ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் உடனடியாக அமலாகிறது

புதுடில்லி: மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வரும் என, தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, மானிய விலையில் விற்பதால், நடப்பு நிதியாண்டில் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன், டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படா விட்டாலும், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது, சிலிண்டர் ஒன்றுக்கு, 347 ரூபாய் வரை, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், இதைத் தவிர்க்கும் வகையில், இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த கட்டுப்பாடு, எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றிய, அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்துக்கான கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வரும். மானிய விலையில் அல்லாமல், சந்தை விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை குறித்து, சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, மாதம் தோறும் அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றன.

கருத்துகள் இல்லை: