புதன், 8 மே, 2013

கர்நாடகாவில் காங்கிரசுக்கு கூட்டணி தேவை இல்லை அறுதி பெரும்பான்மை

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 34 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறன. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பெரிய பட்ணா தொகுதி பா.ஜ., வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாநிலத்தில் உள்ள 36 மையங்களில் நடந்து வரும் இந்த ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தற்போது மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பலத்த போட்டி:

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., எதிர்கட்சி யான காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவியது. இருப்பினும் முன்னாள் பிரதமரின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,விலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கட்சிகள் போன்றவை களத்தில இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., இம் முறை 80 இடங்களை கைப்பற்றும் என முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா உறுதியாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பின் படி காங்கிரசுக்கு செல்வாக்குஅதிகரித்துள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினரிடையே புன்னகை பூத்துள்ளது. மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை இரண்டு பிரதான கட்சிகளும் கணக்கில் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்த்தில் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தள கட்சியும் முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தள கட்சி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆச்சர்யப்படுத்திய ம.ஜ.த.,:

கடந்த சட்டசபை தேர்தலின் போது 25 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம், தற்போது 41 இடங்களில் முன்னிலை வகிப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆதரவோடு குமாரசாமி ஆட்சி செய்த போது, அந்த ஆட்சி ஊழல்கள் அற்றதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மக்கள் நினைக்கின்றனர். இதே போல், பல்வேறு நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களும் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

காங்., வேட்பாளர் வெற்றி:

புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சகுந்தலா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ., வேட்பாளர் சஞ்சீவா மதந்தூரை விட 2672 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: