திங்கள், 6 மே, 2013

ஜாதி, மத கூட்டங்களுக்கு கெடுபிடி! போலீசார் தீவிர ஆலோசனை

பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.

தொடர்ந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய, சித்திரை விழாவிற்கும், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; வன்முறையை தூண்டும்படி பேசக் கூடாது; செல்லும் வழியில் வன்முறை கூடாது போன்றவை வலியுறுத்தப்பட்டு, அனுமதி கேட்டவர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், விழா நடத்தப்பட்ட போது, விழா ஏற்பாட்டாளர்களும், கலந்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களும் இதனை பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது. கூட்டம் துவங்கியது முதல், இரவு 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை, போலீசார், தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளனர். போலீசாரின் நிபந்தனைகளை மீற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த,அவர்கள்,போலீசாரின் வேண்டு கோளையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், எல்லை மீறிப் போனதால், இனி, எவருக்கும் தயவு காட்டக் கூடாது என்பதில், தமிழக காவல் துறை உறுதியாக உள்ளது.
இதனால், சாதாரணமாக சிறு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள், கட்சிகளுக்கு கூட நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் ‹ழல் உருவாகியுள்ளது. ஜாதி, மத சம்பந்தமான கூட்டங்கள், அது நடைபெறும் இடங்கள், அக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள், உட்பட எல்லா விஷயங்களிலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முன்னெச்சரிக்கை உத்தரவாதம் பெற்று, அனுமதி தர, வழிவகைகள் கண்டறிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரக்காணத்தில் வன்முறை நடந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும் போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுகுறித்து, அவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடந்து வரும் சம்பவங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், இது போன்று பொதுக்கூட்டம், மாநாடு நடத்துவோருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர்-dinamalar.com

கருத்துகள் இல்லை: