தொடரும் விசனம்.... திமுக முப்பெரும் விழாவையும் புறக்கணித்தார் மு.க.அழகிரி!
சமீப காலமாக திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகள், போராட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் மு.க.அழகிரி. அவருக்கு என்ன பிரச்சினை, என்ன கோபம், என்ன கவலை, என்ன அதிருப்தி என்று தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
திமுக சார்பில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் முன்னணித் தலைவர்கள் உள்பட லட்சோபம் லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறை சென்றபோது அழகிரி மட்டும் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்தார். இதனால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் திமுகவின் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படும் முப்பெரும் விழா மற்றும் விருது விழாவையும் அழகிரி புறக்கணித்து விட்டார்.
விழுப்புரத்தில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.
மாலையில் நடந்த விழாவின்போது தமிழ் அறிஞர் அப்பாதுரைக்கு பெரியார் விருதும், முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு அண்ணா விருதும், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பாவேந்தர் விருதும், முன்னாள் எம்.பி. ஆர்.டி. சீத்தாபதிக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. கட்சித் தலைவர் கருணாநிதி விருதுகளை வழங்கினார்.
விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, சற்குணபாண்டியன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கில் திமுகவின் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மு.க.அழகிரி மட்டும் மிஸ்ஸிங்.
அழகிரி எங்கே என்று தொண்டர்களுக்குள் கேட்டுக் கொண்டனர். அவர் பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயார் தயாளு அம்மாளை பார்க்கப் போய் விட்டார் என்று தகவல் கிடைத்தது.
தனக்கு விழாவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதே அழகிரியின் அப்செட் என்று கூறப்படுகிறது. மேலும், கிரானைட் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் துரை தயாநிதிக்கு முன்ஜாமீன் கிடைக்காததாலும், அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்பதாலும் அவர் கவலையில் இருப்பதாகவும், அதனால்தான் விழாவுக்கு வரவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது.
மொத்தத்தில் அழகிரி முன்பு போல திமுக விவகாரத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பது கட்சியினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சூரியனே சோகத்தில் ஆழ்ந்தால் எப்படி, சீக்கிரம் சரியாகுங்க அழகிரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக