருத்துகள் இல்லை: